இசை பயணங்கள் முடிவதில்லை
---------------------------------------------------------------
இனிய ஸ்நேகமுடன்...
இது ஒன்றும் காவியம் அல்ல..நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டியதுமல்ல.
என் நினைவுகள்,...பிடிக்கவில்லையெனின் ஓரமாக ஒதுங்கி
போகலாம்...தடையில்லையே
இசை பயணங்கள் முடிவதில்லை..(1)
என் வயதை வைத்துப்பார்க்கும் போது இசைத்துறை
எத்தனையோ மாற்றத்தை கண்டுவிட்டது...
1970 களில் நான் எட்டாவது வகுப்பு
படித்துக்கொண்டிருந்தேன்...
என் வாழ்க்கைப் பாதை வேலி அடைத்த தோட்டம் அல்ல...இது காட்டுச் செடி...
காட்டில் வளர்ந்த கள்ளிச்செடி...
சினிமா பாடலில் இரண்டு வரிகள் உண்டு
"காட்டுக்கேது தோட்டக்காரன் போடி தங்கச்சி
கள்ளிக்கேது முள்ளில் வேலி இதுதான் என்கட்சி"
இது அப்படியே எனக்கு பொறுந்தும்...
சனிக் கிழமை வந்தால் பாளை மத்திய நூலகத்திற்கு நடந்தே சென்று (3கிமீ) கதை
புத்தகங்கள் வாசிப்பது..
காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாளில் மேலப்பாளையம் சென்று அங்கு
உள்ள "சவுண்ட் சர்வீஸில்"வேலை செய்வது..
மூன்று நாளுக்கு மூன்று ரூபாய் சம்பளம்...நான் பணத்திற்காக போகவில்லை...நிறைய
பாட்டு கேட்கலாமே..
அந்த காலத்தில் விடிய விடிய ரிக்கார்டு (ஒலிப்பதிவு
தட்டு)போடணும்..
78Rpm இசைத்தட்டு மூன்றரை நிமிடம் ஓடும்...மனோகரா,மதுரைவீரன், இந்த
திரைப்படத்தின் வசனங்கள் பதித்த இசைத்தட்டு அதிகம் போட வேண்டியது வரும்..
மக்கள் டியூப் லைட் வெளிச்சத்தில் ஆங்காங்கே துண்டை விரித்து படுத்து பாதி
தூக்கத்தில் அதை கேட்டுக்கொண்டிருப்பார்கள்...
எனக்கோ இரண்டு வரியுள்ள திருக்குறளை மனப்பாடம் செய்து பரிச்சையில் எழுத
முடியாமல் எப்போதுமே பெயில்தான்...
ஆனால் மனோகரா திரைப்பட வசனம் மனப்பாடமாக இருக்கும், அது எப்படி?
வெற்றி வெற்றி குருதேவா என்று அந்த படத்தின் வசனம் துவங்கும்...
வசந்த சேனை வட்டமிடும் கழுகு
வாய்திறந்தலையும் ஓநாய்...
இப்படி கலைஞரின் தெறிக்கவிடும் வார்த்தைகளும் சிவாஜியின் கம்பீர குரலும் அந்த
ஒலிபெருக்கி குழாயில் ஊர் மக்கள் காதை நடுச்சாமத்தில் கிழிக்கும்...
என்னதான் காது கிழிந்து இரத்தம் வடிந்தாலும் கிராமத்து மக்கள் மகிழ்சியாக
இன்னும் இரண்டு படத்தின் வசனத்தை போடு என்பார்கள்..
திருமணவீடு ,சடங்கு வீடு, கோயில் கொடை விழா இதில்தான் மக்கள்
டியூப்லைட்டை பார்க்கமுடியும்...மற்றபடி எல்லார் வீட்டிலும் குண்டு பல்புதான்...
ஆக சினிமா பாடல்கள் எல்லாம் எனக்கு அத்துபடி..
மைக்செட்காரன் சட்டை பையில்" டெஸ்டர் ஒன்றை குத்தியிருப்பான்...
அவன் கிராமத்தில் டீக்குடிக்க அங்கு உள்ள கடைக்கு போனால் டீக்கடைக்காரன் காசு
வாங்கமாட்டான்...டீயை குடித்து தம்ளரை வைக்கும் போது ஒரு கோரிக்கை
வைப்பான்...ம்....தம்பி அந்த உரிமைக்குரல் MGR படத்தில வரும் "நேற்று பூத்தாளே ரோசா
மொட்டு "பாட்ட போடுங்க தம்பி..
நாம மனசுக்குள்ள, அட ..அத தானய்யா இரா முழுதும் ஓடவிட்டோம்...
உண்மையாகவே அந்த இசைத்தட்டு ஓடி ஓடி ஊசி தேய்த்து தேய்து மொத்த டிஸ்கையும்
அழித்து விட்டது...
அந்த படத்தால் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை கூறுகிறேன்...
அது சரி...இந்த பழங்கதையெல்லாம் இப்ப எதுக்குன்னே நீங்க கேட்கலாம்..
தாவீது காட்டில் ஆடு மேய்த்ததற்கும்
இந்த சாலமோன் மைக்செட் அடித்ததற்கும் எதாவது சம்பந்தம் உண்டா??
உண்டு மக்களே
ஒரு நாள் மூன்று வாலிபர்கள் எங்கள் ஒலிபெருக்கி அலுவலகத்திற்கு வந்தார்கள்..
வரும் புதன் கிழமை வீட்ல விஷேசம்..மைக் செட் வேணும் என்றார்கள்..
நாங்களோ டீக்குடிக்க காசுகூட இல்லாம இருந்த நேரம் அது.
உடனே சரி என்றோம்...
அவர்களின் அடுத்த கேள்வி....
உரிமைக்குரல் படத்தில் நேத்து பூத்தாளே ரோசாமொட்டு... பாட்டு
இருக்கா?
இருக்கே என்றார் ..ஓனர்
எனக்கு அந்த தேய்ந்து போன ரிக்கார்டு நினைவில் வந்தது...
எந்த ஆர்டரா இருந்தாலும் அவர்கள் சிவாஜி ரசிகரா?... இல்லை MGRரசிகரா என்று தெரிந்து கொண்டுதான் அங்கு
போகவேண்டும்...
தப்பித்தவறி வேறு பாட்டை போட்டால் இரணகளம்தான்....
ஆகவே இசைதட்டு அடுக்கி வைத்திருக்கும் பெட்டியை
கவனமாக எடுத்து MGR படத்தில் உள்ள பாட்டை கவனமாக பிரித்து
அடுக்கி தயார் செய்தோம்..
அட்வான்ஸ் வாங்கிய ரூபாயில் அன்றய பொழுது வெகு இன்பமாக கழிந்தது
ஒருவழியாக குன்னத்தூர் சென்றோம்..அதான் அந்த ஊர் பெயர்...
பந்தல் போட்ட வீட்டை கண்டு பிடித்து ஒலி பெருக்கி குழாய்களை பந்தலில் மேற்கு
கிழக்காக கட்டிவிட்டு... கீழே நின்று அழகு பார்த்தோம்...
நான் அந்த வீட்டின் உள்ளே சென்று மெயின் போர்டைத்தேடினேன்...
அந்த வீட்டிற்குள் எங்கு பார்த்தாலும் MGRபடம் ..பல வண்ணங்கள், பல
டிசைன்களில் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது..
தெரியாம கூட சிவாஜி பட பாடலை போடக்கூடாது,
அப்படி போட்டா நான் செத்தேன்..
ஓகே...
சீரியல் லைட் மாட்டி, ட்யூப்லைட் கட்டிவிட மொத்த வீடும்
பளிச்சென்று ஆனது..
MGR நடித்த மதுரைவீரன் படத்திலிருந்து
மாட்டுக்காரவேலன் படம் வரை தோண்டி எடுத்து ஒன்னு விடாம பாட்டுப்போட ஒரு கூட்டமே
வட்டமா உட்கார்ந்து எனக்கு கட்டளை இட்டது...
இரவு எட்டுமணியானது
மெதுவா ஒவ்வொருத்தரா காணாம போய்விட்டார்கள்...
என்ன ஆச்சி...?
ஊர் மொத்தமா உரிமைக்குரல் படம் பார்க்க கிளம்பி போய்விட்டது...
திருநெல்வேலி டவுனில் லச்சுமி தியேட்டரில் அந்த படம் ஓடியது...
இப்போ அந்த வீட்டுக்கார அம்மாவும் நானும்தான் இருந்தோம்..
யாருமே ஊர்ல இல்லாவிட்டாலும் நடுச்சாமம் வரை பாட்டு போட்டே தீரணும்..
பணிரெண்டு மணிவாக்கில் அந்த அம்மா வந்து, ,,தம்பி போதும்..
பாட்ட நிப்பாட்டிட்டு தூங்கு என்றார்கள்...
செகண்ட் ஷோ முடிந்து மூன்று மணிக்கு மொத்த ஊரும் திரும்பியது..
நாலுமணிக்கு யாரோ என்னை எழுப்பிவிட்டான்...
.டேய் தம்பி பாட்டை போடுடா...
இன்று வரை சினிமா மோகம் தமிழகத்தை பிடித்து ஆட்டுகிறது..
தமிழக கிறிஸ்தவம் சினிமா என்ற ஊடகத்தை பயன் படுத்தாமல் விட்டு விட்டது எனக்கு
சரியாகப்படவில்லை...
ஒரு காரியத்தை மட்டும் சொல்கிறேன்..
என் பள்ளிக்கூட நாட்களில் வெங்கட சுப்பிரமணியன் என்ற நன்பன் எனக்கு
இருந்தான்..
அவன் சிவாஜி வெரியன்..
சிவாஜிபடம் வந்தால்..... முதல் நாள் முதல் ஷோ கட்டாயம் பார்த்தே தீருவான்...
ஆனா இதற்கு காசு வேண்டுமே
அதற்கு அவனுடைய தாய்மாமன் சட்டைப்பையில் கைவைப்பான்..
பின்பு கண்டுபிடிக்கப்பட்டு... முதுகுத்தோல் மாமன் இடைவாரால் கிழிந்தாலும்
வெங்கடசுப்பிரமணியன் குணம் மட்டும் மாறவே இல்லை...
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என நினைக்கிறேன் சிவாஜி நடித்த
"ஞான ஒளி"
திரைப்படம் வெளிவந்தது...அந்தப்படத்தில் சிவாஜி ஒரு
முரடனாகவும் அதனால் யாரையாவது அடிக்க வேண்டிய நிலை வந்தாலோ ...அல்லது அடிபடக்கூடிய
நிலை வந்தாலோ தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சிலுவையை இருக்கமாக பிடித்து
தனது கோபத்தை அடக்குவது போல காட்சியமைப்பு இருக்கிறது...
இந்த காட்சி வெங்கடசுப்பிரமணியன் மனதில் ஆழமாக பதிய, படம்
பார்த்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது அவன் சட்டைக்குள் நீண்ட
மரச்சிலுவை கருப்பு கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது...
இது எதற்கு ?என்றேன்...அவன் திரைப்படத்தின் கதையை சொன்னான்..
நான் அது சரி.. இது உனக்கு எதற்கு என்றேன்...
காரணத்தை சொன்னான்..
மாமனின் சட்டைப்பைக்குள் கைவிட்டு துட்டை ஆட்டையை போட்டபின்
மாமன் நையப்புடைக்கும் போது, எதிர்த்து அடிக்க மனது துடிக்கும் அல்லவா...
அப்போது இந்த மரச்சிலுவையை அடி வாங்கியபின் இருக்கமாய் பிடித்துக்கொள்வானாம்,,
ம் ....சரி போறான் ...
ஒரு வாரத்திற்குள் வெங்கடசுப்பிரமணியன் அந்த சிலுவையை மறந்துவிட்டான்...
அந்த. மரச்சிலுவையினால் விழுகின்ற அடியை தடுக்கமுடியாது என நினைத்திருப்பான்
போல...
அந்த படத்தில் ஏதாவது பைபிள் வசனத்தை சிவாஜி பேசியிருந்தால் அந்த வசனம்
வெங்கடசுப்பிரமணியன் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் ...
சரி விடுங்க..
SSLC தேர்ச்சி பெற்றேன்...உலக அதிசயம் அது...
1977 ல் இருந்து1979 கடைசிவரை நான் தமிழகத்தில் இல்லை...
இது என் வாழ்க்கையின் இரண்டாம்பகுதி
,இப்போது நினைக்கிறேன்,
பொதுவாக ஒரு பாடல், ஒரு கவிதை, ஒரு காட்சி எப்படி இருந்தால் மக்கள்
இரசிப்பார்கள்..
அல்லது நான் நினைத்ததை எப்படி சொன்னால் உங்கள் கவனம் என்மீது திரும்பும் என.
நான் புரிந்து கொள்ள என் வாழ்வின் முதல் பகுதி எனக்கு அளிக்கப்பட்டதாக
நினைக்கிறேன்...
மரணவாசல்கள்
வாரும் என் நேசரே
கன்னிவலை
இந்த மாதிரியான திருவசனத்தின் அடிப்படையில் கதைஎழுத என் மனதிற்கு என் அனுபவம்
உதவியிருக்கலாம்..
மூன்று வருட வட இந்திய வாழ்க்கையில் ஓரளவு இந்தியில் பேசவும்...என் வாழ்வில்
பிழைக்க ஒரு தொழிலை பழகவும் எனக்கு உதவி இருக்கிறது என நினைக்கிறேன்.
1980 ஊருக்கு வந்தேன்...எல்லாமே மாறி
இருந்தது...கர்த்தர் என்னை வேறு ஒரு மாற்றத்திற்கு ஆயத்தம் செய்தார்...
அதிசயமாக எல்லாம் புதிதாயின...பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின ...
திருநெல்வேலி அன்று புதிய
முகமாய் தெரிந்தது...பழைய நன்பர்கள் பலர் ஊரிலேயே இல்லை..
முகத்தில் மெள்ள மீசை
முளைக்க துவங்கிய காலம்...புதிய உணர்ச்சிகள்,வேலை செய்யவேண்டும்..எங்கே போய் வேலை தேடுவது...
பள்ளிக்கூட நாட்களில்
படிக்கத்தவறியது மண்டையில் உறைத்தது...நல்லா படிச்சிருந்தா மட்டும் கல்லூரியில் படிக்க
வைத்திருப்பார்களா?
என் குடும்பம் அதற்கெல்லாம்
தகுதியானது இல்லை..
பின்னே அதைப்பற்றி யோசித்து
என்ன பயன்,
சிலர் காலத்தை எதிர்த்து
போராடி வாழ்க்கையில் வெற்றியை சம்பாதிப்பர்...
சிலர் வாழ்க்கையை அதன்
போக்கிலேயே போய் நீண்ட தூரத்தில் கரையோரம் ஒதுங்குவர்...இதில் வலி இருக்காது, வசதியும் குறைவாக
இருக்கும்..
வாழ்வை எதிர்த்து போராடி
நீச்சலடித்தால் வேதனை அதிகம்...ஒருவேளை வெற்றி கிட்டலாம் அல்லது கிட்டாமல்
போகலாம்...
நான் இரண்டாம் இரகம்...
காலவெள்ளம் என்னை எப்படி
இழுக்கிறதோ அப்படியே போவேன்...நிச்சயமாக கரை ஒதுங்குவேன்...
இந்த காலத்தில் காலவெள்ளத்திற்கு கட்டுப்பட்டேன்.
பின்பு கர்த்தர் இழுத்த இழுப்புக்கு
ஒப்புக்கொடுத்தேன் ..அதை பின்னால் சொல்கிறேன்...
பேட்டையில் "குளோப்
ரேடியோ " கம்பெனியில் வெல்டராக வேலை கிடைத்தது...மாதம் 150ரூபாய் சம்பளம்...வேலை நேரம்
மாலை 6மணி முதல் இரவு பணிரெண்டு
மணிவரை..
பேட்டையில் இருந்து என் ஊர்
பதினைந்து கிலோ மீட்டர் இருக்கும்..
புதிய சைக்கீள் ஒன்றை
வாங்கினேன்..
இரவு பணி முடிந்து டவுன்
"லாலா சத்திர முக்குக்கு"அனேகமாக 12:30க்கு வருவேன்,
அங்கு ஒரு டீக்கடை
இருக்கிறது..அதில் அந்த இரவிலும் கூட்டம் இருக்கும்...
"சில்வர் டோன்ஸ் " என்ற
சினிமா கச்சேரி குழுவினர் தங்களது கச்சேரியை முடித்து விட்டு குழுவாக அங்கே டீ
குடிக்க வருவார்கள்...புதிய சினிமா பாடலை பற்றி விவாதிப்பார்கள்...அன்று
கச்சேரியில் நடந்த சுவையான சம்பவத்தை சொல்லி சிரிப்பார்கள்..
"வாரும் என் நேசரே "என்ற
நான் எழுதிய கதையில் ஆரம்பமே இந்த இடத்தில்தான் துவங்கும்..
அதில் சிகரட் குடிப்பதை பற்றிய ஒரு போட்டி
வரும் ,அது இந்த
இடத்தில் நடந்ததுதான்..
சரி
அவர்கள் பேசி சிரிப்பதை
கவனிப்பேன்..அப்போது எனக்கு இசை அறிவு என்பது துளியும் இல்லை..
எப்படியும் வீடு வந்து சேர
இரவு இரண்டு மணியாகும்...
ஒரு நாள் வழக்கம் போல இரவு
வீட்டிற்கு திரும்புனேன்..என் வீட்டில் என் சகோதரர்களுடன் மேலும் மூன்றுபேர்
ஜெபித்துக்கொண்டிருந்தனர்..
நான் சற்று
குழம்பினேன்..இதில் நான் கலந்துக் கொள்ளவா வேண்டாமா?
சரி கலந்து கொள்வோம் என
முழங்கால்படியிட்டேன்..அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியில் நிறைந்து அந்நியபாசை
பேசி ஆண்டவரை துதிக்கிறார்கள்...ஒருவர் பேசும் பாஷையை மற்றவர்
மொழிபெயர்க்கிறார்கள்..
இது அதிசயமான ஒன்று..
இதில் உள்ள நான்கு பேர்
இன்றும் போதகர்களாக இருக்கிறார்கள்...இதில் எதையுமே நான் கூட்டியோ குறைத்தோ சொல்லப்போவதில்லை..என்
வார்த்தைகள் சத்தியமானது..அதற்கு அன்று என்னோடிருந்த அந்த சகோதரர்களும்
கர்த்தராகிய ஆவியானவரும்
சாட்சிகள்..
ஜெபம் நடந்து
கொண்டிருந்தது..ஆவியானவர் வல்லமையாய் அசைவாடினார்...அதில் ஒரு சகோதரன்
என்னைப்பார்த்து கர்த்தர் உன்னை ஒரு பாடல் பாட சொல்கிறார்..நீ பாடு என்றார்...
நான் பாடல் புத்தகத்தை
திறந்து
"என்னையே கொடுத்தேன் உனக்காய்
என் மகனே அதை அறிவாயோ
நித்திய ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்...
நான் பாடினேன்..
நான் பாடிய பாடலால் நான்
உடைக்கப்பட்டேன்...
கர்த்தரிடத்தில்
ஒப்புக்கொடுத்தேன்..
மீண்டும் ஆவியானவர் அங்கு
வல்லையாய் இறங்குனார்..
மீண்டுமாக கர்த்தர் என்னிடம்
கேட்டார்..
உனக்கு என்ன வரம் வேண்டும்
கேள்..என்றார்..
நான் சொன்னேன்..எந்த
பாடலினால் நான் தொடப்பட்டேனோ.. அதைப்போலவே பாடும் வரமும் பாடல் இயற்றும் வரமும்
வேண்டும் ஆண்டவரே என்றேன்...
அப்போது என்வீடு" ஓடு
போட்ட வீடு"
திடீரென்று பலத்த மழை
பெய்தது.
.கல் மழை பெய்தது போன்ற சத்தம்,
கர்த்தர் சொன்னார்..
இப்போது முதல் நீ பாடலாம்,
,உன் வாயின் கட்டுகளை
அறுக்கிறேன்...(எனக்கு திக்கு வாய்)
பாடல் எழுதுவதற்கான
ஞானத்தின் ஆவியையும்,
குணமாக்கும் வரத்தையும்
தந்தேன்...
உன்னை அபிஷேகித்தேன்
என்பதற்கு இந்த மழையின் இறைச்சலே சாட்சி என்றார்...
இது மனிதர் உனர்ந்து கொள்ள
முடியாதது..
அடுத்த நாள் காலையில்
பேட்டைக்கு என் சைக்கிளில் செல்கிறேன்...என் உள்ளம் பாடுகிறது...இனம் புரியாத.
இராகங்கள் கேட்கிறது...
அந்த காலங்களில் நான் இசை பயிலவில்லை...ஆனால் பாடல் எழுதினேன்..
எங்கே போய் பாட?
தெரியாது
அந்த காலத்தில் எழுதிய
பாடல்தான்
"நோவா தாத்தா பேழையை பார்த்து'"
இது என் நூறாவது பாடல்...
என்னதான் கர்த்தர் ஞானம்
கொடுத்தாலும் நான் இசை கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா..
ஆகவே கிட்டார் கற்றுக்கொள்ள
துவங்கினேன். அப்போது எனக்கு வயது 23.
இப்போது கர்த்தர் என்னை வேறு
ஒரு தளத்திற்கு ஆயத்தப்படுத்தினார்..
தாவீதை அபிஷேகித்த தேவன்
அவனை அரசனாக்க எப்படியெல்லாம் வழி நடத்தினாரோ...
அது போல பாடல் வரத்தை தந்த
கர்த்தர் அதற்கான வாய்ப்பை தரவேண்டும் அல்லவா?
ஆகவே என்னை அதை நோக்கி
நகர்த்தினார்..
எனக்கு இப்போது வேலை நேரம் மாற்றப்பட்டது..
மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்துவிடும்.
ஒரு நாள் தற்செயலாக பாளையங்கோட்டை மார்க்கமாக
விட்டிற்கு போகலாம் என நினைத்து வந்து கொண்டிருந்தேன்.
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஏதோ இசை நிகழ்ச்சிக்காக ஸ்பீக்கர்
எல்லாம் கட்டி வேலை நடந்து கொண்டிருந்தது.
சரி பார்க்கலாம் என நினைத்து ஓரமாக என் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கு
போடப்பட்ட ஒரு சேரில் அமர்ந்தேன்.
நிகழ்ச்சி ஆரம்பமானது
இரண்டு கிட்டார்’ சில பாடகர்கள் (வெளிநாட்டுக்காரர்கள்)
அருமையாக
பாடினார்கள்.
அடுத்து நம்ம ஊர் வாலிபர்கள் சிலர் மேடைக்கு வந்தார்கள்.மொத்தம் எத்தனை பேர்
என்று எனக்கு
நினைவில்லை. அனால் இரண்டு பக்கமும் இரண்டு வாலிபர்கள் கிட்டாரோடு நின்றார்கள்
நடுவில் சில வாலிப யுவதிகள்..
பாட ஆரம்பித்தார்கள்
நான் சிலிர்த்துப்போனேன்..வெகு அருமை., நேர்த்தி.
பின் நாட்களில் அந்த குழுவோடு தோழமையாகும் வாய்ப்பை கர்த்தர் கொடுத்தார்.
இன்று வரை அந்த குழுவினரோடு பாச இணைப்பில் இருக்கிறேன்..
அந்த இசை நிகழ்ச்சி கிறிஸ்துவுக்கு வாலிபர் (YFC) குழுவினரால் நடத்தப்பட்டது..நன்பரை பின்
பற்றுவோம்(FRIENDS. AND FOLLOWERS) என்ற தலைப்பில்
இந்த நிகழ்வுக்கு பின் தினமும் மாலையில் என் பாதை மாறியது..பாளையங்கோட்டை
வழியாகவே வீட்டிற்கு வர ஆரம்பித்தேன்.ஏதாவது இசை நிகழ்ச்சி நடந்தால் காணலாமே என்ற
ஆவல்தான்
ஒரு நாள் ஒரு புத்தக கடை வாசலில் என் பள்ளியில் என்னோடு படித்த என் தோழன்
ஒருவரை கண்டேன்..
தனபால் என்பது அவர் பெயர்..என் இசைப்பயணம் இவரால் வேறு தளத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது...
ஒரு வேட்டி...ஒரு சைக்கிள்..அதில் ஒரு
சாப்பாடு தூக்குவாளி..இப்படி வேடிக்கையான மனிதனாக அவர் முன் காணப்பட்டேன்...
தனபால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திரு முல்லர் அவர்கள் புத்தக கடையில்
வேலைப்பார்க்கிறார்..
தினமும் மாலையில் அவரைக்காண அங்கு செல்வேன்...ஒரு நாள் அவர் மேசைமீது ஒரு
கிட்டார் இருத்தது..
அதை எடுத்து, நான் இயற்றிய
அன்பின் ஆழமே
அறியா உயரமே
வாயின் வசனமே
வாசனை வீசுமே
இந்த. பாடலை D majar ஸ்கேலில் பாடினேன்..
ஏய்....நிப்பாட்டு.....என்ன.. நீ கிட்டார் எல்லாம் வாசிக்க....
ஆமா...இந்த பாட்டு நல்லா இருக்கே...
சரி பாடு...நான் கிட்டார் வாசிக்கிறேன் என்றார்...
பாடி முடித்தேன்..
பாட்டு நல்லா இருக்கே..ஆனா நான் கேட்டது இல்லையே என்றார்
ஆமா...கேட்டிருக்க முடியாது ...இது நான் இயற்றியது...
என்னது.....நீயா....
நான் முழுதாய் சொன்னேன்...
தனபால் வியந்தார்...
சரி நான் உனக்கு சிலரை அறிமுகப்படுத்துகிறேன் என்று ,,அன்று இசையில்
முன்னணியில் இருந்த பலரை எனக்கு அறிமுகபடுந்தினான் என் நன்பன் தனபால்
என் இசை நன்பர்கள் பெறுகினார்கள்...
பாடல் ஊழியம் செய்யும் விக்டர் கிருபா தம்பதியர்..திரு விக்டருக்கு அப்போது
திருமணம் ஆகவில்லை..
தம்பி இம்மானுவேல் (வட இந்திய ஊழியம்)
சகோதரன் ரெஜினால்ட்
தம்பி Sam ..Bass கிட்டாரிஸ்ட்
தம்பி ஜெம் கபிரியேல்,வெளிநாட்டில் போதகராய்
இருக்கிறார்...மிகச்சிறந்த கிட்டாரிஸ்ட்..
சகோதரன் பிரபாகர்(நன்பர் சுவிஷேச ஜெபக்குழு)
அன்று அந்த YFC இசை நிகழ்ச்சியில்
அருமையாக
பாடிய
சகோதரி கிரிஸில்டா
சகோதரி பேபி
சகோதரி ஜெசிக்கா
சகோதரி ரோசி
சகோதரி, நிம்மி
சகோதரி கேர்லின்
அன்று Bass கிட்டார் வாசித்த ஜான்
சகோ..கிறிஸ்டி
சகோ..சிசில்
எனக்கு மிகவும் பிடித்த மேண்டலின் ஜெயக்குமார் அண்ணன் இன்னும் பலர் எனக்கு
நன்பராக காரணமாக இருத்தவர் என் நன்பன் தனபால்.அவர் மூலம் கிடைத்த
இந்த இணைப்பு முக்கியமானது.
அவர்
இன்று
சென்னையில் இருக்கிறார்...
மேற்கண்டவாறு நான் கூறிய எல்லோருமே நல்ல இசை அறிவு உள்ளவர்கள்...இவர்கள்
என்மீது அதிக பாசம் காட்டினார்கள்..இன்றும் அப்படியே,
அது மட்டுமல்ல என் பாடலை அங்கிகரித்தார்கள்...
அடுத்த நிலை
நாங்கள் வாலிபர்கள் தினமும் கூடி ஜெபித்தோம்...என் சகோதரன் ஒருவர் பாளை யோவான்
கல்லூரியில் BA பயின்றார் ..அவர் மூலமாக பாளையங்கோட்டை YFC யோடு பழக்கம்
ஏற்பட்டது...அப்போது YFC யில் செயலாளராக இருந்தவர் அண்ணன் கிங்ஸ்டன்
அவர்கள்..அவருக்கு உதவியாளராக சகோ..பாலசந்தர்..
நாங்கள் சகோ.பாலச்சந்தரோடு குளோரிந்தா ஆலயத்தில் சனிக்கிழமை தோறும் கூடி
ஜெபிப்பது வழக்கம்..
ஞாயிற்று கிழமை எதாவது கிராமத்து ஆலயத்திற்கு அவரோடு சென்று நிகழ்ச்சி
நடத்துவோம்..
வாலிபர்கள் சிலர் தங்களது சாட்சியை சொல்வார்கள்...
நான் என் பாடலை பாடுவேன்...
ஆக வாரம் தோறும் புதியப்பாடல்
இதை நீங்கள் வேடிக்கையாக கூட நினைக்கலாம்...நான் நினைக்கிறேன் கர்த்தர் என்னை
பாட பழக்கினார் என்று.
அப்போது IMSல் பணிபுரிந்த என் உறவுக்காரர் செல்வின்
சிரோன்மணி அண்ணன்; அவர்கள் எங்களிடம் திங்கட் கிழமை தோறும் IMSஅலுவலகத்தில்
ஜெபம் நடக்கும் நீங்கள் வாருங்கள் என்றார்...
நாங்கள் தவறாமல் சென்றோம்...
.
REVஜேசன் தர்மராஜ் ஐயா அவர்கள் அப்போது IMS காரியதரிசியாக
இருந்தார்கள்...அவர்கள் என்னை மிகவும் நேசித்தார்கள்..
ஒரு நாள் அவர்கள் தூத்துக்குடியில் (பாட்ரிக் ஆலயத்தில் என நினைக்கிறேன்
)அங்கு IMS க்கான கூட்டம் நடக்கிறது அதில் நீ பாட
வேண்டும் என்றார்கள் ..சரி என அங்கு அவருடன் சென்றேன்..
அங்கு ஒரு அதிசயம்.
நான் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் பார்த்த அதே குழுவினர் வந்திருந்தார்கள்...
அன்று நான் தனிப்பாடல் பாடினேன்.
கூட்டம் முடிந்தது..
நட்போடு பழகினார்கள்..
தொடர்ந்து எல்லா IMS கூட்டத்திலும் YFC வாலிபர்
கூட்டத்திலும் பாட ஆரம்பித்தேன்...
இன்னும் அடுத்த நிலை,
ஒலிப்பதிவு கூடத்திற்கு என்னை கர்த்தர் அழைத்துச் சென்றதுதான்
ஒலிப்பதிவு கூடம் என்பது சினிமாவில் பார்ந்திருக்கிறேன்...தலையில் ஹெட்போனை
மாட்டிக்கொண்டு கதாநாயகன் மைக் முன்னே நின்று பாடுவான்..
ஒலிப்பதிவு செய்யும் அந்த டேப் வட்டமாக. அவன் முகத்திற்கு மேல் மங்கியபடி
சுழலும்...
மக்கள் மயக்கத்தோடு அந்த காட்சியை பார்ப்பார்கள்..
அந்த காலத்தில் குலவனிகர்புரம் பெத்தேல் ஆர்பனேச் இயங்கி கொண்டிருந்தது..
பெத்தேல் பொறுப்பாளராக திரு சத்யா சார் இருந்தார்..அவரின் துணைவியார் திருமதி
பிளாண்டினா சத்தியா அம்மையார் அவர்கள் விஷ்வவாணி ரேடியோ நிகழ்ச்சியில்
சிறுவருக்காக ஒலிபரப்பபடும் ஒரு நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக இருந்தார்கள்..
அவர்களின் புதல்விகள் கிரிசில்டாவும், பேபியும் எனக்கு அறிமுகமானதில் இருந்து நான் அந்த
குடும்பத்தொடு ஒட்டிக்கொண்டேன்..
என் தம்பிமார் இரண்டுபேர்
உக்கிரன் கோட்டை ஜெர்மன் ஆர்பனேச்சில் படிக்கும் போது என் சகோதரர்களை கர்த்தருக்குள்
வழிநடத்தியது இந்த சத்யாசார் குடும்பத்தினர்..
சத்யாசார் அவர்கள் பலகாலம் ஆசிரியராக. உக்கிரன்கோட்டையில் பணியாற்றியவர்கள்...
இன்று வரை மாறாத பாசத்துடன் நாங்கள் இருக்கிறோம்...
சரி
சிறுவர் ஊழிய நிகழ்ச்சிகள் ...தூத்துக்குடி சின்ன கோயில் ஒலிப்பதிவு கூடத்தில்தான் பதிவாகும்..
நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்து சில நேரம் அதைப்பற்றி
அவர்களுக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள்..
நான் அதை வியந்து கேட்டுக்கொண்டிருப்பேன்..
எனக்கு ஒரு ஆசை...நம்முடைய குரலையும் ஒலிப்பதிவு செய்து
பார்த்தால் என்ன?
ஆனால் அதற்கான விலை ரொம்ப அதிகம்..அப்போ ஸ்டுடியோ வாடகை ஒரு மணி நேரத்திற்கு 75ரூபாய்..
எனக்கு ஒரு மாத சம்பளமே 150ரூபாய்தான்..
நெல்லைத்தமிழில் சொன்னால்..."விளங்கினாப்பலதான்"
என்ன செய்ய? ?
ஒரு யோசனை பிறந்தது...
நேராக சகோதரன் விக்டரிடம் சென்று விசயத்தை சொன்னேன்..
.அதாவது...
ஒரு முழுப்பாட்டுக்கூட வேண்டாம் ...ஒரு நாலு வரி மட்டும் ...அதாவது பல்லவி
மட்டும் பாடி ஒரு கேசட்ல பதிஞ்சா போதும்....என்றேன்...
விக்டர் சொன்னார்....ரொம்ப கஷ்டமாச்சே...அந்த சவுண்ட் இஞ்சினியர் ஒத்துக்கிட
மாட்டாரே.வில்லங்கமான ஆளுண்னே அவரு என்றார்...
விக்டர் சொன்னது தப்பே இல்லையென்று பின் ஒரு நாளில் உணர்ந்தேன்..
எல்லா ஸ்டியோக்களில் உள்ளவர்களும் தங்களை சோழபேரரசின் வாரிசாகவோ,,ராஜ ராஜ
சோழனின் வம்சாவழியாகவோத்தான் நினைத்துக்கொண்டிருந்தார்கள்...
ஒரு முறை நான் தூத்துக்குடி ஸ்டியோவிற்கு வேறு ஒருவருக்காக பாடபோயிருந்தேன்
...
ஒரு பாடலை ரிகர்சல் செய்து பாட தயாரான போது ஒலிப்பதிவாளர் இல்லை..
எங்கே என்று கேட்டோம்..
அவர் வேலை மாலை ஆறுமணியோடு முடிந்தது..ஆகவே போய்விட்டார் என்றார் அவர்
உதவியாளர்...
சொல்லவேண்டாமா.....
அது மட்டுமல்ல, அரசாங்க மின்சாரத்தில் வேலை செய்தால் அதற்கு
ஒரு மணி நேரத்திற்கு ஒரு விதமான
வாடகை..
மின்சாரம் இல்லாமல் போய் ஜெனரேட்டரில் ஒலிப்பதிவு செய்தால் அதற்கு கூடுதல்
கட்டணம் வசூல் செய்தார்கள்...
அடே.."...தன்னமிஞ்சி ஆடாதீங்கடா "என்று மனதார திட்டித்தீர்த்த
நாட்கள் உண்டு...
ஆக இந்த மாதிரி சூழ்நிலையில் என் குரலை எப்படி பதிவு செய்து பார்க்க,
விக்டர் சொன்னார் வரும் புதன் கிழமை எனக்கு ஒரு ரிக்கார்டிங் அங்கு
இருக்கு...நம்ம காலையிலேயே போயிடுவோம்...ஒலிப்பதிவாளர் வர எப்படியும் ஒன்பது
மணியாகும்...
நாம அவர் அசிஸ்டண்டுகிட்ட பேசி எப்படியாவது நம்ம வேலையை முடித்துவிடுவோம் என்றார்...
புதன்கிழமை வந்தது....
என் நிலமையை யோசியுங்கள், நான் பாடப்போகிறேன்...
வாவ் ...வட்டமான ஸபூல் என் முகத்திற்கு முன்னே சுற்றுவது போல கனவு...
எட்டு மணிக்கு எல்லாம் ஸ்டியோ சென்றுவிட்டோம்..
8:30க்கு உதவியாளர் வந்தார்..
விக்டர் மெதுவாக விசயத்தை மென்மையாக எடுத்துரைத்தார்...
அந்த உதவியாளர் கொஞ்சம் தயங்கினார்...பின்பு சிக்னலில் நாம் நிற்கும் போது
யாராவது பிச்சைக்கேட்டால் கொஞ்சம் இரக்கம் வைத்து ஒரு இரண்டு பத்தோ போடுவோமே அது
போல சரி என்று தலையசைத்தார்...
மைக் முன்னால் போய் நின்றேன்..
ஓகே...டேக்...
மானே மரையே எழுப்பாதே என்றீர்
மலைமீது குதித்தோடும் என் நேசரே
பனித்தூவும் காலம்
பறவைகள் கானம்
இளம்பூக்கள் வாசம்
என் தேவா வாரும்......
பாட்டு முடிந்தது,
இதுஎன் முதல் ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு கூடத்தின் பெரிய மோனோ ஸ்பீக்கரில் என் பாடலை கேட்டேன்..
சொக்கிப்போனேன்..
நம்ம சத்தமா இது ...கடவுளே..
நான் வியத்ததை பார்த்து கர்த்தர் நகைத்திருப்பார்...
இன்னும் இரண்டே வருடத்தில் நீ இரவும் பகலும் ஒலிப்பதிவு கூடத்தின் உள்ளேயே
உன்னை இருக்கச் செய்ய போகிறேனே .
இது என்ன பெரியக்காரியம் என சொல்லியிருப்பார்...
எனக்கெப்படி இது தெரியும்...அந்த பதிவு செய்த கேசட்டை சட்டைப்பையில்
வைத்துக்கொண்டு பல கனவுகளுடன் நெல்லையை நோக்கி வந்துகொண்டிருந்தேன்...
இரண்டு நாள் ஒலிப்பதிவிற்கு வாடகை கொடுத்து நம்மால் கேசட் வெளியிட முடியாது,
என்ன செய்வது?
அப்போது வழி தெரியவில்லை
நெல்லை திருமண்டலத்தில்
பேராயராக கனம் டேனியேல் ஆபிரகாம் ஐயா இருந்த காலத்தில்தான் நெல்லையில் கிறிஸ்தவ
இசை உலகம் வளர்ந்து பிரகாசிக்க முக்கிய நிகழ்வு ஒன்று நடந்தது..
திரு எமில் ஜெபசிங்
அவர்களின் முயற்சியால் TWR ன் ஒலிப்பதிவுக் கூடம் ஒன்று
நெல்லை திருமண்டல பிஷப் பங்களாவில் நிறுவப்பட்டது..
இந்த நிகழ்வு என்னைப் போல
உள்ளவர்களுக்கு "வரமாக "கிடைத்தது
கனவுப் பொருளாக இருந்த ஒன்று
கையில் கிடைத்தால் எப்படி இருக்கும் அதுபோல இருந்தது..இரண்டு கிலோ மீட்டர்
தூரத்தில் ஒரு ஸ்டுடியோ..அதிலும்
REV ஜோன்ஸ் அவர்கள் இதன்
பொறுப்பாளராக வந்தது இன்னும் வசதியாக இருந்தது..
இப்போது பேராயராக இருக்கும்
திரு பர்னபாஸ் ஐயா அவர்கள் அப்போது திருமண்டல வாலிபர் இயக்கத்திற்கு பொருப்பாளராக
இருந்தார்கள்.
அவர்கள் காலத்தில் வெளி வந்த
அனேக எனது பாடலில் கானாமல் போன ஆடு நானய்யா
மற்றும் பாதையோரம்
காத்திருக்கும் என்ற பாடல்கள்….இன்றும் விசேஷம்
வாலிபர் ஊழியம்
சிறுவர் ஊழியம்
தாய்மார் ஐக்கிய சங்கம்
VBS பாடல்கள் அனைத்திற்கும் நான்
பாடல் எழுதி பாடியும் இருக்கிறேன்
மற்றும் தனியார் பலர் அந்த
காலத்தில் இசை நாடா வெளியிட்டார்கள்..
தொடர்ந்து ஒலிப்பதிவு நடந்து
கொண்டே இருந்தது.
அனேகமாக பத்து நாளுக்கு ஒரு
முறை ரிக்கார்டிங்கில் பாட வேண்டியது இருக்கும்..
எத்தனை ஒலிநாடாவில் பாடினேன்
என்ற கணக்கு என்னிடம் இல்லை.
ஆனால் யாரிடமும் நான் காசு
வாங்கியதும் இல்லை..
சுமார் பதினைந்து வருடம் இப்படியே கழிந்தது..
மற்றவர்களுக்காக நான்
பாடினேன்…..
எனக்காக ஒன்றும் பண்ண
முடியவில்லை.
.
பணம் தடையாக இருந்தது..
நான் பாடவேண்டும்…
அது என் ஆல்பமாக
இருக்கவேண்டும்..
நிறைய வெளியிட வேண்டும்.
ஆனால் இப்பொது ஒரு
பாட்டுக்கு ஆர்டிஸ்ட் கூலி..அதன்பின் ஸ்டுடியோ வாடகை இப்படி பார்த்தால். நிச்சயமாக
தொடர்ந்து என்னால் இசைநாடா வெளியிடமுடியாது..
என்ன செய்ய?
அப்போதுதான் கம்யூட்டரில்
ஒலிப்பதிவு பண்ணலாம் என அறிந்தேன்….
சரி எப்படியாவது கம்யூட்டர்
வாங்க வேண்டும் என முடிவு செய்தேன்..
எனக்கு கம்யுட்டர் பற்றிய
அறிவு சுத்தமாக கிடையாது..
ஆனால் ஒரு நம்பிக்கை ..அது
மனிதர்கள் இயக்கும் வண்ணம்தானே வடிவமைத்து இருப்பார்கள்
முதலில் வாங்குவோம்.
அதன்பின் அதை இயக்குவதைபற்றி யோசிக்கலாம் என முடிவு செய்தேன்..
கம்யூட்டர் கடையில் போய்
விலைகேட்டேன் நாற்பதாயிரம் ருபாய் என்றார்கள்…..அதுவும் செலிரான் கம்யூட்டர். அதனடைய மெம்மரி அளவு மிக
குறைவு..அதாவது 125 எம்பி..
எனக்கு இது ஒலிப்பதிவிற்கு
போதுமா என்று எல்லாம்கூட தெரியாது.
வாங்க வேண்டும்
.இனி யாரிடமும் போய்’ யாசகம் கேட்க கூடாது.
அதுவரை பாடவும் வேண்டாம் என்
முடிவெடுத்தேன்…
ஆனால் இவ்வளவு பணத்திற்கு
எங்கு போக..?
உழைக்க வேண்டும் .. உழைக்க
வேண்டும்..
அப்போது என்னிடம் வெல்டிங்
கம்பெனி இருந்தது.
சின்ன கடை ஒன்று ஊரில்
இருந்தது..
மியூசிக் வகுப்பும்
தொடங்கியிருந்தேன்.
காலை நான்கு மணிக்கு டவுன்
மார்க்கட் போய் காய்கறி வாங்க வேண்டும். பின்பு ஒன்பது மணிக்க வெல்’டிங் வேலை ஆரம்பிக்க
வேண்டும்..
மாலையில் இசை வகுப்பக்க
போகவேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரும் மட்டுமே உறக்கம்.
இந்த நேரத்தில் என் மனைவியை
பற்றி கட்டாயம் கூற வேண்டும்.
அவர்கள்
அருமையான
விசுவாசி.
.பாடலை பற்றியோ .இசையை
பற்றியோ எதுவும் தெரியாது..
ஆனால் என் பாட்டிற்காக எல்லா
உதவியும் செய்வார்..
வீட்டை பற்றிய எந்த கவலையும்
எனக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்..
இது எனக்கு பெறுத்த மன
அமைதியை கொடுத்தது.
ஒரு இசைக் கலைஞனுக்கு மன
அமைதிதான் மிக முக்கியமான ஒன்று
என்ன உழைத்தாலும் கையில்
காசு மிஞ்சவில்லை..
அகவே என் மனைவியிடம்
சொன்னேன். நாம் LIC யில் என்
பாலிசியில் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்குவோம் என்றேன்..
இது என் மகளுக்காக
சேர்க்கும் பணம்..
ஸ்டுடியோ ஆரம்பித்து சம்பாதிக்க
நிச்சயம் முடியாது..
அப்டியானால் இது எதற்கு ?..
நான் என் இஷ்டப்படி பாடல்
பாட….
உலக பிரகாரமாக யோசித்தால்
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..
என் மனைவி என்னை ஆழமாக
பார்த்தாள்.
பின் சரி என்றாள்..
LIC பணம் கைக்கு வந்தது.
ஒரு கம்யூட்டரும் அதற்கு
வேண்டிய சாமான்களும் வாங்கி என் வீட்டிற்கு கொண்டு வந்து என் மேசையில் வைத்தேன்….
ஆமா இதை ஆன் செய்வது எப்படி.?
கம்யாட்டர் கடைக்கு போன்
பண்ணி விபரம் கேட்டேன் .போனில் அவர்கள் சொன்னதை செய்தேன் கம்யூட்டர் உயிர் பெற்றது….
கம்யூட்டர் மவுசால்
புராக்கிராமை கிளிக் செய்தேன்
.மென் பொருள் ஒவ்வொன்றின்
தலைப்பும் வந்தது.
அதை பார்த்துக் கொண்டே
வந்தேன். எல்லாவற்றிலும் கடைசியில் டிலிட் என எழுதப்பட்டு இருந்தது
இது என்ன டிலிட்..?
அதவும் ஏதோ ஒரு மென்
பொருளின் தலைப்பு என
நினைத்தேன் .
அதன் பொருள் எனக்கு
புரியவில்லை..
ஆகவே அதையும் ஒரு கிளிக்….
.
இப்படியே எல்லா டிலிட்டையும்
வெகு ஆர்வமாக கிளிக் செய்ய கம்யூட்டர் மென் பொருள் சகலமும் காலியாகி மானிட்டர்
வெறுமனே வெண்திரையானது..
என்ன இது.?. ஒன்றையும் காணுமே என்று
அடுத்த நாள் கம்யூட்டர் கடைக்கு போன் செய்து விபரம் சொன்னேன்..
சரிதான் புரிகிறது… .நீங்க எல்லாவற்றையம்
அழித்தவிட்டீர்கள் என்றார்..
அடக்கடவுளே. டிலிட்னா அழி என்று அர்த்தமா.?
இப்போ புலிவால் பிடித்த
கதையாகிவிட்டதே…..
இந்த லட்சனத்திலே எப்படி
ஒலிப்பதிவு செய்வது…….
கவலையோடு ஒரு வாரம்
கடந்தது..
அந்த கம்யூட்டரை பார்த்தாலே
பயமானது.
மொத்தமா ஒரு லட்சம் காலி
பண்ணிவிட்டேனா.?
மனசு வலித்தது
ஒரு நாள் காலையில் என் கம்பெனிக்கு சென்றேன். அங்கு எனக்கு
தெரிந்த தம்பி ஒருவர் உட்கார்ந்திருந்தார்..
எனக்கு மனதிற்குள் வெளிச்சம் உதித்தது..
தெரியாத ஒரு வேலையை ஆரம்பித்தால் அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் மன
கஷ்டத்தையும் தாங்கத்தானே வேண்டும்..
என் கம்பெனியில் இருந்த அந்த தம்பி ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு
இருந்தான்..
அவனுக்கு சிலரிடம் இருந்து தப்பிக்க ஒரு மறைவிடம் தேவைப்பட்டது..அந்த சமயம்
நெல்லையில் காவல்துறை அதிகாரியாக (AC)இருந்தவர் எனது நன்பர்...
அவரிடம் இந்த தம்பியை கொண்டுபோய் நிறுத்தி அவன் சிக்கலில் இருந்து
காப்பாற்றினேன்..
இவரது பிரச்சனை முடிவுக்கு வர ஒருமாதம் ஆகியது...அதுவரை பாதுகாப்பாக என்
வீட்டில் இருந்தான்..
அந்த நேரங்களில் என் மகனுக்கு கம்யூட்டர் இயக்குவது, ஒலிப்பதிவு
செய்வது இதை பற்றி சொல்லிக்கொடுத்தான்,
ஒருவருடம் இதற்காக தனியாக ஒதுக்கினேன்..
மெல்ல மெல்ல எல்லாம் சரியானது..
அதன் பின் நிறையபாடல்கள் என் சொந்த இடத்தில் பதிவு செய்தேன்..அது வியாபார
ரீதியாக வெற்றி பெறவில்லை,. ஆனால் பாடல்கள் சேர்ந்தது..
எனக்கு தேவையான அளவு நானும் கற்றுக்கொண்டேன்...
காலம் மெல்ல மாறியது..
கேசட் காலம் முடிந்து
CD வந்தது
பின் அதுவும் காணாமல் போனது..
இப்போது யாரிடமும் CDபிளேயர் இல்லை...இனி யாருமே பாடல் தொகுப்பு
வெளியிட முடியாது..
இந்த மாற்றம் அனைவரையும் சமநிலைபடுத்தியது..
என் மகனுக்கு திருமணமானது..என் பூர்வீக வீட்டை அவனுக்கு கொடுத்துவிட்டேன்...
பழைய வீடும் ஒலிப்பதிவு கூடமும் இடிக்கப்பட்டது..
புதிதாக வீடும் ஒலிப்பதிவு கூடமும் அவனுக்காக கட்டப்பட்டது.
நான் தனியாக குடிபெயர்ந்தேன்..
மீண்டும் என்னிடம் எதுவும் இல்லாமல் போனது..
மீண்டும் எனக்கென கம்யூட்டர் ,தரமான கீபோர்டு எல்லாம் சேகரித்தேன்..
இதற்கும் சில வருடம் ஆனது...
இப்போது எல்லாமே நிறைவானது..என் YOUTUBE. சேனலில் என்
பாடல்களால் நிரப்புகிறேன்...
என் மகள் அதை கவனிக்கிறாள்
கர்த்தரை நேற்று பாடினேன்
இன்றும் பாடுகிறேன்
நாளையும் பாடுவேன்
அதுவும் புதிய புதிய பாடலினால்..
இந்த கட்டுரையை எதற்காக எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை
அழைத்தவர் உண்மையுள்ளவர்.அவரே நடத்துகிறார், நடத்துவார்..
ஆகவே
என் பாடல் பயணங்கள் முடிவதில்லை
நன்றி
இனிய ஸ்நேகமுடன்..
என் இசை பயணத்தை பற்றிய கட்டுரையை முடித்து விட்டேன்..யாருக்காக அல்லது
எதற்காக எழுதினேன் என தெரியவில்லை.எல்லோர் வாழ்வும் இனிமையானதுதான்...
இது என் வாழ்வின் ஒரு பகுதி, இப்படி நிறைய கிளைகள் இருக்கிறது..
நமக்கு இக்கட்டில் உதவிய ஆண்கள்..பெண்கள் இவர்களை அடிக்கடி நினைப்பேன்...
அற்புதமானவர்கள்,
இவர்களை சொல்லலாம்,
Soulwinners குழு பிறந்ததை தனியாக எழுதலாம்..அது இன்று
வரை அதிசயம்..
கர்த்தரிடத்தில் நாம் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை..சரியோ,தவறோ,கர்த்தர்
உண்மையை விரும்புகிறார்...அது ஓரளவு என்னிடம் இருக்கிறது என நம்புகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக