செவ்வாய், 10 ஜூன், 2014

சவுண்ட் சர்வீஸ்

                              சவுண்ட் சர்வீஸ்





 தமிழகத்தில் கோக்கும் ,பெப்சியும் ஆட்சி செய்யாத காலம்.

காளிமார்க்.. சிங்க மார்க்….வின்சென்ட்.
இதை போன்ற பெரிய கம்பெனிகளும்..
 லோக்கல் கலர்  கம்பெனிகளும் கொடிகட்டி பறந்த காலம்.

வயிற்று வலின்னா ஜிஞ்சர் குடி.
வாயு குத்துன்னா சோடா குடி
நெஞ்சு அரிப்புண்ணா  டானிக்குடி.
காய்ச்சல் வந்துட்டா ஒரு அனாசின்
மாத்திரையை ஜிஞ்சர் பீர்ல கலந்து குடி.
இப்படி நம்பிக்கையில் மக்கள் வாழ்ந்த காலம்.

MGR ம் சிவாஜியும் மொத்த தமிழ்நாட்டையும்
 அரசாண்ட காலம்.

ஒலி பெருக்கி குழாயின் கரகரப்புக்கிடையில்
 வரும் பாட்டை கேட்டு ஜனங்கள் மெய்மறந்த காலம்.

அதிகாலையில் பழைய கஞ்சியை பிழிந்து வைத்து
,.அதில் துவையல் என்ற ஒன்றை அரைத்து வைத்து ,
பள்ளிக்கு செல்லும் மாணவன் முதல் வயலுக்கு செல்லும்
உழவன் வரை காலை உணவாக கஞ்சியை சுவைத்து வந்த காலம்.

வைரல் பீவர் இல்லாத காலம்.
மினர்வல் வாட்டரை பற்றி அறியாத காலம்….

நான் மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜாரில் இருக்கிறேன்.

தங்கவேலு தேவரும் அவர் மாமனார் கருப்பையா தேவரும்
 பேசிக்கொண்டிருந்தனர்.


 மாப்பிள்ள… வர்ர பத்தாம் தேதி.. நம்ம ஊர்ல கொடை விழர..!..
நீங்க கட்டாயம் வந்திருங்க.அதுல முக்கியமான விஷயம் என்னன்னா…. கொடை விழால்ல நீங்கத்தான் கடை போடணும்.

நம்ம மட்டும்தான் …

.நீங்க என்னசொல்றீங்க…..இது தங்கவேலுத் தேவர்

நாம் மட்டும் எப்படி கடை போட முடியும்….?

கொடையின்னா.. நாலு கடை இருந்தா தானே நல்லா இருக்கும்.
….
அது சரிதான் மாப்பிள்ள
…மத்தவன் கடை போடுததுக்கும் நம்ம இனத்தான் கடை போடுததுக்கும் வித்யாசம் இல்லையா ..என்ன..?

மாப்பிள்ள…….. 15வருஷம் கழிச்சி பல இடைஞ்சல் கழிஞ்சி ..,
இப்பத்தான் கொடை வருது.
வெளியூர் ஜனம் அம்புட்டும் வரும் ..
கூட்டம் கட்டுக்கடங்காம இருக்கும்.
கடை போட்டீங்கன்னாக்க துட்ட அள்ளிரலாம்.
நான் சொல்றத சொல்லிட்டேன்.மாப்பிள்ள……
அப்புறம் உங்க இஸ்டம்…ஆமா..
 
சரி .இப்போ  மைக் செட்டு க்கு அட்வான்ஸ் கொடுக்கணும் .

நல்ல மைக்செட்டு காரன காட்டுங்க .
அட்வான்ஸ கொடுத்துட்டு நான் போறேன்.
இந்த தடவ கொடை நடத்துத பொறுப்பு நம்ம தலையில வந்து விடிஞ்சிருக்கு..
ஏகப்பட்ட வேலை இருக்கு ..
மைக்செட்டு யாருக்கு கொடுக்கலாம்..? நீங்கத்தான் சொல்லணும்.

தங்கவேலு தேவர் என்னைப் பார்த்தார் ………………
.தம்பி.. நீ போயி… புஹாரிய கூட்டிகிட்டு வா…

நான் சைக்கிளில் பறந்தேன்.

புஹாரி ஒரு சின்ன மைக்செட் ஓணர்.

அதாவது இரண்டு குழாய்…(ஒலிபெருக்கி.)
கொஞ்சம் ரிக்கார்டு(இசைத்தட்டு) அவ்வளவு தான்.
கிராமத்தில் நடக்கும் கல்யான வீடு..சடங்கு வீடு இவற்றிர்க்கு சிறந்த முறையில் மைக்செட் அமைத்து கொடுப்பார்.

கோயில் கொடை போன்ற பெரிய ஆர்டர் எல்லாம் அவர் செய்ததே இல்லை.

தங்கவேலு தேவர் புஹாரியை மாட்டி விட்டுவிட்டார் என்றால் புஹாரியின் நிலைமை என்னவாகும் …!
….எனக்கு சிரிப்பாகத்தான் வந்தது.
.சரி வேடிக்கை பார்ப்போம்.என நினைத்து கொண்டு புஹாரியை தேடிச்சென்றேன்.

இதில் என்னுடைய பங்கு என்னவென்று கேட்டீர்கள் என்றால் ….சொல்கிறேன்..

அதற்கு முன் தங்கவேலு தேவரை பற்றி சில வரிகள்.
தங்கவேலுத் தேவர் ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்.
ஜந்து மைக்செட் வைத்து ராஜா மாதிரி வாழ்ந்தவர்.

என்னவோ போதாத காலம். எல்லாம் போயிற்று.

இப்போது சங்கர் கலர் பானங்கள் என்று ஒரு கலர் கம்பெனி வைத்து நடத்துகிறார்;.
அது கையால் கலர் தயாரிக்கும் கம்பெனி..
அதாவது ஒரு சிறிய மெசினில் முன்று பாட்டில்களை வைத்து கையால் சுத்த வேண்டும்.எத்தனை முறை சுத்தவேண்டும் என்பது தொழில் இரகசியமாம்..தங்கவேலுத்தேவர் யாரிடமும் இதுவரை அதைபற்றி முச்சு விட்டதில்லை.
அதே போல் கலர் எசன்சை தண்ணீரில் கலக்குவது..

இவையெல்லாம் தேவ இரகசியமாம்.

நாங்களும் இதைபற்றி அறிந்து கொள்ள ஆசை பட்டதேஇல்லை.

முருகன் என்ற ஒரு ஆள்மட்டும்; அவரிடம்வேலைக்கு உண்டு .அவன் வர வில்லைஎன்றால் என் உதவியை தேடுவார்.

நானும் அவர் இரவு தயாரித்து வைத்திருககும்
 கலர் பாட்டில்களை காலையில் லைனில்(எல்லா கடைக்கும்)கொண்டுபோய் போட்டுவிட்டு வருவேன்.
நான் அப்போது ஏழாம்வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.

அதாவது ஏழாம்வகுப்பு பெயிலாகி……
.பெயிலாகி விட்டோமே என்ற சூடு சுரனை எதுவும் இல்லாமல் பள்ளி விடுமுறை நாட்களிலெல்லாம் மைக்செட் அடிக்கவும்.(ஆப்ரேட் பண்ணவும் )
கலர் பாட்டில்கள் கொண்டு கடைகடையாய் போட்டுவிட்டு, நிம்மதியாய் கொட்டிகுளம் பஜாரில் மரப்பெஞ்சசில் நிம்மதியாய் தூங்கிகொண்டும் இருப்பேன்..

மைக்செட் அடிப்பதென்றால் அலாதி பிரியம்.காரணம்.
(1)     விடிய விடிய பாட்டு கேட்கலாம்.
(2)     கிராமத்தில் மைக்செட்காரனுக்கு தனி மரியாதை
(3)     புது புது படம் பார்க்க அடிக்கடி போகலாம்.
(4)     செலவுக்கு காசு கிடைத்து கொண்டே இருக்கும்

நான் புஹாரிக்கும் தங்கவேலு தேவருக்கும் செல்லப்பிள்ளை.
இப்போது புஹாரியை தேடவேண்டும்.

புஹாரி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நான் எழுப்பி….. அண்ணே  தங்கவேலு அண்ணாச்சி உங்கள கூட்டிகிட்டு வரச்சொன்னாரு.
மைக் செட் ஆர்டர் வந்திருக்குண்ணே….!
புஹாரிக்கு கண்களின் பாப்பா விரிந்தது..
தான் எப்பேர்பட்ட சிக்கலில் சிக்கி சீரளியப்போகிறோம் என்பது தெரியாமல் என்னோடு விசில் அடித்தபடி சைக்கிளில் வந்தார்…புஹாரி..

புஹாரி என்னிடம் என்ன ஆர்டர் என்று கேட்டார் ..
நான் பட்டும் படாமலும் ..ஏதோ கொடை ஆர்டராம் என்றேன். அதன் பின் புஹாரியிடம் இருந்து எந்த சத்தமும் வரவேயில்லை..யோசனையில் மூழ்கிவிட்டார்

ஒரு வழியாக கொட்டிகுளம் பஜார் வந்தோம்.

தங்கவேலுத்தேவர் புஹாரியின் கையில் 101ரூபாயை கொடுத்து .

இது எங்க மாமனார்.
அவங்க ஊருல வர்ர பத்தாம்தேதி கொடை விழா .
குன்னத்தூர் பக்கம் இருக்கிற கிராமம்…நீ சிறப்பா செய்து கொடு.
….
மொத்த ரூபாய் சொல்லப்பட்டது.

நாற்பது டீயூப்லைட் கட்டவேண்டியது இருக்கும்.
அப்புறம் சீரியல் செட்ல… இரண்டு குத்து விளக்கு….
ஒரு அர்ஜுனன் தேர். ..
ஒரு தண்ணீர் கொக்கு..(மீனை கொத்துவது போல.)இவ்வளவுதான்.
ஊர்ல யாராவது அவங்க வீட்ல டியூப்லைட் போடணுமுண்ணு சொன்னாக்க  அதுக்கு தனியா நீ சார்ஜ் பண்ணிக்கோ..சரியா…?

புஹரிக்கு டீயூப் லைட் நாற்பதுன்னு சொன்னதும் தலை சுத்த ஆரம்பித்தது..
சீரியல் வகைகளை சொன்னதும் மயக்க நிலைக்கே போய்விட்டார்.

ஏனென்றால் புஹாரியிடம் இருப்பது இரண்டே இரண்டு டீயூப் லைட்டுகள்தான்.
சீரியல் செட் இல்லவே இல்லை..
எல்லாவற்றையும் வாடகைக்கு எடுத்துதான் கட்டவேண்டும்.எல்லாமே வாடகைக்கு எடுக்கும்போது …வாடகை பணம்போக… மீதம் ஒன்றும் இருக்காதே..இதைவிட சும்மா இருக்கலாமே..!

கண்களை திறந்து பார்த்தார் புஹாரி…

அங்கே தங்கவேலுத்தேவர் மட்டுமே இருந்தார்..
அவரும் பலத்த யோசனையில் இருந்தார்..

5000பேர் கூடுகிற இடத்தில் ஆயிரம் கலர் பாட்டிலாவது விற்கும்.

ஒரே மூச்சில் ஆயிரம் பாட்டில்களை எப்படி சுத்தமுடியும்.
ஒரு மணி நேரத்துக்கு முப்பது பாட்டில்கள் தான் இறக்கமுடியும்.
எப்படியும் ஆயிரம் பாட்டில்கள் கலர் சுத்தி முடிக்க நான்கு நாட்கள் தேவைப்படும்.

அதையாவது சுத்தி இறக்கி விடலாம்.

ஆனால் அதற்குள் அடைக்கபடும். ஆக்ஸிஜன் கேஸ் சிலிண்டர்கள் வாங்க வேண்டும்.

எசன்ஸ் வாங்க வேண்டும் .
லேபிள் அடிக்கவேண்டும்..

முருகனுக்கு கலர் சுத்த சொல்லிக் கொடுக்கலாம் என்று முதலில் நினைத்தார்.ஆனால் தனக்கு வினையாகி.. நாளைக்கே அவன் தனியாக கலர் கம்பெனி ஆரம்பித்து விட்டான் என்றால் தமது நிலமை மிக மோசமாகி விடுமே.
ஆகவே அந்த யோசனையை உடனே கை விட்டுவிட்டார்.

எப்பாடு பட்டாவது தாமே ஆயிரம்கலர் பாட்டில்களை சுற்றி இறக்குவது என்று முடிவுக்கே வந்து விட்டார்.
மற்ற செலவுகளுக்கு யாரிடமாவது கொஞ்சம் பணம் வாங்கவேண்டும்.

ஆனால் அதைவிட மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால்..கலர் பாட்டில்கள் விற்கபடவில்லை என்றால்.அதை நான்கு நாட்களுக்கள் வேறு எங்கேயாவது விற்பனை செய்யவேண்டும்.
அதுவும் முடியவில்லை என்றால் பட்டிலை உடைத்து…(திறந்து..) தூர கொட்ட வேண்டும்.

இந்த கைசுத்து கலர் ஐந்து நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் கெட்டு விடும்.
இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தார்.

தங்கவேலுத்தேவருக்கு புஹாரிக்கு உதவிசெய்ததை நினைத்து
பெருமிதமாக இருந்தது.
புஹாரியின் தயக்கம் அவருக்கு புரிந்தது.

 என்ன புஹாரி..ஏன் ஒரு மாதிரி இருக்கே…?

ஒண்ணும் இல்லண்ணே …டீயுப் லைட்..சீரியல் செட் இதெல்லாம் வாடகைக்கு எடுத்தா அப்புறம் எனக்கு எதுவும் மிஞ்சாதே…?

தங்கவேலு தேவருக்கு கொஞ்சம் கோபமாகவும் அதே சமயம் பாவமாகவும் இருந்தது.
புஹாரி சொல்வது உண்மைதான்…யோசித்தார்.

உங்கிட்ட டியூப்லைட் பட்டி(…பிட்டிங்ஸ்..)இருக்கா..?

ஆமாண்ணே இருக்கு..

எத்தனை இருக்கும்..?

அது ஐம்பது இருக்கண்ணே…டியூப் லைட்டுத்தான் இல்ல..

அத விடு புஹாரி…….நீஎன்ன பண்ணுற…
பழைய இரும்பு கடையில போயி பழைய டியூப் லைட்டா  ஒரு ஐம்பத வாங்கு .
அதவீட்ல கொண்டுவந்து செக்பண்ணு ..
எப்படியும் கொஞ்சம் தேறும்..எரியாத பல்ப அவன்கிட்டயே ரிட்டன்பண்ணு…..

என்ன ..நான் சொல்றது புரியுதா..?

புஹாரிக்கு முகம் கொஞ்சம் பிரகாசமாகியது..
முயன்று பார்க்கலாமே ..என்று தோன்றியது..

அன்று மதியம் நானும் புஹாரியும் மேலப்பாளையத்திலே பெரிதான உமறு ஹோட்டலில்  பிரியாணி சாப்பிட்டோம்..
லேசான ஒரு தூக்கம்போட்டுவிட்டு நான்கு மணிவாக்கில் பழைய இரும்புக்கடை பக்கம் சென்றோம்…
பழைய டீயுப் லைட்(பல்ப்) இருக்கிறதா ..?என்று கேட்டோம் .அவனிடம் பத்து பல்புகள்தான் இருந்தது.
ஒரு பல்புக்கு ஐம்பது பைசா சொன்னான்.திருப்பி கொண்டு வந்தால் இருபத்தி ஐந்து பைசாவுக்கு ரிட்டன் எடுப்பதாகவும் கூறினான்.

நாங்கள் வீட்டிற்கு வந்து பத்து பத்து பல்பாக பட்டியில் மாட்டி எரிய விட்டோம்

ஆச்சரியம்…… ஐந்து பல்ப் எரிந்தது.

ஆஹா…புஹாரி தனக்கு தானாகவே சிரித்து கொண்டார்.

மேப்பாளையத்தில் இன்னும் இரண்டு பெரிய
 பழைய இரும்புக்கடைகள் இருக்கின்றன.

எப்படியும் இன்னும் கிடைக்கும்.
சமாளித்து விடலாம் ..

மீண்டும் பழைய இரும்புக்கடை நோக்கி சென்றோம்.
பழைய லைட்டுகளை தேடி எடுத்து சேர்த்ததில் நாற்பது டீயூப் பல்புகள் சேர்ந்து விட்டது..

ஒருவழியாக பத்தாம் தேதியும் வந்து விட்டது..
முந்தியநாள் இரவில்  இருந்தே எனக்கு தூக்கம் இல்லை…
என்னவோ மிகப்பெரிய சாதனை செய்ய போவது போல இருந்தது.

அதுஒரு கிராமம்..
குன்னத்தூர் பொத்தைக்கு மேற்கு பக்கமாக இருக்கிறது.

கோயிலை சுற்றி மிகப்பெரிய பந்தல் போடபட்டு இருந்தது.
நாங்கள் நான்குபேர்.
நான்…. புஹாரி….வஹாப் ,(..புஹாரியின் நன்பன்..)இன்னும் ஒருவர்.

எல்லார் சைக்கிளிலும் சாமான்கள் ஏற்றபட்டு மதியம் 12மணிக்கு போய்சேர்ந்தோம்..

முதலில் லைட்தான் கட்டவேண்டும்…
 பந்தலில் டீயுப் லைட்டுகள் கட்டப்பட்டன.

 கோயிலுக்கு பக்கத்தில் உள்ள தெருவில் லைட் கட்டுவதற்காக கம்புகள் நட்டபட்டிருந்தன.

அவைகளில் டியூப்லைட்டுகளை கட்ட ஆரம்பித்தோம்.

அந்த ஊரில் மின்சார இணைப்பு பெற்ற வீடுகள் ஒரு சிலதே.

மின்சாரம் இல்லாத குடிசை வீடுகள் ஏராளம்..
அவர்களுக்கு ஓரு ஆசை தங்கள் வீட்டிலும் கொடைவிழா அன்று லைட் எரிய வேண்டும் என்று.

புஹாரியிடம் இந்த ஆசையை தெரிவித்தார்கள் .அவரும் சரியென்று சொல்லி  ஒவ்வொரு டீயுப் லைட்டுக்கும் தனிதனியாக வாடகை பணம் தரவேண்டும் என்று பேசபட்டது.
அப்படி பேசபட்ட பணமே ஒருபெரும் தொகயாக கணக்கிடபட்டது.

புஹாரிக்கு அளவில்லாத சந்தோசம்.
புஹாரிபாய்க்கு ரொம்ப சந்தோசம் வந்தால் தனியாக போய் உட்கார்ந்து கொண்டு வானத்தை பார்த்து சிரித்துகொண்டே சிகிரெட் பிடிப்பார்.

அன்றும் அப்படித்தான் செய்தார்….

இந்த அர்ப்ப சந்தோசம் சில நிமிடத்தில் பறந்து போனது.
அதாவது கோயில் பந்தலில் முகப்பில் அர்ஜுனன் தேர் கட்டப் படவேண்டும் .

அதேபோல்.தண்ணீரில் கொக்கு மீன்கொத்துவது  போல் ஒரு சீரியல் கட்டப் படவேண்டும்.

நானும் வஹாப்பும் பந்தலில்ஏறி இரண்டயும் கட்டிவிட்டோம்.

பின்பு அதில் மின்சாரத்தை இணைத்து ஓடவிடவேண்டும். .
முதலில் அருச்ஜுனன் தேர்.
புஹாரி மின்சாரத்தை இணைத்து ஓடவிட்டார்…
அர்ஜுனன் தர் குண்டக்க மண்டக்க ஓட ஆரம்பித்தது.
குதிரையும் தேரும் கன்னா பின்னாவென்று
இஷ்டத்துக்கு ஓட ஆரம்பித்தது.

மொத்த ஊரும் கைதட்டி ஆரவாரம்செய்து ,நக்கல்செய்தது.

புஹாரிக்கு வியர்த்து கொட்டியது.
ஒருமணிநேரம் போராடியும் ஒரு பயனும் இல்லை.

கிழே என்னோடு நின்று கொண்டிருந்த வஹாப்புக்கு ஒரு யோசனை வந்தது.
இதை போன்ற வேலைகளின் மேப்பாளையத்திலே சீனி என்பவன்தான் ரொம்ப பேமஸ் ……பேசாமல் அவனை கூட்டி கொண்டு வந்தால் என்ன..?

புஹாரியிடம் இந்த யோசனை தெரிவிக்கபட்டதும் அவரும் சரி என்றவுடன் வஹாப் சீனியைத்தேடி மேலப்பாளையம் வந்தார்.
திரும்பி வரும்போது இருபது டீயூப் லைட்டுடன் வரவேண்டும் எனவும் தெரிவிக்கபட்து..

நானும் புஹாரியும் மிச்சம் இருக்கும் டீயூப்லைட்டை கட்டி முடித்து, மின்சார இணைப்புக்கு கோயில் மீட்டரை தேடிப்போனோம்.
கோயில் பூசாரி தடுத்துவிட்டார்….
நீங்க பாட்டுக்கு கோயில் மீட்டர்ல இருந்து கரண்ட எடுத்தா..
 கரண்ட்பில் கட்றது யாரு..?...(ஒங்க அப்பனா கட்டுவான் என்பதுபோல் இருந்தது …)

புஹாரிக்கு என்ன செய்வது  என்று தெரியவில்லை…

ஏங்க அப்படின்னா கரண்டுக்கு என்னங்க பண்றது.
.அப்போது பார்த்து அட்வான்ஸ் கொடுத்த கருப்பையா தேவர் அங்கு வரவும் சரியாக இருந்தது.

அவர்;;;என்ன தம்பி விவரம்தெரியாத ஆளா இருக்கியள…

போஸ்ட்ல ஏகப்பட்ட கரண்ட் போகுது

.தேவையான கரண்ட்ட எடுத்துகிட வேண்டியது தானே..என்றார்.

ஏங்க அது தப்பில்லயா..?இது புஹாரி

இதுல என்ன தப்பு …,?
நான் என் வீட்டுக்கா எடுக்கசொல்றேன்.
ஊர் நன்மைக்கு தானே.

….அதெல்லாம்தப்பில்ல ….நீங்க தைரியமா செய்ங்க ..
என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

புஹாரியின் நிலமை மோசமாக இருந்தது..
மின்சார வாரியம் கேட்டால் ஊர்காரன் யாரும் பதில் சொல்ல மாட்டான்..

புஹாரிதான் பதில் சொல்ல வேண்டும். பல ஆயிரங்கள் அபராதம் விதிக்க படும் என்னசெய்வது ..

மீண்டும் வியர்வையில் குளித்தார் புஹாரி…

சரி…..
 இனி அல்லா மீது பாரத்தை போட்டு விட்டு சுடலைகோயிலுக்கு கனக்சென் கொடுக்கவேண்டியது தான்..

சுடலையும் அல்லாவும் தன்னை காப்பாற்றுவார்கள் என நினைத்து கொண்டாரோ என்னவோ ?
ஒரு கம்பில் வயரை கட்டிஅதை தெருவில் இருக்கும் மின்சார போஸ்ட் கம்பத்தோடு இணைத்தார்.
அடுத்தநிமிடம் இருண்டு கிடந்த அந்தஊர்.பிரகாசித்தது.

புஹாரியையும் என்னையும் வியப்போடும்.. மதிப்போடும்.. பார்த்தனர் .ஊர் மக்கள்..

என்னை பொறுத்தவரை  அங்கு எது நடந்தாலும் எனக்கு சந்தோசமே…

அர்ஜுனன் தேர் ஓடினால் என்ன .ஓடாவிட்டால் என்ன…

இரவு ஏழு மணிக்கு வஹாப் சீனியுடன் வந்து விட்டான்.

சீனி மிகவும் கம்பீரமாக நின்று கொண்டு  பந்தலை ஒரு முறை சுற்றி வந்தான்…
.பின் பந்தலை பாத்தான்.
எதுக்காக பந்தலை இவ்வளவு ஆராய்ச்சியுடன் பார்த்தான் என்று எனக்கு இந்நாள் வரைக்கும் புரியவில்லை…

ஊர் மொத்த ஜனங்களும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் தன்னை ஒரு இஞ்சினியர் ரேஞ்சுக்கு நினைத்து கொண்டு பந்தலில் பெரு மிதத்துடன் ஏறினான்.

பந்தலின் மேல்பாகத்தில் ஓரத்தில் ரோட்டர் என்ற ஒரு இயந்திரம் இருக்கும்
அதில் இருந்துதான் சீரியல் செக்சனுக்கு மின்சாரம் போகும்.

அங்கேதான் அர்ஜுனன்  தேருக்கும்.. தண்ணீர்  கொக்குக்கும் மின்சாரம் போகும்.அதை சரி பண்னுவதற்காகத்தான்  சீனி மேலே போனான்.

நாங்கள் கீழே நின்று கொண்டு பார்த்து கொண்டிருந்தோம்.

சீனி பந்தலில் ஏறி ரோட்டர் அருகே போனான்.
போனவன் அடேயம்மா……………..என்று பயங்கர சத்தம்போட்டான் .

எல்லோரும் திகிலடைந்து மேலே பார்த்தோம்.
சீனி பந்தலை பிய்த்துகொண்டு கீழே விழுந்து கொண்டிருந்தான்.

கீழே விழுந்தவன் விழுந்தது போலவே கிடக்க… ஓடிச்சென்று அவனை தூக்கி முகத்தில தண்ணீர் தெளித்து.ஒருவாராக தேற்றியபின் அங்கே என்ன நடந்தது என கேட்டோம் .

ரோட்டருக்கு போகும் மின்சார வயரை புஹாரிபாய் இன்சுலேசன் டேப் போட்டு ஒட்டவில்லை.
இணைக்கபட்ட வயரில் இன்சுலேசன் டேப் போட்டு ஒட்டும் வழக்கம்
 ஒரு மைக் செட் காரனுக்கும் கிடையது.
புஹாரிபாயும் வயர் துண்டை அப்படியே விட்டுவிட்டார்.
இருட்டில் சீனி கவனிக்கவில்லை.

240 ஓல்ட் மின்சாரம் சீனியின் உடலில் பாய்ந்தவுடன்

சீனி முதலில் வானத்தில் பறந்து ….பின் புவியீர்ப்பு விசையால் பூமியை நோக்கி இழுக்கபட்டான்.

சீனிக்கு ஒரு செப்பில் சரியான அடி….

.ஆனாலும் நாங்கள் அவனை விடுவதாக இல்லை…எப்படியும் அவனை உயர ஏற்றுவதிலேயே குறியாய் இருந்தோம்…

இம்முறை புஹாரிபாயும் சீனியும் மேலே சென்றார்கள்.
முதலில் புஹாரிபாய் சென்றார்.
இரண்டாவது சினி பந்தலில் எறினான்.

சீனிக்கு முன்புபோல் முயல்குட்டிபோல் குதித்து ஏற முடியவில்லை.

சீனி நிற்க முடியாமல் தள்ளாடினான்..
எப்படியும் சீனியை விடுவதாக இல்லை..மேலே இருந்து சீனியின் கைகளை புஹாரிபாய் இழுக்க நானும் மற்றவர்களும் சினியை மேல் நோக்கி தள்ளி பந்தலில் திணித்து விட்டோம்.
திணிக்கபட்ட சீனி மீண்டும் ஒருவேளை விழுந்துவிடலாம் என்று ஆவலாக காத்து கொண்டிருந்தோம்.

ஆனால் சீனி விழவில்லை.
ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

 சீனி இனி இறங்க வேண்டும்.
அவன் தன் கால்களை மெல்ல கீழ்நோக்கி நீட்டினான்.

கீழே இருந்த நாங்கள் எல்லோருமாக ஆளுக்கொருபக்கமாக சீனியை கீழ்நோக்கி இழுக்க…சீனி கத்தினான். ..கதறினான்..

ஆனால் யாருமே அவன் கத்தலை ஒரு பொருட்டாக எண்ணாமல் விருட்டென்று சீனியை இழுத்து தரையில் போட்டனர் …
கீழே விழந்த சீனி அன்று சத்தியம் பண்ணினான்.
இனி பந்தல் பக்கமே போகக்கூடாது என்று.அதன் பின் அவனை நான் இந்நாள் வரைக்கும் பார்க்கவே இல்லை.

எல்லா லைட்டுகளும் விடிய விடிய எரிந்தது.
மூன்று நாள் விஷேசம் .சொன்னபடி பணத்தை தந்தார்கள்.

எனக்கு தூக்கமே இல்லை..இரவு பூராவும் அந்தகோயிலில் மேளசத்தமும் ஆட்கள் நடமாட்டமுமாக இருந்ததால் தூக்கம் இல்லாமல் தள்ளாடினேன்..
எல்லா சாமானையும் அந்தந்த இடத்தில் சேர்க்கபட்டு முடிந்தது.
இப்பாதுதான் எங்களுக்கு தங்கவேலுத்தேவர் நினைவு வந்தது.

அவர் கடைபோடவேண்டும் என்று சொன்னார் அல்லவா ….!.
பின்பு ஏன் வரவில்லை.
புஹாரியும் நானும் அவரைக்காண சென்றோம்.
கொட்டிகுளம் பஜாரில் தமது கடைக்குமுன் தங்கவேலுத்துவர் உட்கார்ந்துகொண்டிருந்தார்.

வலது கையில் மிகப்பெரிய கட்டு போட பட்டிருந்தது..
கலர் சுத்தும்போது பாட்டில் வெடித்து கைவிரல்களுக்கு இடையில் கண்ணாடி  ஏறிவிட்டது.

இனி பத்து நாளுக்கு கையை அசைக்ககூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டதாக  தங்கவேலுத்தேவர் சொன்னார்.
பாவம் நல்ல மனிதர்.
புஹாரிக்கு நன்மை செய்தார்.அவருக்கு தான் தீமையாக முடிந்தது.

நான் இதைபற்றியெல்லாம் ஆழமாக யோசிக்கவில்லை.
தூக்கம் கண்ணை சுழற்ற அங்கே கிடந்த மரபெஞ்சில் படுத்தேன்.
அவ்வளவுதான் ஆயர்ந்த தூக்கம் .

தூக்கத்தில் கணவில் சீனி மீண்டும் மீண்டும் பந்தலில் இருந்து தலை குப்புற விழுந்து கொண்டே இருந்தான்.
                                  (முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக