சனி, 27 செப்டம்பர், 2025

                               கட்டளை எண் ஆறு

கத்தி வாங்கணும். அதுவும் மடக்கு கத்தியா இருந்தா ரொம்ப வசதி .

சரியா அவன் வயிற்றில இடது பக்கமா குத்தி வலது பக்கமா இழுக்கணும்..கண்டிப்பா இத செய்தே தீரணும்..இனி எனக்கு வாழ்க்கையே இல்லையே. மொத்த பணத்தையும் அவங்கிட்ட கொடுத்து விட்டேன்.

 

இருபத்தி ஐந்து வருட உழைப்பில் கிடைத்த பணம்.

லேத் மிஷின்ல இரவும் பகலுமா நின்னு சம்பாதிச்ச பணம்.

ஒரு நாள் கம்பெனிக்காரன் உனக்கு வயசாயிட்டு. வேலைய விட்டு போன்னு சொல்லி அது வரை சேமிச்ச பணத்த எல்லாம் கையில கொடுத்து அனுப்பிட்;டான். 


நான் வேலையில சேரும்போது அந்த காலத்தில மாத சம்பளமே நூற்றம்பது ரூபாதான்..கடைசிய நான் வாங்கினது இருபதாயிரம் ரூபா. ஆகவே ரொம்ப கொஞ்சமா சில லட்சங்கள் கிடைத்தது..


ரிட்டையர்டு ஆவதற்கு சரியா ஒரு வாரத்துக்கு முன்னே முத்துப் பாண்டிய கம்பெனி கேண்டில்ல சந்திச்சேன்.

அவன்தான் முதல்ல பேசினான்..


ஆசீர் அண்ணே.. என்ன.. முகம் வாடுனாப்பில இருக்கு.

ஒன்னும் இல்லப்பா.

அடுத்த வாரம் ரிட்டையர் ஆவுதீங்கப் போல…

 

ஆமாப்பா.. அத நெனைச்சாதான் கவலையா இருக்கு..


அதான் மொத்தமா பிஎப் பணம் கிடைக்கும்ல..

கிடைக்கும்.. செக்களவு பொண் இருந்தாலும் செதுக்கி தின்னா எத்தனை நாளைக்கு தாங்கும்…

 அதுவும் சரிதான்னே…

உனக்கும் சர்வீஸ் முடீயுற லெவல்ல இருக்குமே…

 

ஆமா.. ஆமா.. நாம இரண்டு பேருக்கும் ஒரு பத்து நாள் முன்ன பின்ன.. அவ்வளவுதான்…

 

ஆனா முத்துப்பாண்டி முகத்தில கவலையே இல்லையே..

எப்பவுமே அவன் டிப் டாப்பாத்தான் வருவான்..புது பைக் வச்சிருக்கான். கையில பெரிய சைஸ் மோதிரம் போட்டிருப்பான். 

ஒரு வேளை வசதியான வீட்ல பிறந்திருக்கலாம்..


 ஆசீர் அண்ணே. பணம் பத்திரம்.யாரு கிட்டேயும் மொத்தமா கொடுத்திராத. 

நான் சொன்னது உன் பிள்ளைங்கள பத்தி ..

பணம் உன் கையில இருந்தாதான் மதிப்பாங்க இல்லைன்னா அவ்வளவுதான் திரும்பிக் கூட பார்க்கமாட்டாங்க..


உண்மைதான் பாண்டி..இப்பவே யாரும் வர்றதில்ல.

ஆமா நீ என்ன பிளான் வச்சிருக்க…


எனக்கு என்ன கவலை. கையில தொழில் இருக்கு.அத அப்படியே கண்டிணியூ பண்ண வேண்டியது தான்.


என்ன தொழில் பாண்டி..

அதான் குiயெnஉந.

 அப்படின்னா.?

அதான் பணத்த வட்டிக்கு விடுறேன். 

ஓ..அப்போ ஏற்கணவே நீ தயாராத்தான் இருக்கே…


ஆமா. எனக்கு கவலையில்ல..பார்த்துக்கிடலாம்…

பாண்டி…வட்டின்னா எவ்வளவு..?

அது கொடுக்கிற அமௌண்ட பொறுத்தது. 

லட்சம்னா.? அஞ்சு பைசா..அதுக்கு கீழேன்னா பத்து பைசா.


 நான் கணக்கு பார்த்தேன். என் கையிலிருக்கும் பணத்தை மொத்தமாக வட்டிக்கு விட்டால் கிடைக்கும் வட்டி பணத்தை வைத்து நிம்மதியாக மாதத்தை கடத்தலாமே…

ஆனா யாருகிட்ட கொடுக்கிறது..


பாண்டி.. அப்படி யாருக்கும் பணம் தேவைப்படுதா.?


ஏதுக்குண்னே.. நீ வட்டிக்கு விடப்போறியா.? தேவையில்லாத ரிஸ்க்..உன்னால கொடுத்த பணத்த திரும்ப வாங்கவே முடியாது..இந்த தொழில பத்தி உணக்கு என்ன தெரியும்.?

கொடுக்கும் போது நம்ம முகம் வேற. வாங்கும்போது நம்ம முகம் வேற.


அதப்போல அவனுக்கும் வாங்கும்போது அவன் முகம் வேற.

நாம திருப்பி வட்டி கேட்கும்போது அவன் முகம் வேற.

ஒன்னு நம்ம கால்ல விழுவான்.. இல்லன்னா போலிஸ் மூலமா நம்ம கழுத்து பிடிப்பான்…எல்லாத்தையும் சமாளிக்கணும்..

நாம அவன அடிச்சோம்னா… அதோட கொடுத்து பணத்த மறந்திட வேண்டியது தான்.. 

மிரட்டணும்…அடிக்க கூடாது….ரொம்ப வறுமையில இருக்கவனுக்கு கொடுக்கவே கூடாது…

அரசாங்க வேலை பார்க்கிறவன்கிட்ட ஓரளவு வாங்கிப்புடலாம்..

இது தினமும் கத்தியில நடக்கிற சமாச்சாரம்….

ஆசீர் அண்ணே இதப்பத்தி நினைக்காதே….


இல்ல பாண்டி கொஞ்சம் யோசி. நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு பார்க்கலாம்..


சரி உன் இஷ்டம்…


நான் ரிட்டயர்டு ஆகி ஒரு வாரம் கழிச்சி பாண்டி என் வீட்டுக்கு வந்தான்…ஒரு நல்ல பார்ட்டி இருக்கு நீ கொடுக்கியாண்னே.. நீ இல்லன்னா. நான் கொடுத்திருதேன்..

இரண்டு மாசம்தான் டைம்…

மூணாவது மாசத்தில பணத்தை திருப்பி தந்திடுவாங்க. ரொம்ப டீசண்டான பார்ட்டி. என்ன சொல்ற..?

 

பாண்டி எனக்கு இது புதுசு. மொத மாசம் நீ வாங்கி தந்திடு..இரண்டாவது மாசம் நான் போய் வாங்கிக்கிடுதேன்..சரியா..


சரி….அண்னே இது உனக்காத்தான் செய்றேன்..எனக்கு இதுல எந்த லாபமும் இல்ல..அத புரிஞ்சுக்கோ..

 

சரி..சரி பாண்டி உன்ன பத்தி எனக்கு தெரியாத.

 

மொத்த பணத்தையும் ஒரு பேப்பர்ல வச்சி ஒரே கட்டா கட்டி கையில கொடுத்தேன். கொண்டு போயிட்டான்.


முப்பது நாளை கடத்தியது எனக்கு திக் திக் தான்..

சரியா முப்பதாவது நாள் பாண்டி வந்தான்…

ஆசீர் அண்னே . வா..போய் வட்டி பணத்த வாங்கலாம். என்றான்.

 நானும் போனேன்.. திருநெல்வேலி டவுன் பக்கம் ..பெரிய வீடு…டிசண்டான குடும்பம் போல. 

போன உடனே பணத்தை கொடுத்துட்டாங்க.

பாண்டி வாங்கி வீட்டுக்கு வெளியே வந்து என்னிடம் பணத்தை கொடுத்துவிட்டான்..

 

சரி ஆசீர் அண்ணே..என் வேலை முடிந்து விட்டது.

 இனி உன்பாடு.. பணம் பத்திரம் என்றான்..


அடுத்த மாதம் முப்பது நாள் கழித்து பணத்தை வாங்க அதே வீட்டுக்கு போனேன். வாசலில் நின்று அழைப்பு மணியை அடித்தேன்…சில விணாடிகள்….யாரும் வரவில்லை..மீண்டும் அழைப்பு மணி பொத்தானை அழுத்திப் பிடித்தேன்…ம்….அசைவே இல்லை. 

ஏன் ?….முன் கதவை பார்த்தேன்…கதவு பூட்டப்பட்டிருந்தது… ஆள் இல்லை….


எனக்கு திக்கென்றிருந்தது…

.கடவுளே..ஒரு வேளை பக்கத்தில் எங்காவது சென்றிருக்கலாம்….


பாண்டிக்கு போன் செய்தால் விஷயம் தெரியும்..பாண்டிக்கு போன் செய்தால் ரிங் அடித்து முடிந்தது…

கடவுளே.. சரி நாளை வரலாம்..

அடுத்த நாள் போனேன்.கதவு திறக்கப்படவில்லை.

இருபது நாள் கழித்து அந்த வீடு திறந்திருந்தது..

 

மணியடித்ததும் யாரோ வந்தார்கள

சார்..இருக்காங்களா..?

நீங்க யாரு…?

 நான் வந்து….பாண்டி இருக்காருல்லா அவரு பிரண்ட்…

 சரி..

நான் பணம் கொடுத்திருந்தேன்.

 யாருகிட்ட.?

இங்க இருக்கிறவங்ககிட்ட..

இது என்ன பேச்சி…யாருகிட்ட கொடுத்தீங்க. பேரைச் சொல்லுங்க

 

போன மாசம் வந்து வட்டி பணத்த நானும் பாண்டியும் வந்து வாங்கிட்டு போனோமே…

 யாரு அந்த பாண்டி.?

 அதான் சொன்னேனே ..என் பிரண்ட்..

 

உங்க பிரண்ட பத்தி நான். கேட்கல.. நீங்க சொல்றது எனக்கு புரியல..


போன மாசம் இந்த வீட்ல இருந்தவங்க யாரு..?


அது வேற ஒருத்தங்க. அவங்க காலிபண்ணிட்டு போயிட்டாங்க..

 

எங்க போனாங்க…?

 அது தெரியாது?

 அப்போ என் பணம்.?

என்ன பணம்? 


அவங்க என்கிட்ட வட்டிக்கு பணம் 

வாங்கியிருந்தாங்க.

 

ஓகே.நீங்க போலிசுக்கு போங்க…தயவு செய்து இங்க வராதீங்க..

நாங்க வேற .நீங்க…ம் உங்க கிட்ட பணம் வாங்கியது நாங்க இல்ல…

 ஆனா இந்த வீடுதானே…

 யோவ் போய்யா,? நான் போலிச கூப்பிடவா.


பாண்டிக்கு போண் செய்தேன். சுவிட்ச் ஆப் என்றது…

சரி நானே வாரேன்…

பாண்டி வீடு பேட்டையில எனக்கு தெரியும்....என் பழைய டிவிஎஸ் 50 தானாகவே பேட்டையை நோக்கி ஓடியது.. என்ன செய்ய..?பணம் கிடைக்குமா?

இனி நான் பிழைப்புக்கு என் செய்ய.? கடவுளே

 பணத்தை வட்டிக்கு கொடுத்தது தப்புதான்…அதுவும் பாண்டிய நம்பியது மகா தவறு..

இனி என்னால வேலை செய்து பிழைக்க முடியாது. முட்டு தேய்ந்து விட்டது. நடந்தால் வலிக்கிறது..

மனது அழுகிறது.. மாசாமாசாம் என் மனைவிக்கு மருந்து வாங்கவே இரண்டாயிரம் ரூபாய் வேண்டுமே..

மருந்து சாப்பிடலன்னா அவா செத்துப்போயிடுவா…கடவுளே 

 பணம் இல்லாமல் என்ன செய்வேன்..


பாண்டி வீட்டை கண்டுபிடிப்பது எனக்கு வெகு சுலபம்..வந்துவிட்டேன்..

ஆனால்

 இங்கேயும் வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் கேட்டேன்.

 

யாரு பாண்டியா..? அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்களே..


அப்போ இது சொந்த வீடு இல்லியா.?

 

சொந்த வீடுதான் .வித்துட்டாங்கன்னு கேள்வி..

 சரி..இப்போ எந்த ஊர்ல இருக்காங்க.


தெரியாதுங்களே..


திரும்பிவிட்டேன். இப்போ ஆறு மாசம் ஆச்சி. பாண்டிய கண்டு பிடிக்க முடியவில்லை..

போலிசுகிட்ட போகலான்னு பார்த்தா . பலரும் பலத சொல்றாங்க. 

 

பாண்டி மாதிரி ஆளுங்க எல்லாம் சுலபமா தப்பிடுவாங்க..போலிசுக்கு பணத்த வெட்டுவாங்க. கோர்ட் கேசுன்னு அலைய விடுவாங்க..கடைசில ஒரு…புண்ணாக்கும் கிடைக்காது…

 

அப்போ என்ன செய்ய..நானே தேடுவேன்..என்னைக்காவது என் கையில சிக்கினா…அந்த இடத்திலேயே போட்டுத்தள்ளிட வேண்டியது தான்..

 இப்போ முதல்ல அரையடி நீளத்தில ஒரு கத்தி வாங்கணும்..அது மடக்கு கத்தியா இருந்தா நல்லது. அவன் வயித்தில இடது பக்கத்தில இருந்து ஒரே குத்தா குத்தி வலது பக்கமா இழுக்கணும்..

சிக்குவானா..? சிக்கிவிட்டான்…எனக்கு அவன் இருக்கும் தெரிந்து விட்டது..

      கட்டளை எண் ஆறு

           இரண்டாம் பாகம்..

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஒரு டீக்கடை இருக்கிறது.அதில் 

டீக்குடித்துக் கொண்டிருக்கும்போது என்னோடு வேலை பார்த்த சரவணனைப் பார்த்தேன்.

அவனுக்கு என் கதை முழுதும் தெரியும் ..

அவன் என்னைப் பார்த்தவுடனே கொட்டித் தீர்த்து விட்டான். 

 ஆசீர் உனக்கு விஷயம் தெரியுமா?. இப்போ ஒரு மணி நேரத்திற்கு முன்னே பாண்டியை பார்த்தேன்..

எனக்கு வியர்த்தது…

.எங்கப்பா பார்த்தே?

 கேடிசி நகர்ல  ரோட்டு ஓரத்தில தென்புறமா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. 

அதுல இருந்து வடக்க பார்த்து போனா ..ஒரு அரை மைல்ல ஒரு போட்டோ ஸ்டுடியோ வரும்..அதுக்கு எதிரே உள்ள தெரு..


உள்ள போனா..ஒரு சாய்ந்த காண்ட் போஸ்ட் இருக்கும்.. அத ஒட்டினால உள்ள வீடுதான்..போ..போ….

 என்னை விரட்டினான்…

ஆஹா ..மாட்டினான்…அந்த கத்தி வேணுமே..

அது வீட்ல தானே இருக்கு..எப்படியும் இன்னைக்கி இரண்டில ஒன்னு பார்த்துர வேண்டியது தான்…வேகமாய் வீட்டிற்கு வந்தேன்..


என் மனைவி என்ன இவ்வளவு அவசரம்..?

 ஒன்னும் இல்ல..கத்தியை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டு மீண்டும் டீவீஎஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்து அடுத்த அரை மணி நேரத்தில் கேடிசி நகர் பக்கம் வந்து விட்டேன். 

எனக்கு இப்போ படபடப்பு அதிகமாகியது..

பாண்டி என்ன செல்வான்.

.நீ யாருன்னே தெரியாதுன்னு சொன்னா..?..உன் கிட்ட நான் பணம் வாங்கியதற்கு எதாவது ஆதாரம் இருக்கான்னு கேட்டா..?

அவன் என்ன சொல்வான்…நான் என்ன செய்ய வேண்டும்…?

கத்தியை ஒரே சொருகா சொருகிடவா.?

 

அவன் செத்துப்பேயிட்டா. போலிஸ் என்னை விடுமா..? எத்தனை வருடம் தண்டனை கிடைக்கும்..?

 சாராள்… என் னைவி ஒத்தயில என்ன செய்வா? பிள்ளைங்ககிட்ட கையேந்தி நிற்பாளா.?

என் வழக்குக்கு வக்கீல் பீஸ் யாரு கொடுப்பா?

 

சே.. என்  கோபம் இப்போ பயமாகியது..அதுக்காக அப்படியே அவனை விட்டுவிடவா.?

 கொஞ்சமாவது காயப்படுத்த வேண்டாமா.?

சரவணன் சொன்ன வீட்டை எளிதில் கண்டு பிடித்துவிட்டேன்…

வாசல் பக்கமாக போய் நின்றேன்..

 யாரு நீங்க என்ன வேணும்..?

பாண்டியை பார்க்கணும்..

 பாண்டி சித்தப்பா ஒரு ஆள பார்க்க வெளியே போயிருக்கார் .ஆமா..நீங்க யாரு…

 நான் அவரு கூட வேலை பார்த்தவன்…என் பெயர் ஆசீர்…

 அட.. உங்கள பார்க்கத்தான் போயிருக்காரு..

 என்ன பார்க்கவா.?

ஆமா போயி ஒரு முக்கால் மணி நேரம் இருக்கும்….

எதுக்காகன்னு எதாவது சொன்னாரா…

 இல்ல….

சரிம்மா நான் வாரேன்…


எதுக்கு என்னை தேடி வீட்க்கு போறான்..பணம் தொலைந்து விட்டது என்னை மன்னித்துவிடு என்று அழுவானா? 

இல்ல ..இன்னும் ஆறு மாசத்தில உன் பணத்த எப்படியாவது தாரேனன்னு சொல்லிட்டு போக வந்திருக்கானா ? 

என்னால் யோசிக்கவே முடியவில்லை…

.இப்போது கோபம் இல்லை…வேகம் இல்லை..தளர்ந்து விட்டேன்..என் வீட்டுக்கு அருகே வர வர இதயம் படபடத்தது…வேர்வை ஆறாக ஓடியது….

என் வீட்டிற்கு முன் ஒரு பைக் நின்றது..அது பழைய பைக்….இது பாண்டியுடையது இல்லையே….

என் வண்டியை ஆப் செய்து விட்டு வீட்டிற்குள் நூழைந்தேன்..

அங்கே தாமஸ் அண்ணாச்சி பாண்டியோடு எதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தார்…நான் உள்ளே வந்ததும் இருவரும் அமைதலாயினர்..

 பாண்டி பேச வில்லை. ஒரு பையில் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை எடுத்து என் அருகே வைத்தான்.

நான் அதைப் பார்த்தேன்.

 பாண்டி பேசலானான்…


ஆசீர் அண்ணே.. முதல்ல என்ன மன்னிச்சிரு.. 

உன் பணத்துக்கு அசலும் வட்டியும் அந்த வீட்ல கொடுத்தாங்க..அதுவும் அட்வான்சா இரண்டு நாளைக்கு முன்னே..

அவங்க அவசரமா சென்னைக்கு போறாங்களாம்..அதனால இத உடனே செட்டில் பண்ணிட்டாங்க…

நானும் அத உன்கிட்ட கொடுக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள் என் மனைவிக்கு மாரடைப்பு வந்து சென்னைக்கு அவசரமா போயிட்டேன். 

அவசர பயணத்தில என் செல்போன் காணாம போயிட்டு…

அங்க போனா என் மனைவிக்கு இரண்டு ஆப்பரேசன்..உதவிக்கு யாரும் இல்ல. 

அவா கண் முழிக்கவே ஐந்து மாசம் ஆயிட்டு..

இப்போதான் கொஞ்சம் பரவாயில்ல..நிறைய பணம் காலியாயிட்டு…

வீட்ட கூட வித்திட்டேன்…என்ன இருந்தாலும் இந்த வட்டி பணம் நிற்காது ஆசீர் அண்ணே…


உன் பணத்த அவசரத்துக்கு எடுத்து செலவு பண்ணிட்டேன்..அப்புறமா அதுக்கு பதில பணத்த புரட்டி உன்கிட்ட கொண்டு வந்து  சேர்க்க இவ்வளவு நாளா ஆயிட்டு…இது எனக்கு மட்டும் இல்ல உனக்கும் சோதனை காலம்…நீ பயந்திருப்போ…உன்ன ஏமாத்திட்டதா கூட நினைச்சிருப்பே..அது தப்பே இல்ல…


சரி இதுல உன் பணம் மொத்தமா இருக்கு. என்னால முடிஞ்ச அளவு வட்டியோடு இருக்கு..உனக்கு நான் ஒன்னு சொல்லவா. நீ என்ன பிசினஸ் வேணும்னாலும் செ;ய்.ஆனா வட்டிக்கு மட்டும் பணத்தை விட வேண்டாம் .இத கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம்..

 பாண்டி போய்விட்டான்.

தாமஸ் அண்ணாச்சி.பேச ஆரம்பத்தார்.

 

ஆசீர் ..உன் மனைவி எல்லாத்தையும் சொன்னா.

நீ ஒரு கிறிஸ்தவனா இருந்து கொண்டு இப்படி செய்யலாமா.? 

நீ செய்த இந்த காரியத்தில எங்காவது விசுவாசம் இருக்கிறதான்னு பார்.

கர்த்தர் உன்னை அப்படியா கைவிட்டுவிடுவார்….என்னப்பா நீ…

புதுசா கத்தில்லாம் வாங்கி வச்சிருந்தது பாண்டிய கொலை செய்யவா.?..

அப்போ மனதளவில் அவனை குத்தி கொன்றுவிட்டாய் இது காயினின் ஆவி…ஆனா.. கிறிஸ்துவை அறியாத பாண்டி எவ்வளவு நியாயமாய் நடந்து கொண்டான் பார்…

 பாண்டி உண்மையிலே யோக்கியன்…ஆனா அவன் செய்த தவறு உன்னிடம் தன் நிலையை எப்படியாவது சொல்லி இருக்கணும்…ஆனா அவன் சூழ்நிலை எப்படி இருந்ததோ.?

 

பத்துக் கட்டளையில் ஆறாவது கட்டளை கொலை செய்யாதிருப்பாயாக. 

அற்ப பணத்துக்காக அவனை கொல்ல நினைச்சியே..

நீ நினைத்தபடியே பாண்டி உன்னை ஏமாற்றி இருந்தாலும் கர்த்தர் உன்னை கைவிட்டு விடுவாரா.?

 வாரந்தோரும் பிரசங்கம் கேட்டு பைபளை வாசித்தாலும்  உன் சக தோழனை கொல்ல நினைத்தது எவ்வளவு பெரிய மோசமான குணம்…நீ திரு முழுக்கெடுத்தது , கர்த்தரின் பந்தியில் பங்கொடுத்தது எல்லாமே வீணாகிவிட்டது. 

நியாயப்படி நீ பாண்டியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…நீ அத செய்யவே இல்லியே..


என் புத்தி தெளிந்தது. பாண்டி என்னை மன்னித்துவிடு என்று நான் கேட்கப் போவது இல்லை. அது மாதிரி பேசி எனக்கு பழக்கம் இல்லை. ஆனா சரிபண்ணணும்

அவன் கொடுத்துவட்டி பணத்தை அவன் மனைவி மருத்துவ செலவுக்கு கொடுத்துவிட தீர்மானித்தேன். பாண்டி ஏற்றுக் கொள்வானா என்பது தெரியாது..

ஏன் என்றால்  பாண்டி என்னைவிட நல்லவன்..உத்தமன்..

நானோ ஆறாவது கட்டளையை மீறிய பாவி.. கர்த்தர் என்னை மன்னிக்கவேண்டும்..

( முடிந்தது)



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக