செவ்வாய், 10 ஜூன், 2014

THANGAMANI--THANGARASU---தங்கமணி-தங்கராசு

                                      தங்கமணி---தங்கராசு

                                      தங்கமணி---தங்கராசு

--------------------------------------
அது திமுகவில் இருந்து
எம்ஜியார் பிரிந்த காலம்.
பள்ளிகளுக்கு அன்று விடுமுறை
விடப்பட்டிருந்தது..
நாளை என்ன விளையாட்டு விளையாடலாம்
என்று கவலையோடு தூங்கினோம்.

 என்றும் போல அன்றும் விடிந்தது.
அன்று எங்கள் ஊருக்கு இரண்டு புதிய விருந்தாளிகள் வந்திருந்தார்கள்.
மூத்தவன் தங்கமணி11வயது.
இளையவன் தங்கராசு வயது 9…….
.
இரண்டு பேரும் கோயில் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்…
நாங்கள் தூர நின்று அந்த இரண்டு ஜீவராசிகளையும் பார்த்து கொண்டிருந்தோம்.
இந்த இரண்டு ஜீவன்களும் எங்களை விட மாறுபட்டு இருந்தார்கள்.
உதாரணத்திற்கு எங்கள் உடம்பில் இரவில் மண்ணோடு விளையாடி மண்ணில் புரண்டதால் (…கழுதைக்கும் எங்களுக்கும் சின்ன வேறுபாடு உண்டு..)உடம்பில் ஆங்காங்கு உப்பு படிந்திருந்தது .
ஆனால் இவர்களுக்கு உடம்பெல்லாம் உப்பு படிகமாகவே இருந்தது..
நாங்கள் போட்டிருக்கும் உடை அழுக்கானதாகவே இருக்கும் .
ஆனால் இவர்கள் அழுக்கை உடையாக போட்டிருந்தார்கள்..

மதுரை பாஷை  பேசினாகள்.
தலையில் எண்ணை சுவடே இல்லாமல்
முடிகள் மஞ்சள் நிறத்தில் கம்பியாய்
 நீண்டு கொண்டிருந்தது..
சீனர்கள் தலைமேல் கவிழ்த்து
வைத்திருக்கும் குடை போன்று……

எங்களை அவர்கள் வினோதமாக
பார்த்து கொண்டிருந்தார்கள்.

மதுரையில் இருந்து எங்கள் ஊருக்கு வந்து,
 கோயிலுக்கு பக்கத்தில் ஒரு குடிசையை போட்டு குடியேறி விட்டார்கள்

 யாகப்பன்………

இந்த நேரத்தில் யாகப்பனை பற்றி
 சொல்லியே ஆகவேண்டும்.
அவன் தான் எங்கள் ஊர் கதாநாயகன்.
பயம் என்பதை அரியதாவன் .
அறிவே இல்லாத மாமனிதன் ,
மிருகம்பாதி மனிதன்பாதி கலந்து செய்த கலவை..

இந்த காண்டாமிருகம் எப்பவுமே.. கல்டாபில்ட்டுடன் அலையும்..

கல்டாபில்ட்…..
இது என்னமொழின்னு இந்நாள் வரைக்கும்
 எனக்கு தெரியவில்லை.
இதை  கவன் அப்படின்னு சொல்லுவாங்க..
உண்டி வில்லுன்னு சொல்லுவாங்க.

ஒரு கவட்டையான கம்பில் ரப்பரை வெட்டி கட்டி வைத்திருப்பார்கள்….

யாகப்பனுக்கு இதுதான் ஆயுதம்.
பீமனுக்கு கதாயுதம் மாதிரி..
அர்சுனனுக்கு வில் மாதிரி.
கிருஷ்ணணுக்கு சக்கரம்மாதிரி..
யாகப்பனுக்கு கல்டாபில்ட்தான் ஆயுதம்.
 எப்பவும் இடுப்பில் தொங்கும்
இந்த ஆயுதம் பல அப்பாவி உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.

ஏகபட்ட அணில்கள் உயிரையும், கணக்கில்லாத காக்கைகளின் ஜீவன்களையும்
 அடித்து வீழ்த்தியிருக்கிறது.அதை ,
உடனே தீயில் இட்டு வாட்டி,
 இரண்டு உப்பு கல்லும் வத்தலையும் வைத்து ,
வெந்தும் வேகாமலும் சாப்பிட்டு விடுவான்..

ஆனால் ஒன்றும் அகப்படவில்லை என்றால்
அவன் கோபம் ஓனான் மீது திரும்பும்..

 முள்ளு மரத்தை தேடிச்சென்று.
ஓனானை கண்டுபிடித்து ….அட ஓந்தி…..என்று இரண்டு கெட்டவார்த்தைகளை கலந்து
பேசிவிட்டு கோபத்தால்
ஓனானுக்கு குறிவைத்து அடிப்பான்.
அந்த அப்பிரானி இவன் கல்லுக்கு
தப்பாமல் அடிபட்டு அங்கேயே ஜீவனை விடும்.

அதுமட்டும் தப்பிவிட்டது என்றால்……
  இவன் செல்லமாக வளர்க்கும் நாய் ஒன்று உண்டு .

அதை நோக்கி கவன் கல்லை நன்றாக இழுத்து ஒரே அடி………….

எஜமானை நம்பியபடி நிற்கும் நாய்….
 யாகப்பன் எதற்கு தன்னை நோக்கி கொலை வெறி
தாக்குதல் நடத்துகிறான் என்று அறியாமல் அலறி ஓடும் ..
…………………….ம்…… விடமாட்டான்………………….
மீண்டும் அதனை கல்லால் தாக்குவான்.

ஆனால் அந்த நாயை யாகப்பன் தன்னைப்போலவே சரிக்கு சரியாய் நடத்துவான்..
 இருவரும் ஓரே தட்டில் சாப்பிடுவார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் கையை அதனிடம் நீட்டுவான் ..
அது சுத்தமாக நக்கி கிளீன் பண்ணி விடும்.

இப்பேர்பட்ட யாகப்பனிடம் தங்கமணியும் தங்கராசும்
சீடர்களாய் சேர்ந்து விட்டார்கள்.
விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்ந்த
சிறுவர்களுக்கு ஏகே 47 துப்பாக்கி வழங்குவது போல் தங்கமணிக்கும் தங்கராசுவுக்கும்
தனித்தனியாக …கவல்டாபில்ட்
செய்து கொடுக்கபட்டது.

இருவரும் தங்கள் இடுப்பில் இதை
 சொறுகி கொண்டு கம்பீரமாக வலம்வந்தார்கள் .

எங்களைவிட இப்போது எங்கள் ஊரில் பிரபலமானார்கள்.

ஒரு நாள் மிக நீளமான
 துப்பாக்கியுடன் ஒருவர் யாகப்பனை தேடிக்கொண்டு வந்தார்.

பயங்கரமான மீசை .
மிகப்பெரிய தொப்பை..
நல்ல உயரம் கரகரத்த சத்தம் ..
யாகப்பன்னா யாரு.?
அவன நான் இப்பவே பார்க்கனும்..

எங்க அவன்..?

ஆஹா ஏதோ வில்லங்கம் ..

இன்னைக்கி யாகப்பன சுடப்போறாங்க..

 நாங்க அமைதியாய் நின்றோம்.

இதை மறைந்து நின்று பார்த்த தங்கமணியும் தங்கராசும் யாகப்பனிடம் சொல்ல காட்டுக்குள் சிட்டாய் பறந்தார்கள்.

யாகப்பன் வரட்டும் என்று தனது
 துப்பாக்கியை தரையில் ஊன்றியபடி அந்த முரட்டுமனிதர் ஒரு கல்லில் உட்கார்ந்து கிழக்கை நோக்கியே பார்த்துகொண்டிருந்தார்..

யாகப்பன் ஒரு மணிநேரம் கழித்து கிழக்கில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்தான்…

இரண்டு பக்கமும் தங்கமணியும் தங்கராசும் ..வேகமாக வந்து கொண்டிருந்தார்கள்

நாங்கள் ….யாகப்பன் ….யாகப்பன்…. என முணுமுணுத்தோம்..

அவர் புரிந்துகொண்டார்…
எழுந்து நின்று தனது துப்பாக்கியை தூக்கி கொண்டார்..
அவர் சுடுவதர்க்கு தயாரானது போல் தெரிந்தது.

யாகப்பன் செத்தான் என நினைத்துக் கொண்டோம்

யாகப்பன் விரைவாக நெருங்கிவந்து கொண்டிருந்தான்……
மீசைக்காரர் துப்பாக்கியை தூக்கி பிடித்தார்
.                                   .(…..நாளை சொல்கிறேன்…)

தங்கமணி---தங்கராசு (2)
-------------------------------------------

மீசைக்காரர் யாகப்பனை சுடப்போகிறார் ..,யாகப்பன் சாகப்போகிறான் ,என ஆவலுடன் எதிர் பார்த்து திகிலுடன் காத்து இருந்தோம்.

அனால் துப்பாக்கிகாரர் துப்பாக்கியை தன் தோளில் வைத்து கொண்டார்.
யாகப்பன் அவர் பக்கத்தில் போனான்.
துப்பாக்கிகாரர் யாகப்பனின் தோளில் கைபோட்டு
கொஞ்தூரம் அழைத்து சென்றார்.
பின்பு அவர் தன் சைக்கிளில் ஏறி  வேகமாக சென்று விட்டார்.

இப்போது யாகப்பனும் அவன் கூட்டாளிகளுமான தங்கமணியும் தங்கராசும் ஏதோ பேசினார்கள்..
யாகப்பன் தன் வீட்டைநோக்கி ஓடினான்.
அவன் வீடு தெருவுக்கு வட பக்கத்தில் இருக்கிறது…..

சில நிமிடங்களில் வெளியே ஓடி வந்தான். இப்போது கருப்பு கலரில் டவுசரும் MGR படம் போட்ட பனியனும் அணிந்திருந்தான்.
எங்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகமானது.
தெருவுக்கு வந்தவன் நெடுஞ்சான் கிடையாய்  கோயிலை நோக்கி விழுந்து கும்பிட்டான் .
கூடவே தங்கமணியும் தங்கராசும் மண்ணில் விழுந்து புரண்டனர்.
பின்பு மூவரும் ஊருக்கு கிழக்கு பக்கம் உள்ள குட்டையை நோக்கி ஓடினார்கள்.

இந்த நேரத்தில் அந்த கருப்பு டவுசர்….,
MGR படம் போட்ட பனியனை பற்றி இரண்டு வார்த்தைகள்
 கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்.

யாகப்பனுக்கு எதாவது சாகசம் செய்யும்நேரம் வந்தால் மட்டுமே அவன் இந்த உடை அணிவான்.அவன் கருப்பு டவுசர் MGR படம் போட்ட பனியன் மாட்டிவிட்டான் என்றால் அன்று ஏதோ விவகாரம் என்று அர்த்தம்.
எங்கள் ஊரில் உள்ள  கத்தோலிக்க கோயிலில்
வருடத்திற்கு ஒருமுறை திருவிழா வரும்

.திருவிழாவில் மிக்கேல் சம்மனசு சுருபம் வைத்து சப்பரம் தூக்குவார்கள்.

சப்பரத்துக்கு முன்னே ஆங்காங்கே சென்று வெடிவைக்க வேண்டும்.
இந்த வேலையை அறிவுள்ள எவனும் செய்யமாட்டான்.ஏனெனில் அது அவ்வளவு ஆபத்தானது;
இரண்டடி நீளமும் முக்கால் அடி அகலமும் உள்ள ஒரு வெடிக்கட்டை உண்டு.
அதில் ஒரு அடி நீளத்திற்கு மூன்று குழாய்கள் இருக்கும்…
இந்த மூன்று குழாயிலும் முதலில் வெடி மருந்தை நிரப்பி பின்
செங்கல் பொடியை உள்ளே போட்டு அதை கம்பியால் நன்றாக இருக்கமாய்  குத்தவேண்டும்…

எவ்வளவு இருக்கமாய் குத்துகிறோமோ அவ்வளவு அதிகமாய் வெடிச்சத்தம் வரும்..

ஆனால் செங்கல் தூளில் எதாவது பொடி கல் இருந்து,..கம்பி குத்தும்போது உராய்வு ஏற்பட்டு தீப்பொறி பறந்தது என்றால் மூன்று குழாய்களும் வெடித்து சிதறும்..அதோடு அதை இடித்தவனும் காலியாவான்.  இப்பேர்பட்ட அபாயகரமான வேலையை யாகப்பன் மட்டுமே அசால்டாக செய்வான்…
தங்கமணி தங்கராசு வந்த வருடம் மூவரும் மிக சந்தோசமாக இதை செய்தார்கள்’ ..

இன்னும் சொல்லப் போனால் யாகப்பன் பீடிகூட அந்த கரிமருந்து பக்கத்தில் வைத்து குடித்தான்..

…………………யாகப்பா பார்த்துடா வெடிச்சிர போகுதுடா………என்று யாராவது சொன்னால்…..போங்கவே…வெடிச்சி கிளிச்சுது……… என்றும் கூடவே இரண்டு மூன்று கெட்ட வர்த்தைகளும் சேர்ந்து வரும்..
தங்கமணியும் தங்கராசும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

ஆனால் ஒன்று இதை போன்ற ஆபத்தான வேலை செய்யும்போது அந்த கருப்பு டவுசரும் MGR படம் போட்ட பனியனும் மறக்காமல் போட்டிருப்பான்..வீட்டைவிட்டு வெளியே வரும்போது கோயிலை நெடுஞ்சான்கிடையாய் விழுந்து வணங்குவது அவன் வழக்கம்.
இப்போது யாகப்பன் ஏதோ ஆபத்தான வேலையில் இறங்கிவிட்டான் என்று நாங்கள் புரிந்து கொண்டு அவனை பின் தொடர்ந்தோம்..
.ஊருக்கு கிழக்கே ஒரு குட்டை.உண்டு…..அது மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி குளம்போல காட்சியளிக்கும்..பின் தண்ணீர் வற்றி விடும் காலத்தில், அதன் நடுவில் உள்ள மிப்பெரிய ஒரு கிணறு வெளியே தெரியும்.. .தண்ணீர் வற்றிய பின் கிணறு வேறு குட்டை வேறாக பிரிந்து விடும்.இப்போது கிணற்றில் உள்ள மீன்கள் கிணற்றிலேயும் குட்டையில் உள்ள மீன்கள் குட்டையிலும் இருக்கும்..

 சில நேரம் கிணற்றில் ,பெரிய மீன் ஆன விரால் ,விலாங்கு இவை தங்கி விடும். விரால் குஞ்சு பொரித்துவிட்டால் தன் குஞ்சுகளை தண்ணீரின் மேலே விட்டுவிட்டு அது கொஞ்சம் ஆழத்தில் நிற்கும் .அரைமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரின் மேல் மட்டத்திற்கு வந்து வாலை சுழற்றி தண்ணீரில் …டம் …என்று அடிக்கும்.அது இரவில்  நன்றாக கேட்கும்.
இந்த சத்தம் கேட்டு வீட்டால், விராலை பிடிப்பதற்கு பலரும் போட்டி போடுவார்கள்.

இன்று வந்த துப்பாக்கி காரர் இதற்காகத்தான் வந்திருக்கிறார்.அதாவது விராலை இவர் சுடவேண்டும்..
சுட்ட உடன் யாகப்பன் தண்ணீருக்குள் பாய்ந்து பிடிக்கவேண்டும்.

கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.
யாகப்பன் கினற்றில் உயரமான திண்டில்  ஏறி
நின்று கொண்டான் .

நெற்றியில் சிலுவை வரைந்து கொண்டான்.. .

நெஞ்சில் இருந்த MGR படத்தை  தொட்டுப் பார்த்து கொண்டான்.

எல்லோரும் கிணற்றையும், துப்பாக்கி காரரையும், யாகப்பனையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இருந்தனர்.
திடிரென்று  விரால் குஞ்சுகள் தண்ணீரில் மேல் மட்டத்தில் வட்டமடிக்க ஆரம்பித்தன .

துப்பாக்கி காரர் துப்பாக்கியை தூக்கி விரால் வரவும் சுடுவதற்கு தயாராய் குறிபார்க்க  ஆரம்பித்தார்…
கூட்டம் கட்டுக்கடங்காமல் கூட ஆரம்பித்தது.

முருகேசன் என்ற 5வயது சிறுவன் பின்னால் நின்று கொண்டிருந்தான்.அவனால் முன்னே வர முடியவில்லை. ஆனால் உயரத்தில் நிற்கும் யாகப்பனை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

விரால்மீன் ஒரு முறை வேகமாக வெளியே வந்து விட்டு உள்ளே போய்விட்டது.

கூட்டம் அமைதியாயிற்று.

முருகேசன் அம்மா அவனை தூரமாய் இருந்த அவளின் வீட்டில் இருந்து கொண்டு அவனை கூப்பிட்டாள்

…ஏலெ………………………………..முருகேசா………………..அங்க என்னடா கூட்டம்….


மீன் இப்போது மறுமுறை மேலே வந்தது ….

டமார்……………….. .
…………….துப்பாக்கி வெடித்தது…

யாகப்பன் தண்ணீரில் பாய்ந்தான்….

சிறுவனுக்கு… டமார் …சத்தமும் யாகப்பன்  பாய்ந்ததும்…..வேறு மாதிரியாக பட்டது

அம்மா………….. யாகப்பன சுட்டுட்டாங்க………..

சிறுவன் கத்தினான்…..

எல்லோரும் கிணற்றை பார்த்தவண்ணம் இருந்தோம்

தண்ணீருக்குள்  போன யாகப்பன் வெளியே வரவேயில்லை.
.(..நாளை சொல்கிறேன்)

தங்கமணி—தங்கராசு.—3
-----------------------------------
சிறுவன் போட்ட சத்தம் கொஞ்சம் அதிர்ச்சியான காரியம்.ஆகிவிட்டது.
உள்ளே போன யாகப்பன் வர லேட் ஆக ஆக துப்பாக்கிகாரர் முகத்தில் வியர்வை ஆறாக பெருகியது.
தூரத்தில் இருந்து ஓடி வந்தவர்கள்…..
 யாகப்பன சுட்டுட்டாங்களா..?.....என்று கூறியபடி ஓடி வந்தனர்.

இது துப்பாக்கிகாரருக்கு பெரிய ஆதிர்ச்சியாக இருந்தது.

எல்லோரும் கவலையுடன் கிணற்றை உற்று பார்த்தபடி இருந்தோம்.

திடிரென்று யாகப்பன் தண்ணீரில் இருந்து புடைத்து கொண்டு மேலே வந்தான் .

அவன் வாயில் ஒன்றரை அடி நீளமுள்ள விரால் மீன் இருந்தது.

அவன் அதை கவ்வி பிடித்தபடி நீந்தி மேல் நோக்கி வந்தான்..
துப்பாக்கிகாரர் பெரு முச்சு விட்டார்..
அவர் அவனிடம் அந்த மீனை வாங்கி கொண்டு கொஞ்சம் சில்லறையும் ஒரு துணிப்பையும் கொடுத்தார்.
யாகப்பன் வெற்றி வீரனாக நின்று கொண்டிருந்தான் .


இரண்டு தளபதிகள் போல் தங்கமணியும் தங்கராசும் யாகப்பனுக்கு வலது பக்கம் ஒருவனும்  இடது பக்கம் ஒருவனுமாக நின்று கொண்டிருந்தார்கள் .

யாகப்பன் தண்ணீரை துடைக்கும் சாக்கில் MGR படத்தை ஒரு முறை துடைத்து கொண்டான்.கூட்டம் மெல்ல மெல்ல கலைந்தது.
எங்களுக்கு தப்பாக்கிகாரர் கொடுத்த சாக்கு பையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரொம்ப ஆவலாய் இருந்தது.

மெல்ல தங்கமணியிடம் இதை தெரிவித்தோம் .அவன் அந்த சாக்கு பையை திறந்து காண்பித்தான் .அதில் அதிமுக கொடிகள் நிறைய இருந்தது.அந்த கொடிகள் தாளில் அச்சிடபட்டு சின்ன மூங்கில் குச்சியில் ஒட்ட பட்டிருந்தது.

இந்த கொடியினால் நாளை நடக்கபோகும் இன்னல்களை அறியாமல் தங்கமணியும் தங்கராசும் அதை சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர்.

மறுநாள் எங்களுக்கு பள்ளி விடுமுறை நாள்.

நாங்கள் யாவரும் அந்த கத்தோலிக்க ஆலயத்தின் முன்னால் கூடினோம்.

அப்போது பம்பர விளையாட்டு களை கட்டியிருந்த நேரம்.

நாங்கள் தூங்கும்போது கூட பம்பரமும் கயிறும் எங்கள் டவுசர் பையில் பத்திரமாக இருக்கும்…
எங்களின் விளையாட்டு மைதானம் ஊருக்கு மேற்கே இருக்கும் பெருமாள் கோயில் அருகே உள்ள மைதானம்.
அது சரியில்லை எனின் இந்த கத்தோலிக்க கோயிலின் முன் பாகம்தான்…..

பம்பரம் விளையாடுவதற்கு மிகப்பெரிய இடம் தேவையில்லை .ஆகவே தெருவிலே விளையாட ஆரம்பித்தோம்..

நானும் அந்தோணிராஜ்..ம் நண்பர்கள். ஆகவே இன்றய விளையாட்டில் செல்வராஜின் பம்பரத்தை ரெண்டாக பிளந்து விடவேண்டும் என முடிவு செய்து அதற்காக காலையிலே எழுந்து எங்கள் பம்பரத்தின் ஆணியை குளத்தாங் கரையில் உள்ள  சிமென்ட் தரையில் நன்றாக தீட்டி ரெடியாக்கி விட்டோம்.
காலை எட்டுமணி வாக்கில் தங்கமணி வீட்டுபக்கம் வந்தோம்.

அங்கே தங்கமணி குடிசை ஜெகஜோதியாக அதிமுக கொடியினால் கட்டபட்டு மின்னி கொண்டிருந்தது.

தங்கமணி அப்பா திமுக வை ஆதரிப்பவர் .
தங்கமணி யாகப்பனுடன சேர்ந்து MGR ரசிகன் ஆகிவிட்டான்.ஆனால் தங்கராசு இன்னும் மாறாமல்
தன் தகப்பன் கட்சியான திமுகவை ஆதரித்தான்.
இது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது..

நாங்கள் பம்பர விளையாட்டை ஆரம்பித்து சிறிது நேரத்தில் தங்கராசு குடிசையில் இருந்து தூங்கி விழித்து வெளியே வந்தான் .

வந்தவன் நேராக யாகப்பன் வீட்டுக்கு போனான்.அங்கே யாகப்பனும் இல்லை.தன் அண்ணண் தங்கமணியும் இல்லை ..

ஆகவே யாகப்பனும் தங்கமணியும் தன்னை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார்கள் என்று புரிந்து கொண்டு எரிச்சலுடன் திரும்பி வந்தான்.

வந்தவன் கண்களில்  தன் குடிசையில் முழுவதும் அதிமுக கொடி பறப்பதை எரிச்சலுடன் பார்த்தபடி நின்றான் .அவனின் முக மாற்றத்தை நொடியில் நாங்கள் புரிந்து கொண்டு விளையாட்டை நிறுத்தினோம்.

எல்லோருமே அந்த குடிசையையும் அவனையும் பார்த்தபடி இருந்தோம்.

நாங்கள் கவனிப்பதை ,கவனித்த தங்கராசு தான் எதாவது செய்ய வேண்டுமே என்று யோசனை செய்தபடி இருந்தான்.
முடிவாக குடிசைக்குள் சென்று தன்னுடைய கவன் வாரை எடுத்துகொண்டு வெளியே வந்தான் ..
முதலில் குடிசைக்கு மேல் ஏறி கொடிகள் ஒவ்வென்றாக பிய்த்து எறிய ஆரம்பித்தான்..நாங்கள் கைதட்டி ஆரவாரம்பண்ணி அவனை உற்சாக படுத்தினோம்.

சிறிது நேரத்தில் மொத்த கொடியும் பிடுங்கி எறியபட்டது.
இப்போது அந்த குடிசையின் அருகே நின்ற பூவரசு மரம் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டது
.மரத்தின் கிளைகளில் ஆங்காங்கே கொடிகள் கட்டப்பட்டிருந்தது.
மிகவும் உச்சியில்….உச்சாணி கொப்பிலும் ஒரு கொடி கெம்பீரமாக பறந்து கொண்டிருந்தது..

தங்கராசு  தங்கமணியைப்போல் மரம் ஏருவதில் வல்லவன் அல்ல .கொஞ்சம் முயற்சித்து பார்த்தான்.. மரம் வழுக்கி விடவே இறங்கி விட்டான்..

இனி அடுத்த கட்டம் என்ன.

தன் ஆயுதமான கவுட்டா பில்டை  எடுத்து குறிவைத்து முதலில் மரத்தில் பக்கத்தில் இருந்த ஒருகொடியை  ஒரே அடியில் பிய்த்து எறிந்தான்.

நாங்கள் அதற்கு போட்டஆரவார கூச்சல் தங்கராசை அதிக உற்சாக படுத்தியது.

அரை மணிநேர போராட்டத்தில் அனைத்து கொடிகளும் அடித்து கிளிக்கபட்டது.
உச்சாணி கொப்பில் இருக்கும் ஒரு கொடி மட்டும் தப்பி தவறி பறந்துகொண்டிருந்தது.

இந்த கொடியை அடித்து கிழித்தால்தான் தான் முழுவெற்றி அடையமுடியும் என்பதை தங்கராசு உணர்ந்தான் ..அனால் அந்த கொடியை அடித்து கிழிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு. அதை கிழிப்பதற்கு நல்ல கற்கள் தேவை.
ஆகவே அருமையான உருண்டையான கற்களை பொறுக்க சென்று விட்டான்..

எங்களுக்கு பரம சந்தோசம் . கொடியை காணாத தங்கமணி, வந்த உடன் தங்கராசை அடித்து நொறுக்குவான்.
அதை கண் குளிர பார்க்கவேண்டும்.
அதுவே பரமானந்தம் என்பது எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

தங்கமணி தங்கராசை அடிப்பதை தடுப்பதற்கு அவன் அப்பாவோ அம்மாவோ யாருமே அங்கு இருக்க போவதில்லை.
தங்கமணி தானே அடிப்பதை நிறுத்தினால்தான் உண்டு.ஆகவே தங்கராசு நொறுங்கி போவது உறுதி.

அனால் எங்கள் சந்தோசத்திற்கு குறுக்காக அந்த ஒரே ஒரு கொடி பறந்து கொண்டிருந்தது.எரிச்சலை அளித்தது..

அதையும் பிய்த்து எறிந்து விட்டால்.தங்கராசை காப்பாற்ற கடவுளால் கூட முடியாது…

இப்படி நினைத்துகொண்டிருக்கும்போதே தங்கராசு அடுத்தகட்ட தாக்குதலுக்கு ரெடியாகிவிட்டான்.

பல முனைகளிலும் இருந்து அந்த கொடியை குறிப்பார்த்து  அடித்தான்…

சுமார் ஐம்பது முறை முயற்ச்சித்தும் கொடி அசையாமல் பறந்தது கொண்டிருந்தது.

தங்கராசு மிகவும் சோர்வாகி விட்டான் .நாங்கள் மீண்டும் உற்சாக படுத்தினோம்..

கடைசியாக ஒருகல் சரியாக கொடியை தாக்கியது .கொடி பல துண்டுகளாக பிய்ந்து காற்றில் பறந்தது.

நாங்கள் விசில் அடித்து அவனுக்கு பாராட்டை தெரிவித்தோம்.

சபாஷ் மகனே …..இனி உன்னையாரும் காப்பாற்ற முடியாது. நீ சாகப்போவது உறுதியாகிவிட்டது..

அனால் தங்கமணி வரும்வரை நாங்கள் அங்கேயே இருக்க வேண்டுமே..

எங்கள் அடுத்தகட்டப்பணி..

தங்கமணிக்கு கோபம் வருமாறு இதை அவனுக்கு எடுத்து கூறவேண்டும்.

அவன் கோபத்தின் உச்சம் வரும் வரை எதாவது சொல்ல வேண்டுமே..

………………..சரி காத்திருக்கத்தான் வேண்டும். 

அதுவரை எங்கள் பம்பர விளையாட்டை தொடர்வது என முடிவு செய்தோம்.

………………………………..செல்வராஜ் வழக்கம்போல் தோற்றான் .

எல்லாரும் அவரவர் பம்பரத்தை வைத்து அவன் பம்பரத்தை குத்தி பிளப்பதற்கு ஆயத்தம் ஆனோம்.
 தங்கராசு …..கொடியை அடித்து கிழித்த களைப்பில் குடிசைக்குள் போய் மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.

செல்வராஜின் பம்பரம் முதல் குத்து வாங்கும்போது……………..
………………………….. தங்கமணி வாராண்டா…………… என்று யாரோ கத்தினான்………………………

ஆபத்தை உணராத தங்கராசு நிம்மதியாய் தூங்கிகொண்டிருந்தான்……………..

நாங்கள் பம்பரத்தில் குத்துவதை நிறுத்தி விட்டு கிழக்கே எட்டிப்பார்த்தோம்….
 அங்கே தங்கமணியும்………… யாகப்பனும்………….. அவர்கள் பக்கத்தில் வேட்டைநாயும் ……………

.வேகமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

                                                  (…..நாளை சொல்கிறேன்…)

தங்கமணி---- தங்கராசு—4
---------------------------------------
எங்களின் விளையாட்டு நிறுத்த பட்டது.
விளையாட்டை விட விறு விறுப்பானது இங்கு நடக்கபோகிறது.

அதை கண்டு களிப்பதற்காக எங்களை தயார் செய்தோம்.

யாகப்பனும் தங்கமணியும் நெருங்கிவிட்டார்கள்.
யாகப்பன் தனது வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.
தங்கமணி தன் குடிசையை நோக்கி வந்தான்…
.நாங்கள் வரிசையாக அவனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தோம்…
அவன் எங்கள் கண்களில் உள்ள பரபரப்பை புரிந்து கொண்டான் .
….ஆனால் என்ன நடந்தது என தெரியாமல் எங்களையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்..
நாங்கள் அவனையும் ,மரத்தில் உச்சியையும், மாறி மாறி பார்த்தவாறு இருந்தோம்….

தங்கமணி திடிரென்று மரத்தின் உச்சியை பார்த்தான்.

அவன் அழகாக கட்டி பறக்கவிட்ட கொடியை காணவில்லை..

 .அதற்கு பதிலாக ஒரு முஞ்சில் குச்சி மட்டும் வானத்தை பார்த்தபடி மொட்டையாய் நின்று கொண்டிருந்தது …

அவனுக்கு பகிர் என்றது குடிசையின் கூரையை பார்த்தான்.
அங்கு
ஒரு கொடி கூட இல்லை…

கருத்த அவன் முகம் சிவக்க ஆரம்பித்தது…
தங்கமணி எங்களை பார்த்தான்.

அந்தோனி ராஜ் மெதுவாக அவனிடம்....
…………..உன்தம்பி தங்கராசு தான்பா… அவ்வளவையும் பிச்சி எறிஞ்சிட்டு போய் தூங்க போயிட்டான்…..

அவன் சொல்லி வாய் மூடவும்…  நாங்கள் மொத்தமாக நக்கலாக சிரிக்கவும்.சரியாய் இருந்தது…

ஒரே வாக்கியத்தில் தங்கமணிக்கு செய்தி தர பட்டு விட்டது.

இனி அவனுக்கு கோபத்தை ஏற்றுவது எப்படி..?…..எங்களின் தொடர்ந்த நக்கலான சிரிப்பு அவனை கொதிப்படைய செய்து விட்டது….

தங்கராசு தூங்குகிறான் ..ஆகவே அவன் குடிசைக்குள்தான் இருக்கிறான்…

தங்கமணி வேகமாக  குடிசைக்கு உள்ளே சென்றான்.

தங்கராசு நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தான்.

போன வேகத்தில் பக்கத்தில் கிழே கிடந்த பனம் மட்டையை எடுத்து தங்கராசை அடித்து துவைக்க ஆரம்பித்தான்.

இந்த காட்டுத்தனமான தாக்குதல் தங்கராசை நிலை குலைய வைத்தது.

….தான் தாக்கபடுகிறோம் என்பதை நினைவுக்கு கொண்டுவரவே தங்கராசுவுக்கு சில நிமிடங்கள் பிடித்தது..
அடியை வாங்கி கொண்டு …அழுது…..கத்தி… கதறி.. ஒரு வழியாக எழுந்து நின்று விட்டான்.. அடித்து கை சலித்து போனதால்
தங்கமணி அடிப்பதை கொஞ்சம் தளர்த்தினான்…

இந்த குறுகிய இடைவெளியை தங்கராசு பயன்படுத்தி கொண்டான்.

தங்கமணியின் நெஞ்சுகுழியின் மத்திய பகுதியை நோக்கி குறிவைத்து கைகளை மடக்கி ஒரே குத்து…..

தங்கமணி அம்மா என்று..கத்த கூட முடியவில்லை..மல்லாக்க விழுந்தான்..விழுந்தவன் மூர்ச்சையானான்…..

தங்கமணி  அசைவற்று கிடந்தான்….

தங்கராசுவுக்கு என்னசெய்வது என்று புரியவில்லை.

.நாங்கள் உள்ளே ஓடிப்போய் பார்த்தோம்.

தங்கராசுவுக்கு முச்சு வந்ததாக எங்களுக்கு தெரியவில்லை….

……..தங்கமணியை கொண்ணுட்டான் டோ……..கத்தி கொண்டு வெளியேஓடினோம்….

எங்கள் கூச்சலை கேட்டு யாகப்பன் வீட்டைவிட்டு வெளியே வந்தான்….

வெளியே வந்த யாகப்பன் குடிசைக்குள் ஓடிவந்து தங்கமணியின் மூக்கில் கைவைத்து பார்த்தான்….

வெளியே  தண்ணீர் குடம் ஒன்று இருந்தது.அதை தூக்கி தங்கமணியின் தலையில் கவிழ்த்து பிடித்தான்.குடத்தின் வாய் சிறியது ,ஆகவே தண்ணீர் வேகமாக வராமல் குழாயில் வருவது போல் குபுக் குபுக் கென்று வந்துகொண்டே இருந்தது.

தலையில் கவிழ்க்கபட்ட குடத்தின் தண்ணீர் தங்கமணியை மூச்சு முட்டவைத்தது…

அவன் பதறி, துடித்த படி விழித்து கொண்டான்.விழித்தவன் அழ ஆரம்பித்தான்..தங்கராசும் அழுதான்.இருவரின் அழுகையும் யாகப்பனுக்கு மகா எரிச்சலை உண்டுபண்ணியது…

இரண்டு பேருடைய செம்பட்டை தலை முடியையும் கொத்தாக பிடித்து கொண்டு வெளியே இழுத்துகொண்டு வந்தான்.

தர தரவென்று இரண்டுபேரையும் இழுத்து கொண்’டு தெருவுக்கு வந்து சேர்ந்தான்…

..தெருவில் இருவரையும் வீசினான்..மண்ணில் புரண்ட இருவரும் எழுந்து நின்றனர்; …………
…………………………………………….வாங்கல …என்று சொல்லிவிட்டு……
யாகப்பன் தன் வீட்டைநோக்கி நடந்தான்.

இருவரும் அவன் பின்னே அழுதபடி சென்றனர்..

யாகப்பன் வீட்டிற்குள் சென்ற இருவரும் சில நிமிடங்களில் வெளியே வந்தனர்.

கையிலே சுடபட்ட அணீல் துண்டங்கள் இருந்தது.

கடித்து சுவைத்தபடி,தெருவில் வந்து நின்றனர்..
.யாகப்பனும் வெளியே வந்தான்..

யாகப்பன்,தங்கமணி,தங்கராசு.வேட்டைநாய்.ஆகிய நால்வரும் கிழக்கு திசையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார்கள்…..

பூவரசு மரத்தின் உச்சியில் அந்த கொடியின் கம்பு மட்டும் வானத்தை வெறித்தபடி பல மாதம் மொட்டையாய் இருந்தது
                                        (முற்றும்..)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக