திங்கள், 16 ஜூன், 2014

கள்ளிப்பழம்

                       கள்ளிப்பழம்
                       ----------------------
அதிகாலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்துவிட்டது


..இன்றைக்கி  கொடி ஏற்றணும்
(..சுதந்திரதினம்..)
டீச்சர் வருவாங்க ..
சீக்கிரமே வந்திடுவேண்ணு சொன்னாங்க.

எத்தனை மணிக்குண்ணு சொல்லவில்லை

ஊருக்கு மத்தியில் பள்ளிக்கூடம்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அதில் இருந்தது.

ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுப்பது டீச்சர்……(பெண்.)

முன்றாம் வகுப்புக்கு பாடம் எடுப்பது ஸார்..(ஆண்..)…
இவர் ஒன்றாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் டீச்சரின் கணவர்..,

நான்காம் வகுப்புக்கும் ஐந்தாம் வகுப்புக்கும் பாடம் எடுப்பது டீச்சர்.இவர்தான் பள்ளி தலைமை ஆசிரியை…

இவர் பாளையங்கோட்டையில் இருந்து வருவார்.
பிராமண குலத்தை சேர்ந்தவர்.
சிவந்த நிறம் எடுப்பான தோற்றம்.
ஐந்தாம் வகுப்பு டீச்சருக்கென்று ஊரில் தனி மரியாதை.உண்டு

.பள்ளி வேலை நாட்களில் நாங்கள் காலையில் பஸ் ஸ்டாப்பில் காத்திருப்போம்.

டீச்சர் பஸ்ஸில் இருந்து இறங்கிய உடன் ஓடிப்போய் அவர்கள் வைத்திருக்கும் கூடையை வாங்கி கொள்வோம்.
பின் டீச்சரின் முன்னும் பின்னும் கம்பீரமாக நடந்து வருவோம்.
மாலையில் பள்ளி முடிந்தவுடன் இதே போல் டீச்சருடன் கூடப்போய் அவர்களை பஸ்ஸில்  ஏற்றி அனுப்பி விட்டுதான்  வருவோம்.

அந்த டீச்சர் தினமும் பாடம் நடத்துவதை விட….. அடி பின்னி எடுத்துப்பதில்தான் அதிக அக்கறை காட்டுவார்கள் ,

.. கம்புகள் உடைந்து சிதறும்.

கம்புகள் உடைந்த உடன் அடுத்தநாள்(…எங்களை..) அடிப்பதற்கு கம்பை தயார்செய்து கொடுப்பதை எங்கள் கடமையாய் நினைத்திருந்தோம்.
இது எங்களுக்கு மிக முக்கியமான வேலை..

இந்த வேலை பெருமாள் வரும்வரைதான் இருந்தது.

பெருமாள் புதிதாய் வந்து பள்ளியில் சேர்ந்தான்.

.அவன் தகப்பனார் பனை ஏறும் தொழில் செய்பவர்.

இவன் அவரிடம் சொல்லி ஸ்பெசலாக வடலி பனையின் மட்டையில் ஓரமாக கிளித்து (அதை கருக்கு என்று சொல்வார்கள்..)அருமையாக ஒரு மட்டையை கொண்டு வந்து கொடுத்துவிட்டான்.
கைக்கு அடக்கமான அந்த மட்டையுடன் டீச்சர் தினமும் உத்திர தாண்டவம் ஆடினார்.
என்னதான் அடித்தாலும் அது ஜம்மென்று பலநாள் இருந்தது.
எங்கள் முதுகு கிளிபட்டதே தவிர அதற்கு எந்த சேதாரமும் இல்லை

ஒரு நாள் காலையில் எங்களுக்கு மாபெரும் அதிர்ச்சி.

அடிப்பதற்கு பயன் படும்  மட்டை இரண்டாக ஒடிந்து கிடந்தது.

மனதிற்குள் ….அப்பாடா…. என்றிருந்தாலும் வெளியே மிகவும் வருத்தபட்டோம்…(…நடித்தோம்..)
அன்று டீச்சர் பஸ்ஸை விட்டு இறங்கிய உடன் ஓடிந்த மட்டையை பற்றி மிகவும் கவலையுடன் அவர்களுக்கு தெரிவித்தோம்..

டீச்சர் ஒன்றும் சொல்ல வில்லை.
பேசாமல் வந்தார்கள்.
பள்ளிக்கூடம் ஆரம்பமாகியது.
பெருமாளைத்தேடினோம்.
பெருமாள் அன்று வரவில்லை .நிம்மதி..
இன்று அவன்  லீவு போல என நினைத்து சந்தோபட்டோம்.

எங்கள் சந்தோசத்தில் திடீரென்று மண் விழுந்தது .

பெருமாள் வந்துவிட்டான்..
சும்மா வரவில்லை.
கையில் விதவிதமாக ஐந்தாறு மட்டையுடன் வந்தான்.
டீச்சர் பலத்த புன்னகையுடன் அவனை வரவேற்றார்கள்…
நாங்களும் சந்தோசமுடன் அவனை பாராட்டினோம்.
அந்த மட்டைகள் பதம் பார்க்க போவது எங்கள் முதுகைத்தான்.

அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஆனாலும் ஏன்தான் அப்படி நடித்தோமோ தெரியவில்லை…
இதில் அந்தோணிராஜ் மட்டும்  மிக அமைதியாய் இருந்தான்.

ஏனென்றால் தினமும் தவறாமல் டீச்சரிடம் அடிவாங்குவது அவன்தான்.
அவன் முகத்தில் இருந்தது பயமா,.?.கவலையா..?எரிச்சலா ?,தெரியவில்லை,.

.ஆனால் முகம் கருத்து இருந்தது.

காலை முதல் மாலை வரை ஒரே டீச்சரிடம் பாடம் பயிலுவது என்பது மிகவும் சிரமமான காரியம்.
அதிலும் டீச்சருக்கு மூட் அவுட்டான காலங்களில்.. காலை முதல் மாலை வரை அடி வாங்கி எங்களுக்கு மூச்சு திணறும்….
இதில் அடி வாங்குவதில் முன்னணியில் இருக்கும் அந்தோனிராஜ்ஜை நினைத்து பாருங்கள்..

இப்படித்தான் நாட்கள் கழிந்தது….(..சரி கதைக்கு வருவோம்..)

இன்று சுதந்திர தினம் கொடிஏற்றவேண்டும்..
அதில் எங்களுக்கென்ற வேலை என்பது ஒன்றே ஒன்றுதான்.

பள்ளி மைதானத்தை பெண் பிள்ளைகள் சுத்தம் செய்துவிடுவார்கள்.

அடுத்து தேசிய கொடிக்குள் வைத்துகட்ட பூக்களை தயார் செய்ய வேண்டும்.

அவ்வளவே…..

(ஐம்பது பைசா கொடுத்து பூக்கள் வாங்க அப்போது எங்களிடம் வசதியில்லை..)

ஆறு மணிக்கே பள்ளி மைதானத்திற்கு வந்து விட்டேன்.

மைதானத்தை அப்போதுதான் சுத்தம் செய்ய மாணவிகள் ஆரம்பித்து இருந்தார்கள்.

பையன்களும் வர ஆரம்பித்தார்கள்.

பூக்களை எவ்வாறு சேகரம் பண்ணுவது என்று விவாதிக்க ஆரம்பித்தோம்.

வாய்க்கால் கரை ஓரம் இருக்கும் அரளிச்செடியின் பூக்களை பறித்து வரலாம் என முடிவு செய்யபட்டது..
உடனே நாங்கள் மொத்தமாக வாய்க்கால் கரைநோக்கி பயணப்பட்டோம்..

அங்கே சென்று பார்த்தால் மிகப்பெறிய அதிர்ச்சி. செடிகளில் ஒரு பூகூட இல்லை.
எல்லாம் பூ பண்டாரத்தால் பறிக்கபட்டு இருந்தது…

இனி அடுத்து என்ன செய்வது;.
அரளிப்பூக்கள் நிறைய இருப்பது அடுத்தாற்போல் மாமரத்தடி வாய்காலில்தான்.
மாமரம் அதிகமாக அங்கே இருந்த காரணமாகத் தான் அதற்கு மாமரத்தடி வாய்கால் என்று பெயர்

சரி அங்கே போகலாம் என நினைத்து நடந்தோம்.
.வாய்கால் கரை ஓரமாக மாமரத்தடி வாய்க்காலை நோக்கி சென்றோம்
.கிட்டதட்ட நெருங்கி விட்டோம்.

அங்கே பார்த்தால் மாமரத்தை சுற்றி ஏகபட்ட கூட்டம் .
போலீஸ்காரர்கள் வேறு நின்று கொண்டிருந்தார்கள்.

.நாங்கள் உடனே கிட்ட போய் பார்க்க ஓட்டமாக ஓடினோம்.

பயங்கரம் .

அங்கே மா மரத்தில் ஒருவன் கழுத்தில் கயிறு கட்டபட்டு, மரத்தில் தொங்கவிட பட்ட நிலையில் இருந்தான்.
அவன் கட்டையாய் ..(குள்ளமாய்..)இருந்தான்…
நாக்கு வாய் வழியாக  துறுத்தி கொண்டிருந்தது.கண்கள் பிதுங்கியபடி பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
அவன் கால்களுக்குகிழே அரளிப்பூக்கள் ஏராளமாயிருந்தது.
அந்த கூட்டத்தில் உள்ளே புகுந்து ..கட்டயன்..(…செத்தவனுக்கு நாங்கள் வைத்த பெயர்..)…கால்களுக்கு கீழே உள்ளபூக்களை பறிப்பதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை….
.மெதுவாக எல்லோரும் பின் வாங்கினோம்.

இப்போது பூக்களுக்கு என்னசெய்வது..நேரம் ஆகிகொண்டே இருந்தது

அப்போது ஜெகனாதன் ஒரு ஐடியா சொன்னான்..ஆகா அதுவும் சரிதான் என எல்லோருக்கும் பட்டது.

அதாவது …
இப்போது பூவரசு பூக்களை மட்டும்தான் நம்மால் சேகரிக்க முடியும்…அதைவைத்து கட்டுவதில் என்ன தவறு..?
.ஏன் அதுவும் பூ தானே.?…என்றான்…..

இது நல்ல யோசனையாகத்தான் எங்களுக்கு பட்டது….ஆகவே பூவரசு பூக்களை பறித்து தேவை பட்டால் எதாவது காட்டுப்பூவையும் சேர்த்து வைத்து கொடியில் கட்டுவது என்று முடீவு செய்தோம்.பிரச்சனைக்கு முடிவு வநது விட்டதை நினைத்து சந்தோசப் பட்டோம்.

இந்த முடிவால்…
 ஜெகநாதனின் முதுகு டீச்சரின் மட்டையடியால் கிழிபடப் போவது பற்றி அப்போது யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை…(..தொடரும்..)

எல்லோரும் வரிசையாக நின்றோம்.
தமிழ்த்தாய் வாழ்த்து ,கொடிப்பாடல் பாடபட்டது.
பின்பு கொடியேற்றும் நிகழ்ச்சி.

முன்றாம் வகுப்பு ஸார் தான்..கொடியேற்றினார்.
கொடி கயிற்றை அவர் இழுக்க இழுக்க கொடி மெதுவாக மேலே ஏறியது.

கொடி உச்சியை சென்றடைந்தது.

எல்லோரும் அண்ணாந்து மேலே பார்த்து கொண்டிருந்தோம்..

மேலே சென்ற கொடியை, கயிற்றை இழுத்து ,அதன் கட்டில் இருந்து  கொடியை விடுவிக்கவேண்டும்.

அந்த முடிச்சை அவிழ்பதற்கு ஸார் …கொடிகயிற்றை சுண்டி இழுத்தார்.
கயிற்றின் முடிச்சு அவிழ்கபடவில்லை. மீண்டும் சுண்டி இழுத்தார்.கயிறு விடுபட்டது.கொடி காற்றில்பறக்க ஆரம்பித்து.

கொடிக்குள் இருந்த பூக்கள் தரையை நோக்கி வர ஆரம்பித்தது.

நாங்கள் ஆவலுடன் கைதட்ட ஆரம்பித்தோம்.
பூக்கள் கொஞ்சமாகவும் இலை தழைகள் அதிகமாகவும் வைத்து கட்டபட்டதால்.பச்சை கலரில் மேலிருந்து இலைகளாய் விழுவது போலிருந்தது..

பூக்களையேயே காணவில்லையே…? என்ற கேள்வி குறியுடன் வானத்தை பார்த்து கொண்டிருந்த ஸார் மூக்கில் நச்சென்று ஒரு கல்மோதியது..

பூவை எதிர்பார்த்து இருந்தவருக்கு இந்த கல் தாக்குதல் பேரிடியாக இருந்தது.

அதற்குள் இரண்டு பூவரசு மொட்டுக்கள் மேலும் அவரை தாக்கியது.

தொடர் தாக்குதலால் நிலை குலைந்த ஸாரை பார்த்து மாணவர்கள் சிரித்து விட்டனர்.

ஸார் காலுக்கு கிழே பார்த்தால் துண்டு துண்டாக கிழிக்கபட்ட பூவரசு இலைகள்
.மஞ்சள் கலரில் பூவரசு பூக்கள்.மேலும் காட்டு பூக்களான தும்பை துளசி.. கையில் அகபட்ட எல்லாவற்றையும் கொடிக்குள் வைத்து கட்டி இருக்கிறார்கள்..
மொத்தத்தில் அங்கே ஆடு தழைகள் தின்ற இடம் போலிருந்தது ..

சதிகாரான் யாரே ஒரு பொடி கல் ஒன்றையும் சேர்த்து வைத்து விட்டான்.
ஒருவேளை இது யதார்த்தமாகவும் இருக்கலாம்.
பூக்களை அள்ளி ஒருவன் கொடுக்க ஜெகநாதன்தான் கொடியோடு கட்டினான். ஆனால்   இந்த பூவரசு மொட்டுக்கள்  இவ்வளவு வேகமக தாக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை.

ஜெகநாதனுக்கு  உடம்பெல்லாம் நடுங்கியது..
எல்லோருக்கும் மிட்டாய் வழங்க பட்டது .மிட்டாயை வாங்கி விட்டு வீட்டுக்கு போய் விடுவோம்.
ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை ..

 .ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பரைக்கு வரவும் என அறிவிப்பு கொடுக்கபட்டது.

எங்களுக்கு வாயில் போட்ட மிட்டாயை ருசிக்க மனம் வரவில்லை.

அந்தோனி ராஜ் மட்டும் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
அவனுக்கு மட்டை அடியெல்லாம் சாதாரண விஷயம் .
அதிலும் இன்று அடிவாங்க போவது யாரோ தானே .அவன் இதை கண்டு கொள்ளவே இல்லை.

வகுப்பறையில் வந்து அமர்ந்தோம்.
டீச்சர் கொஞ்சம் பிந்தி வந்தார்கள் …
வந்தவுடன்…. ஒரே ஒரு கேள்வி கேட்கபட்டது……

கொடிக்குள் பூக்களை வைத்து கட்டியது யார்.?இதற்கு ஒரே பதில் ஜெகநாதன்தான்.


ஜெகநாதன் மெதுவாக முன்னே சென்றான்.

கண்களில் மிரட்சி இருந்தது.
முன்னே சென்ற ஜெகநாதனை டீச்சரின் அக்கினி கண்கள் கொடுரமாய் பார்த்தன.

அவ்வளவுதான்.பெருமாளின் ஸ்பெஷல் மட்டை ஜெகநாதனை நார் நாராய் கிழித்து போட்டது.
அடியின் வேகம் தங்க முடியாமல் ஜெகநாதன் எங்கள் பக்கமாய் ஒதுங்குவான்.

கிரைண்டருக்குள் மாவை மத்திய பகுதிக்கு தள்ளி விடுமே ஒரு தடுப்பு அதுபோல்.நாங்கள் ஜெகநாதனை டீச்சரின் கை பக்கத்தில் தள்ளி விட்டோம்.

டீச்சரின் கைகள் ஒருவாறாக அடித்து ஓய்ந்தது.

ஜெகநாதன் அழுகின்ற எல்லையெல்லம் தாண்டி விட்டான்…

.கண்ணீரே வராமல்  விக்கல், அழுகை,…இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாக ஏதோ ஒரு சத்தம் மட்டும் அவனிடம் இருந்து வந்து கொண்டே…இருந்தது..

நாங்கள் அமைதியாக இருந்தோம்.
அப்போது மூன்றாம் வகுப்பில இருந்து ஒரு மாணவன் வந்தான்.

வணக்கம் டீச்சர்…...என்றான்.

டீச்சர்.. என்ன…?.வென்றார்..

கொடிக்குள்ள பூவச்சு கட்டின பையன ஸார் கூப்பிடுதாங்க..என்றான்.

ஜெகநாதனின் கண்கள் நிலை குத்தியது.

ஜெகநாதன் தனக்கு இன்னும் கெட்ட நேரம் முடியவில்லை என்று நினைத்த நேரத்தில்.அடிக்கிற கையே அதாவது அடித்த கையே அவனை காப்பாற்றியது.

ஸாரை சமாதான படுத்த டீச்சரே நேரடியாக சென்றார்கள்.
ஜெகநாதன் காப்பாற்ற பட்டான்..
அடிபட்ட வேதனையில் அழுத அதே கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது.
.டீச்சரை நன்றியோடு பார்த்தது.

அடுத்த நாள்

நான் பள்ளிகூடத்திற்கு வந்தவுடனேயே  எனக்கு பயங்கரமான ….ஸாக் நியூஸ்…

பேச்சியம்மாவை வாய்க்காலுக்கு குளிக்கபோன இடத்தில் கட்டையன் பிடித்து கொண்டானாம்.

அதாவது பேச்சியம்மாவுக்கு பேய்பிடித்துவிட்டது.
நான் தனபாலிடம் இதைபற்றி கேட்டேன்.

அவன் நிறுத்தி நிதானமாக சொன்னான்..

அவன் சொல்வதில் எதுபொய் எது உண்மை என்று கண்டுபிடிப்பது கடினம்.ஆனாலும்  அவன் பேச்சு கேட்பதற்கு சூவரஸ்யமாக இருக்கும்..

பேச்சியம்மாள் வீட்டில் ஒரு எருமை மாடு இருக்கிறது .
அதை அதிகாலை ஐந்து மணிக்கு வாய்க்காலில் கொண்டு போய் குளிப்பாட்டி விட்டு தானும் குளித்துவிட்டு வருவாள்.
அன்றும் அதிகாலையில் அவளும் அவள் தங்கை ஜானகியும் வாய்க்காலுக்கு சென்றிருக்கிறார்கள்.

அவள் மாடு குளிப்பாட்டும் இடம் கட்டையன் தூக்குபோட்டு செத்த இடத்திற்கு எதிர் புறம்.
இருட்டு கருக்கலில் மாட்டோடு தண்ணீரில் இறங்கி இருக்கிறாள்.

வாய்க்காலில் இறங்கிய மாடு மிரண்டு தண்ணீருக்கு வெளியே பாய்ந்து ஓடிவந்திருக்கிறது.
மாட்டை அடித்து தண்ணீருக்குள் இறக்க பேச்சியம்மாள் முயற்சி செய்திருக்கிறாள்.

மாடு வேகமாக கரைக்கு வந்து விட்டது.

தண்ணீருக்குள் நிற்கும் பேச்சியம்மாவின் காலை யாரோ இழுப்பது போல் உணர்ந்து தண்ணீருக்குள் உற்று பார்த்திருக்கிறாள்.

அங்கே கட்டையன் தண்ணீருக்குள் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு பேச்சியம்மாவின் காலை பிடித்து இழுத்து கொண்டிருந்திருக்கிறான்…

அலறியடித்தபடி ஊரை நோக்கி ஓடி வந்தவள் .பயங்கரமாய் சத்தமிட்டபடி தலையை விரித்து போட்டு கொண்டு அம்மன்கோயில் முன்னே விழுந்து புரண்டிருக்கிறாள்.

பின்பு கோயில் பக்கத்தில் இருக்கும் மாப்பிள்ளை கல்லை அலேக்காக தூக்கி வீசி விட்டாளாம்..

இப்போது தனபால் கதையை நிறுத்தினான்.

என்னால் இந்த இடத்தை நம்ப முடியவில்லை..

மாப்பிள்ளை கல்….
.அல்லது இளவட்டம் கல்.
.மைனர் கல்..
இப்படி பலபெயர் உள்ள அந்த கல்லை வாலிபர்களே தூக்க சிரமபடுவார்கள் இவள் எப்படி தூக்கமுடியும்….?
நான் அவனை சந்தேகத்துடன் பார்த்தேன்.

அவன் புரிந்து கொண்டான்….பேசாமல் எழுந்து முன்னே சென்றான்.

நான் கூடவே சென்றேன்…இளவட்டம் கல் இருக்கும் இடத்திற்கு வந்தோம்.

அந்த கல் இருந்த இடத்தைவிட்டு ஆறு அடிக்கு அந்தபக்கம் கிடந்தது.

இதை யாராவது உருட்டி போட்டிருப்பார்களா..?அல்லது தூக்கி போட்டார்களா..? கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைபற்றி இவனிடம்கேட்டால் இதற்கும் எதாவது கதை சொல்வான்.

வேண்டாம் என்று விட்டுவிட்டேன்

பேச்சியம்மா என்னோடு ஐந்தாம் வகுப்பு மானவி.

அவளை முதல் வகுப்பில் அவள் தகப்பன் சேர்க்கும் போது அவளுக்கு வயது ஒன்பது.

மிகவும் பிந்தி சேர்த்ததினாலோ என்னவோ அவள்தான் எங்கள் வகுப்பில் பெரிய மாணவி..

டீச்சரின் உயரம் இருப்பாள்… .

தாவனி போட்டிருப்பாள்.
நல்ல கருப்பு நிறம்
.சுத்தமாக உடை உடுத்தியிருப்பாள்.
நிளமான கால்களும் அழகான முடியும் கொண்டவள்..

பேச்சியம்மாள் சாதாரனமாக தான் இருப்பாள்.ஆனால் கவனித்து பாத்தால் நிச்சயமாக அவள் அழகிதான்.

.ஊரில் உள்ள எல்லா வாலிப பையன்களும் அவளை விரும்பினார்கள் .ஆனால் அவளிடம் எவனும் நெருங்கியதில்லை..
காரணம் அவள் தகப்பன் வேலு.

நெடுநெடுவென உயரமும்..இடுப்பில் தொங்கும் நீண்ட அருவாளுடன் தான் எப்போதும் காட்சி தருவான்.
மிகவும் சத்தமாக சிரிப்பான்..அவனை பார்த்தாலே குடல் நடுங்கும்.

ஆகவே  பேச்சியம்மாவுக்கு அவள் தகப்பனின் தோற்றமே மிப்பெரிய காவல்.

ஆனாலும் பின் நாட்களில் அவள் ஒருவனை காதலித்தாள்.சுவையான அந்த காதலை பற்றி வேறு நாட்களில் சொல்கிறேன்.

இப்பேர்பட்ட பேச்சியம்மாவுக்கு பேய்பிடித்திருப்பது எங்களுக்கு பயத்தை கொடுத்தது.

அந்த கட்டையன் தொங்கின மாமரத்தின் காய்கள்தான் அந்த வட்டாரத்திலே மிக சுவையானது.

பல நாட்கள் நாராயணண் எனக்கு அந்த மாமரத்தின் மாங்காய்களை இரவோடு இரவாக பறித்து வைத்து கொண்டு காலையில் பள்ளியில் வைத்து எனக்கு தருவான்.

கட்டையன் துடியாக இருப்பதை பேச்சியம்மாவின் மூலம் தெரிந்து கொண்ட மக்கள் பல மாதங்கள் அந்த பக்கமே தலைவைத்து கூட படுக்கவில்லை.

நாங்கள் பள்ளி மதியம் முடிந்தவுடன் இடைவேளையில் பேச்சியம்மாவை பார்த்து வர கிளம்பினோம்…

 நான். அந்தோனிராஜ். பாண்டி….நாராயணண்…..தனபால்…

ஊருக்கு மத்தியில்தான்  பேச்சியம்மாவின் வீடு.

சின்ன ஓடுபோட்ட வீடு.
ஓலையால் அடைக்கபட்ட வளைவு
சின்ன கதவு ஒன்றால் சாத்தப்பட்டிருந்தது.

எனக்கு பயமாகத்தான் இருந்தது.
நான் நடுவாக நின்று கொண்டேன்.
கதவை திறந்து உள்ளே சென்றோம் அங்கே பேச்சியம்மாவை அவள் தாய் உட்காரவைத்து பிடித்திருந்தாள் .

பேச்சியம்மா வாந்தி எடுப்பதற்காக ஓங்கரித்து கொண்டிருந்தாள்.

தலை முடி முகத்துக்கு முன்பாக விழுந்து கிடந்தது.

அந்த ஒமட்டலின் நடுவிலும் அவள் எங்களை தலை முடியின் இடைவெளிவழியாக பார்த்தாள்.
கருப்பு முடிகளின் இடையில் அவள் கண்கள் மிகப்பெரிதாக மின்னியது.

நான் கவனித்தேன்…

இது போச்சியம்மாவின் முகம் அல்ல .

ஆணிண் முகம்போலிருந்தது.

ஆம் ……அந்த கட்டையனின் முகச்சாடை தெரிந்தது.

நாங்கள் அசையாமல அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம்.

அவள் திடீரென்று தன் தாயை உதறி விட்டு எழுந்து நின்றாள்…
ஏற்கனவே அவள் உயரமானவள் .இன்று மிக உயரமாக தெரிந்தாள்.

பக்கத்தில் இருக்கும் பெரிய பித்தளை செம்பை எடுத்து எங்களை நோக்கி வீசியடித்தாள்.. 

நாங்கள் குனிந்து கொண்டோம்.

பராக்கு பார்த்துகொண்டிருந்த பாண்டியின் முன்மண்டையில் செம்பு நச்செனறு மோதியது.
பாண்டி பின்பக்கமாக விழுந்தான்.
நாங்கள் அவனை மிதித்து தாண்டி தெருவை நோக்கி ஓடினோம்.

பாண்டி மல்லாக்க விழுந்து கிடந்தான்.
பேச்சியம்மாள் அவனை நோக்கி வேகமாகவந்து கொண்டீருந்தாள்.
..    

பேச்சியம்மாள் மிகவேகமாக பாய்ந்து வந்தாள்.
பாண்டிஅலறினான்.
அவள் பாண்டியை தாண்டி தெருவுக்கு வந்து விட்டாள்.
அப்போதுதான் எங்களுக்கு தெரிந்தது அவள் குறி வைத்தது பாண்டியை அல்ல எங்களில் யாரோ ஒருவனுக்கு என்று.
நாங்கள் சிட்டாக பறந்து விட்டோம்.
எப்படியோ பாண்டியும் வந்தான்.அவள் பாண்டியை ஒன்றும் செய்யவில்லையாம்.எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.பாண்டி தப்பித்து விட்டதில் எங்களுக்கு கொஞ்சம் மன வருத்தம்தான்.எங்கள் கூட்டத்தில் யார் அடிபட்டாலும் மிதிபட்டாலும் மற்றவர்களுக்கு அது அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது.
பல முறை சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வோம்.

நாட்களும் மாதங்களும் விரைவாக மறைந்தது.ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியது.

ஆறாம்வகுப்புக்கு பாளையங்கோட்டைக்கு தான் போகவேண்டும்.
இனி இவர்களோடு சினேகம் காணாமல் போய்விடும்.
சிலர்தான் உயர் நிலை படிப்புக்கு போவார்கள் .மற்றவர்கள் எதாவது தொழில் கற்றுக்கொள்ள கெல்ப்பராக சென்று விடுவார்கள்.
அப்படியே மேல்படிப்பு படித்தாலும் எட்டாம்வகுப்பு தாண்டுவது அபூர்வம்.
என்னோடு படித்த பலர் இப்படித்தான் பாதியிலே விட்டுவிட்டார்கள்.

பாண்டி ஓன்பதாவது வரை எப்படியோ படித்தான். ஓன்பதாவது வகுப்பில் இரண்டுமுறை பெயில் ஆனான்.ஆனாலும் மனதை தேற்றி கொண்டு மூன்றாம் வருடம் முயற்சித்தான்.ஆனால் விதி வேறுவிதமாக சதிசெய்தது.

அந்தவருடம் பாடதிட்டம் மாறி புதிய பாடதிட்டம் வந்து விட்டது.

புதிய புத்தகங்களை ஆவலுடன் பார்த்த பாண்டி அப்போதே முடிவுசெய்தான் இந்த புத்தகங்களை படித்து பாஸ் பண்ணுவது கனவிலும் நடக்காத காரியம்.ஆகவே ஏற்கனவே இருந்த நோட்டு புத்தகங்களை பழைய கடையில் போட்டு விட்டு நிம்மதியாக ஏதோ தொழில் பார்க்க சென்றுவிட்டான்.


சரி நம்கதைக்கு வருவோம்.

நாங்கள் பிரியப்போகிறோம் என்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

சண்டை போட்ட மாணவர்கள் அனைவரும் சமாதானமாக சேர்ந்து விட்டார்கள்.

நான் நாராயணணுக்கு எதாவது பரிசு கொடுக்க நினைத்தேன். அது நான் ஆசையாக வைத்திருக்கும் ஒரு சாக்லேட் பெட்டி.

 நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் தகப்பனார் சில சாக்லெட்டுடன் அதை எனக்கு தந்தார்.

தகரத்தால் செய்யபட்ட பாக்ஸில் மேல் புறம் ஒரு அழகிய படம் பதிக்கபட்டிருந்தது.

ஒரு அழகிய சாலை.அதில் இரண்டு பக்கத்திலும் பெரிய மரங்கள்.

அதில் அழகிய பூக்களும் விதவிதமான பழங்களும்  பூத்தும் காய்த்தும் தொங்கும்..

அந்த அழகிய சாலையில் ஒரு மாட்டுவண்டி பயணிக்கும்..அந்த மாட்டுவண்டியில் ஓர் ஆணும் பெண்ணும் இருப்பார்கள்.
எனக்குஇந்த பெட்டியின் படத்தை பார்க்கும் போதெல்லாம் அந்த படத்தில் இருப்பது நானாகவே தோன்றும்.

என் வண்டி பயங்கரமான காட்டிற்குள் செல்லும்.

அங்கே பழங்களை பறித்து சாப்பிடுவோம்.முகம் தெரியாத அந்த பெண் என்னோடு இருப்பாள்.
பெரிய மரக்கிளைகளில் நாங்கள் இரவை கழிப்போம்.விடியும் வரை திகிலாக இருக்கும்….
விடிந்தபின் அருவியில் குழிப்போம். நதியில் நீந்துவோம்.இப்படியே எவ்வளவு நேரம் கனவு காணுவேன் என்று சொல்ல முடியாது.

அந்த கனவு பெட்டியை நாராயணனுக்கு நான் கொடுக்க நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு..
ஒருமுறை நான் அதிக காய்ச்சலினால் ஒருவாரம் பள்ளிக்கு செல்லவில்லை..நாராயணன் என்னை பார்க்க என் வீட்டிற்கு வந்திருந்தான்.
என் அருகில் இருந்த அந்த அழகிய பெட்டியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அதை அதிகமாக விரும்புகிறான் என தெரிந்து கொண்டேன்.

அகவே அந்த பெட்டியை பரிசாக அவனுக்கு கொடுக்க நினைத்தேன்.

நாராயணன் அதிகமாக பேசமாட்டான்..பேச ஆரம்பித்தால் அதில் முடிவு இருக்கும்.

என்மீது அதிக பாசம்வைத்திருந்தான்.
கட்டையன் தொங்கிய மாமரத்தின் மாவடுக்களை நிறையவே எனக்கு தந்திருக்கிறான்..
அன்று பள்ளிக்கு சீக்கிரமாக சென்றுவிட்டேன்.
பள்ளிக்கு எதிர்புறம்உள்ள பிள்ளையார்கோயில் சிமென்ட் திண்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
முதலில் செல்லத்துரை வந்தான்.
அவன் நாராயணண் வீட்டிற்கு எதிர் வீட்டுக்காரன்.
அவன் நாராயணனின் தோழனும் கூட.என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

சிறிது நேரத்தில் நாராயணனும் வந்து விட்டான்.

நான் என் புத்தக பைக்குள் வைத்திருந்த சாக்லெட் பாக்ஸை எடுத்து நாராயணனிடம் கொடுத்தேன்.
உனக்குதான் என்றேன். நாராயணன் அதிர்ச்சியில் பேசாமுடியாமல் இருந்தான்.

செல்லத்துரை நாராயணனை பார்த்தவாறு அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்பதில் ஆவலாய் இருந்தான்.

நாராயணன் அதை …மிக..மிக பத்திரமாக …தன் பைக்குள் வைத்து கொண்டான்.

தன் டவுசர் பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து என்னிடம் நீட்டினான்.

அது மஞ்சணத்தி பழம்.

மஞ்சணத்தி காயை பறித்து மண்ணுக்குள்  புதைத்து வைத்து விடுவார்கள்.முன்று நாட்கள் கழித்து தேண்டி பார்த்தால் காய் பழுத்து கருப்பாக இருக்கும் .புளிப்பான ஒரு சுவை.இது உடலுக்கு நண்மையா தீமையா என்று தெரியாது.ஆனால் கிராமத்தில் இதை சாப்பிடுவார்கள்.நான் சாப்பிட்டேன்..புளித்து கொண்டிருந்தது.

நாராயணன் என்னை பார்த்தவாறே இருந்தான்.

அது எதாவது கேளு என்பது போலிருந்தது.

நான் நாராயணனை பார்த்து ….நாராயணா..எனக்கு ஒன்று வேண்டும் என்றேன்……என்னது..கேளு என்றான்…நான் யோசித்து விட்டு ..கள்ளிப்பழம்..என்றேன்..

பக்கத்தில இருந்த செல்லத்துரை திடுக்கிட்டான்.ஏனேன்றால் கள்ளிச்செடி அதிகமாக இருப்பது கட்டயன் மாமரத்தின் பக்கத்தில்தான்….

நாராயணன் அலட்டாமல் நாளைக்கி தருகிறேன் என்றான்.

செல்லத்துரையால் பொறுக்கமுடியவில்லை..

நாராயணா நீ சாகப்போற…

கட்டயன்பேய் புடிச்ச பேச்சியம்மாள் இன்னும் பள்ளிகூடத்துக்கு வரல ஒருவருஷம் ஆச்சு அத மறந்திட்டியா….? என்றான்.

நாராயணன் கேட்டான் ….அந்த பக்கம்போனா கட்டயன் என்ன கொன்னுடுவானா..?

நிச்சயமாடா..வேண்டாம் நாராயணா….

நாராயணன் தன்பையை தூக்கி தோழில் போட்டு கொண்டு பள்ளி கூடத்தை நோக்கி சென்றான்.

கொஞ்ச தூரம் போனவன் திரும்பி பார்த்தான்..

நாளைக்கி சாயந்திரம் கள்ளிப்பழமும் கட்டயன் மாமரத்து மாங்காயும் தாரேன் என்று சொல்லிவிட்டு பள்ளிகூடத்திற்குள் சென்றுவிட்டான்.

செல்லத்துரை முகம் கருத்துவிட்டது..கண்கள் கலங்கிவிட்டது.

அவனை பொறுத்தவரை நாராயணன் சாகப்போகிறான்…

;நாளையோடு பள்ளி முடிவடைகிறது.

நாராயணனிடம் கள்ளிப்பழம் கேட்டது தவறா ..?..என பட்டது.

நானும் வகுப்புக்கு சென்றேன்.

நாராயணன்.. நான் கொடுத்த சாக்லெட் பாக்ஸை எடுத்து வைத்து பார்த்து கொண்டிருந்தான்.
எனக்கு நாராயணனை பார்க்க பாவமாயிருந்தது..

               


  துவக்க பள்ளிக் கூடத்தில் எங்கள் வாழ்க்கை இன்று முடிவுக்கு வரப்போகிறது…
அன்று எல்லா மாணவர்களும் வந்திருந்தார்கள்.

பேச்சியம்மாள் வரவேயில்லை.
அவள் வேறு ஊருக்கு போய்விட்டதாக சொன்னார்கள்.

தனபாலிடம் கேட்டால் தெரியும்,

ஆனால் நான் கேட்கவில்லை.அவன் நிறைய பொய் சொல்லுவான்.

எனக்கென்னவோ பேச்சியம்மாள் அன்று குறிவைத்து எறிந்தது தனபாலைத்தான் என்று நினைக்கிறேன்.

டீச்சர் அன்று கோபப் படவேயில்லை.ஏனோ டீச்சர் அன்றுஎங்கள் கண்களுக்கு  ரொம்ப அழகாய் தெரிந்தார்கள்.
பரிட்சை முடிந்து விட்டது.

படிப்பதற்கு ஒன்றும் இல்லை.

அந்தோணி ராஜ் சிலேட்டில் ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தான்.

பெண் பிள்ளகைள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துகொண்டே இருந்தார்கள்.

நாராயணன் அமைதியாக இருந்தான்.
 
செல்லத்துரை ஏதோ தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தான்.

பாண்டி பெஞ்சை முன்னும் பின்னும் தேய்த்து கொண்டிருந்தான்.

முடிவாக மாலை 4.15க்கு மணி அடித்துவிட்டார்கள் .

எனக்கு இதயம் கனத்தது.

இனி இங்கே நான் எந்த காலத்திலும் வரப்போவதில்லை..
அந்த அறையை சுற்றிலும் பார்த்தேன் .

எண்ணை பிசினாய் இருந்த சுவருகூட அன்று என் கண்களுக்கு அழகாய் தெரிந்தது.

மாணவர்கள் இடித்துகொண்டு வெளியே ஓடினார்கள் .

நான் கடைசியாக வந்தேன் எனக்க பின்னால் மேரி வந்து கொண்டிருந்தாள்.

என் பையை பிடித்து இழுப்பது போல் இருந்தது.
திரும்பி பார்த்தேன் .

மேரி ஒரு பேனாவை எனக்கு தந்தாள்.
தங்கமுலாம் பூசபட்ட மூடியுடைய அந்த பேனா மிக அழகாக இருந்தது.
தேங்ஸ் என்றேன்.சிரித்துகொண்டு போய் விட்டாள்.

ஆறாம்வகுப்பு போகும்போது அந்த பேனா என் சட்டை பையில் அழகாக இருந்தது.
மேரியை அதன்பின் நான் பார்க்கவேயில்லை.

வெளியே வந்தேன்.

பிள்ளையார் கோயில் சிமென்ட் திண்ணையில் நாராயணனும் செல்லத்துரையும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

நான்போய் அவர்களிடம் சேர்ந்து கொண்டேன்

நாராயணன்.தன் புத்தக பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து தந்தான்.

அதை பிரித்து பார்த்தேன்.ஆதில் இரண்டு மாங்காய் மூன்று கள்ளிப்பழம்.கொஞ்சம் மஞ்சணத்தி பழமும்.இருந்தது.

கள்ளிப் பழத்தை உடனே கடித்து தின்னவேண்டும் என ஆவல் வந்தது .

அதில்மேல்பக்கமாக இருக்கும் முட்களை நீக்கி சுத்தமாக நாராயணன் வைத்திருந்தான்.

நான் வேகமாக அதை கடிக்க வாய்பக்கத்தில் கொண்டுபோனேன்.

செல்லத்துரை என் கையை பிடித்து கொண்டான்.

தொண்டமுள்ள எடுக்காம தின்னா செத்திடுவே…..!....நான் திடுக்கிட்டேன்..

ஒரு பழத்திற்குள் இப்படி ஒரு அபாயமா..?..

.நாராயணன் என் கையில் இருக்கும் பழத்தை வாங்கி தன டவுசர் பைக்குள் இருந்த சின்ன கத்தியை எடுத்தான்.

மெதுவாக பழத்தை இரண்டாக வெட்டி பழத்தின் அடிப்பாகத்தில் வட்டமாக இருக்கும் தொண்டைமுள்ளை கத்தியின் நூனியால் எடுத்து வெளியே போட்டான்.

பழத்தை என்னிடம் தந்தான். இரத்தகலரில் சிவப்பாய் இருந்த பழத்தை சுவைக்க ஆரம்பித்தேன் .
நாராயணனும் செல்லத்துரையும் தங்கள் பைகளை தோளில் தூக்கி போட்டு கொண்டு கிழக்கு நோக்கி நடந்தார்கள்.

என்னதான் பரிட்சை முடிந்தாலும் புத்தக பையை எல்லா நாளும் சுமப்பது மாணவர்கள் கடமையாய் இருந்தது.
டீச்சர்… மாணவர்கள் படைசூழ பஸ்ஏற கிளம்பிவிட்டார்..

அந்தோணி ராஜ் வேகமாக வடக்கு நோக்கி ஓடினான்.ஏன் இந்த ஓட்டம் என்று வடதிசையை பார்த்தேன்.அங்கே யாகப்பன்.. தங்கமணி ..தங்கராசு..சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கூடப்போய் சேர்ந்து கொண்டான்.

ஜெகநாதன் பக்கத்தில இருக்கும் உடைமரத்தில் ஒரு ஓணானை குறிவைத்து எறிந்து கொண்டிருந்தான்.
பள்ளி மெதுவாக வெறிச்சோடியது.

நான் கடைசியாக தின்ற மஞ்சனத்தி பழம் புளித்தது.


                   (முற்றும்..)

1 கருத்து: