சனி, 27 செப்டம்பர், 2025

                               கட்டளை எண் ஆறு

கத்தி வாங்கணும். அதுவும் மடக்கு கத்தியா இருந்தா ரொம்ப வசதி .

சரியா அவன் வயிற்றில இடது பக்கமா குத்தி வலது பக்கமா இழுக்கணும்..கண்டிப்பா இத செய்தே தீரணும்..இனி எனக்கு வாழ்க்கையே இல்லையே. மொத்த பணத்தையும் அவங்கிட்ட கொடுத்து விட்டேன்.

 

இருபத்தி ஐந்து வருட உழைப்பில் கிடைத்த பணம்.

லேத் மிஷின்ல இரவும் பகலுமா நின்னு சம்பாதிச்ச பணம்.

ஒரு நாள் கம்பெனிக்காரன் உனக்கு வயசாயிட்டு. வேலைய விட்டு போன்னு சொல்லி அது வரை சேமிச்ச பணத்த எல்லாம் கையில கொடுத்து அனுப்பிட்;டான். 


நான் வேலையில சேரும்போது அந்த காலத்தில மாத சம்பளமே நூற்றம்பது ரூபாதான்..கடைசிய நான் வாங்கினது இருபதாயிரம் ரூபா. ஆகவே ரொம்ப கொஞ்சமா சில லட்சங்கள் கிடைத்தது..


ரிட்டையர்டு ஆவதற்கு சரியா ஒரு வாரத்துக்கு முன்னே முத்துப் பாண்டிய கம்பெனி கேண்டில்ல சந்திச்சேன்.

அவன்தான் முதல்ல பேசினான்..


ஆசீர் அண்ணே.. என்ன.. முகம் வாடுனாப்பில இருக்கு.

ஒன்னும் இல்லப்பா.

அடுத்த வாரம் ரிட்டையர் ஆவுதீங்கப் போல…

 

ஆமாப்பா.. அத நெனைச்சாதான் கவலையா இருக்கு..


அதான் மொத்தமா பிஎப் பணம் கிடைக்கும்ல..

கிடைக்கும்.. செக்களவு பொண் இருந்தாலும் செதுக்கி தின்னா எத்தனை நாளைக்கு தாங்கும்…

 அதுவும் சரிதான்னே…

உனக்கும் சர்வீஸ் முடீயுற லெவல்ல இருக்குமே…

 

ஆமா.. ஆமா.. நாம இரண்டு பேருக்கும் ஒரு பத்து நாள் முன்ன பின்ன.. அவ்வளவுதான்…

 

ஆனா முத்துப்பாண்டி முகத்தில கவலையே இல்லையே..

எப்பவுமே அவன் டிப் டாப்பாத்தான் வருவான்..புது பைக் வச்சிருக்கான். கையில பெரிய சைஸ் மோதிரம் போட்டிருப்பான். 

ஒரு வேளை வசதியான வீட்ல பிறந்திருக்கலாம்..


 ஆசீர் அண்ணே. பணம் பத்திரம்.யாரு கிட்டேயும் மொத்தமா கொடுத்திராத. 

நான் சொன்னது உன் பிள்ளைங்கள பத்தி ..

பணம் உன் கையில இருந்தாதான் மதிப்பாங்க இல்லைன்னா அவ்வளவுதான் திரும்பிக் கூட பார்க்கமாட்டாங்க..


உண்மைதான் பாண்டி..இப்பவே யாரும் வர்றதில்ல.

ஆமா நீ என்ன பிளான் வச்சிருக்க…


எனக்கு என்ன கவலை. கையில தொழில் இருக்கு.அத அப்படியே கண்டிணியூ பண்ண வேண்டியது தான்.


என்ன தொழில் பாண்டி..

அதான் குiயெnஉந.

 அப்படின்னா.?

அதான் பணத்த வட்டிக்கு விடுறேன். 

ஓ..அப்போ ஏற்கணவே நீ தயாராத்தான் இருக்கே…


ஆமா. எனக்கு கவலையில்ல..பார்த்துக்கிடலாம்…

பாண்டி…வட்டின்னா எவ்வளவு..?

அது கொடுக்கிற அமௌண்ட பொறுத்தது. 

லட்சம்னா.? அஞ்சு பைசா..அதுக்கு கீழேன்னா பத்து பைசா.


 நான் கணக்கு பார்த்தேன். என் கையிலிருக்கும் பணத்தை மொத்தமாக வட்டிக்கு விட்டால் கிடைக்கும் வட்டி பணத்தை வைத்து நிம்மதியாக மாதத்தை கடத்தலாமே…

ஆனா யாருகிட்ட கொடுக்கிறது..


பாண்டி.. அப்படி யாருக்கும் பணம் தேவைப்படுதா.?


ஏதுக்குண்னே.. நீ வட்டிக்கு விடப்போறியா.? தேவையில்லாத ரிஸ்க்..உன்னால கொடுத்த பணத்த திரும்ப வாங்கவே முடியாது..இந்த தொழில பத்தி உணக்கு என்ன தெரியும்.?

கொடுக்கும் போது நம்ம முகம் வேற. வாங்கும்போது நம்ம முகம் வேற.


அதப்போல அவனுக்கும் வாங்கும்போது அவன் முகம் வேற.

நாம திருப்பி வட்டி கேட்கும்போது அவன் முகம் வேற.

ஒன்னு நம்ம கால்ல விழுவான்.. இல்லன்னா போலிஸ் மூலமா நம்ம கழுத்து பிடிப்பான்…எல்லாத்தையும் சமாளிக்கணும்..

நாம அவன அடிச்சோம்னா… அதோட கொடுத்து பணத்த மறந்திட வேண்டியது தான்.. 

மிரட்டணும்…அடிக்க கூடாது….ரொம்ப வறுமையில இருக்கவனுக்கு கொடுக்கவே கூடாது…

அரசாங்க வேலை பார்க்கிறவன்கிட்ட ஓரளவு வாங்கிப்புடலாம்..

இது தினமும் கத்தியில நடக்கிற சமாச்சாரம்….

ஆசீர் அண்ணே இதப்பத்தி நினைக்காதே….


இல்ல பாண்டி கொஞ்சம் யோசி. நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு பார்க்கலாம்..


சரி உன் இஷ்டம்…


நான் ரிட்டயர்டு ஆகி ஒரு வாரம் கழிச்சி பாண்டி என் வீட்டுக்கு வந்தான்…ஒரு நல்ல பார்ட்டி இருக்கு நீ கொடுக்கியாண்னே.. நீ இல்லன்னா. நான் கொடுத்திருதேன்..

இரண்டு மாசம்தான் டைம்…

மூணாவது மாசத்தில பணத்தை திருப்பி தந்திடுவாங்க. ரொம்ப டீசண்டான பார்ட்டி. என்ன சொல்ற..?

 

பாண்டி எனக்கு இது புதுசு. மொத மாசம் நீ வாங்கி தந்திடு..இரண்டாவது மாசம் நான் போய் வாங்கிக்கிடுதேன்..சரியா..


சரி….அண்னே இது உனக்காத்தான் செய்றேன்..எனக்கு இதுல எந்த லாபமும் இல்ல..அத புரிஞ்சுக்கோ..

 

சரி..சரி பாண்டி உன்ன பத்தி எனக்கு தெரியாத.

 

மொத்த பணத்தையும் ஒரு பேப்பர்ல வச்சி ஒரே கட்டா கட்டி கையில கொடுத்தேன். கொண்டு போயிட்டான்.


முப்பது நாளை கடத்தியது எனக்கு திக் திக் தான்..

சரியா முப்பதாவது நாள் பாண்டி வந்தான்…

ஆசீர் அண்னே . வா..போய் வட்டி பணத்த வாங்கலாம். என்றான்.

 நானும் போனேன்.. திருநெல்வேலி டவுன் பக்கம் ..பெரிய வீடு…டிசண்டான குடும்பம் போல. 

போன உடனே பணத்தை கொடுத்துட்டாங்க.

பாண்டி வாங்கி வீட்டுக்கு வெளியே வந்து என்னிடம் பணத்தை கொடுத்துவிட்டான்..

 

சரி ஆசீர் அண்ணே..என் வேலை முடிந்து விட்டது.

 இனி உன்பாடு.. பணம் பத்திரம் என்றான்..


அடுத்த மாதம் முப்பது நாள் கழித்து பணத்தை வாங்க அதே வீட்டுக்கு போனேன். வாசலில் நின்று அழைப்பு மணியை அடித்தேன்…சில விணாடிகள்….யாரும் வரவில்லை..மீண்டும் அழைப்பு மணி பொத்தானை அழுத்திப் பிடித்தேன்…ம்….அசைவே இல்லை. 

ஏன் ?….முன் கதவை பார்த்தேன்…கதவு பூட்டப்பட்டிருந்தது… ஆள் இல்லை….


எனக்கு திக்கென்றிருந்தது…

.கடவுளே..ஒரு வேளை பக்கத்தில் எங்காவது சென்றிருக்கலாம்….


பாண்டிக்கு போன் செய்தால் விஷயம் தெரியும்..பாண்டிக்கு போன் செய்தால் ரிங் அடித்து முடிந்தது…

கடவுளே.. சரி நாளை வரலாம்..

அடுத்த நாள் போனேன்.கதவு திறக்கப்படவில்லை.

இருபது நாள் கழித்து அந்த வீடு திறந்திருந்தது..

 

மணியடித்ததும் யாரோ வந்தார்கள

சார்..இருக்காங்களா..?

நீங்க யாரு…?

 நான் வந்து….பாண்டி இருக்காருல்லா அவரு பிரண்ட்…

 சரி..

நான் பணம் கொடுத்திருந்தேன்.

 யாருகிட்ட.?

இங்க இருக்கிறவங்ககிட்ட..

இது என்ன பேச்சி…யாருகிட்ட கொடுத்தீங்க. பேரைச் சொல்லுங்க

 

போன மாசம் வந்து வட்டி பணத்த நானும் பாண்டியும் வந்து வாங்கிட்டு போனோமே…

 யாரு அந்த பாண்டி.?

 அதான் சொன்னேனே ..என் பிரண்ட்..

 

உங்க பிரண்ட பத்தி நான். கேட்கல.. நீங்க சொல்றது எனக்கு புரியல..


போன மாசம் இந்த வீட்ல இருந்தவங்க யாரு..?


அது வேற ஒருத்தங்க. அவங்க காலிபண்ணிட்டு போயிட்டாங்க..

 

எங்க போனாங்க…?

 அது தெரியாது?

 அப்போ என் பணம்.?

என்ன பணம்? 


அவங்க என்கிட்ட வட்டிக்கு பணம் 

வாங்கியிருந்தாங்க.

 

ஓகே.நீங்க போலிசுக்கு போங்க…தயவு செய்து இங்க வராதீங்க..

நாங்க வேற .நீங்க…ம் உங்க கிட்ட பணம் வாங்கியது நாங்க இல்ல…

 ஆனா இந்த வீடுதானே…

 யோவ் போய்யா,? நான் போலிச கூப்பிடவா.


பாண்டிக்கு போண் செய்தேன். சுவிட்ச் ஆப் என்றது…

சரி நானே வாரேன்…

பாண்டி வீடு பேட்டையில எனக்கு தெரியும்....என் பழைய டிவிஎஸ் 50 தானாகவே பேட்டையை நோக்கி ஓடியது.. என்ன செய்ய..?பணம் கிடைக்குமா?

இனி நான் பிழைப்புக்கு என் செய்ய.? கடவுளே

 பணத்தை வட்டிக்கு கொடுத்தது தப்புதான்…அதுவும் பாண்டிய நம்பியது மகா தவறு..

இனி என்னால வேலை செய்து பிழைக்க முடியாது. முட்டு தேய்ந்து விட்டது. நடந்தால் வலிக்கிறது..

மனது அழுகிறது.. மாசாமாசாம் என் மனைவிக்கு மருந்து வாங்கவே இரண்டாயிரம் ரூபாய் வேண்டுமே..

மருந்து சாப்பிடலன்னா அவா செத்துப்போயிடுவா…கடவுளே 

 பணம் இல்லாமல் என்ன செய்வேன்..


பாண்டி வீட்டை கண்டுபிடிப்பது எனக்கு வெகு சுலபம்..வந்துவிட்டேன்..

ஆனால்

 இங்கேயும் வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் கேட்டேன்.

 

யாரு பாண்டியா..? அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்களே..


அப்போ இது சொந்த வீடு இல்லியா.?

 

சொந்த வீடுதான் .வித்துட்டாங்கன்னு கேள்வி..

 சரி..இப்போ எந்த ஊர்ல இருக்காங்க.


தெரியாதுங்களே..


திரும்பிவிட்டேன். இப்போ ஆறு மாசம் ஆச்சி. பாண்டிய கண்டு பிடிக்க முடியவில்லை..

போலிசுகிட்ட போகலான்னு பார்த்தா . பலரும் பலத சொல்றாங்க. 

 

பாண்டி மாதிரி ஆளுங்க எல்லாம் சுலபமா தப்பிடுவாங்க..போலிசுக்கு பணத்த வெட்டுவாங்க. கோர்ட் கேசுன்னு அலைய விடுவாங்க..கடைசில ஒரு…புண்ணாக்கும் கிடைக்காது…

 

அப்போ என்ன செய்ய..நானே தேடுவேன்..என்னைக்காவது என் கையில சிக்கினா…அந்த இடத்திலேயே போட்டுத்தள்ளிட வேண்டியது தான்..

 இப்போ முதல்ல அரையடி நீளத்தில ஒரு கத்தி வாங்கணும்..அது மடக்கு கத்தியா இருந்தா நல்லது. அவன் வயித்தில இடது பக்கத்தில இருந்து ஒரே குத்தா குத்தி வலது பக்கமா இழுக்கணும்..

சிக்குவானா..? சிக்கிவிட்டான்…எனக்கு அவன் இருக்கும் தெரிந்து விட்டது..

      கட்டளை எண் ஆறு

           இரண்டாம் பாகம்..

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஒரு டீக்கடை இருக்கிறது.அதில் 

டீக்குடித்துக் கொண்டிருக்கும்போது என்னோடு வேலை பார்த்த சரவணனைப் பார்த்தேன்.

அவனுக்கு என் கதை முழுதும் தெரியும் ..

அவன் என்னைப் பார்த்தவுடனே கொட்டித் தீர்த்து விட்டான். 

 ஆசீர் உனக்கு விஷயம் தெரியுமா?. இப்போ ஒரு மணி நேரத்திற்கு முன்னே பாண்டியை பார்த்தேன்..

எனக்கு வியர்த்தது…

.எங்கப்பா பார்த்தே?

 கேடிசி நகர்ல  ரோட்டு ஓரத்தில தென்புறமா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. 

அதுல இருந்து வடக்க பார்த்து போனா ..ஒரு அரை மைல்ல ஒரு போட்டோ ஸ்டுடியோ வரும்..அதுக்கு எதிரே உள்ள தெரு..


உள்ள போனா..ஒரு சாய்ந்த காண்ட் போஸ்ட் இருக்கும்.. அத ஒட்டினால உள்ள வீடுதான்..போ..போ….

 என்னை விரட்டினான்…

ஆஹா ..மாட்டினான்…அந்த கத்தி வேணுமே..

அது வீட்ல தானே இருக்கு..எப்படியும் இன்னைக்கி இரண்டில ஒன்னு பார்த்துர வேண்டியது தான்…வேகமாய் வீட்டிற்கு வந்தேன்..


என் மனைவி என்ன இவ்வளவு அவசரம்..?

 ஒன்னும் இல்ல..கத்தியை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டு மீண்டும் டீவீஎஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்து அடுத்த அரை மணி நேரத்தில் கேடிசி நகர் பக்கம் வந்து விட்டேன். 

எனக்கு இப்போ படபடப்பு அதிகமாகியது..

பாண்டி என்ன செல்வான்.

.நீ யாருன்னே தெரியாதுன்னு சொன்னா..?..உன் கிட்ட நான் பணம் வாங்கியதற்கு எதாவது ஆதாரம் இருக்கான்னு கேட்டா..?

அவன் என்ன சொல்வான்…நான் என்ன செய்ய வேண்டும்…?

கத்தியை ஒரே சொருகா சொருகிடவா.?

 

அவன் செத்துப்பேயிட்டா. போலிஸ் என்னை விடுமா..? எத்தனை வருடம் தண்டனை கிடைக்கும்..?

 சாராள்… என் னைவி ஒத்தயில என்ன செய்வா? பிள்ளைங்ககிட்ட கையேந்தி நிற்பாளா.?

என் வழக்குக்கு வக்கீல் பீஸ் யாரு கொடுப்பா?

 

சே.. என்  கோபம் இப்போ பயமாகியது..அதுக்காக அப்படியே அவனை விட்டுவிடவா.?

 கொஞ்சமாவது காயப்படுத்த வேண்டாமா.?

சரவணன் சொன்ன வீட்டை எளிதில் கண்டு பிடித்துவிட்டேன்…

வாசல் பக்கமாக போய் நின்றேன்..

 யாரு நீங்க என்ன வேணும்..?

பாண்டியை பார்க்கணும்..

 பாண்டி சித்தப்பா ஒரு ஆள பார்க்க வெளியே போயிருக்கார் .ஆமா..நீங்க யாரு…

 நான் அவரு கூட வேலை பார்த்தவன்…என் பெயர் ஆசீர்…

 அட.. உங்கள பார்க்கத்தான் போயிருக்காரு..

 என்ன பார்க்கவா.?

ஆமா போயி ஒரு முக்கால் மணி நேரம் இருக்கும்….

எதுக்காகன்னு எதாவது சொன்னாரா…

 இல்ல….

சரிம்மா நான் வாரேன்…


எதுக்கு என்னை தேடி வீட்க்கு போறான்..பணம் தொலைந்து விட்டது என்னை மன்னித்துவிடு என்று அழுவானா? 

இல்ல ..இன்னும் ஆறு மாசத்தில உன் பணத்த எப்படியாவது தாரேனன்னு சொல்லிட்டு போக வந்திருக்கானா ? 

என்னால் யோசிக்கவே முடியவில்லை…

.இப்போது கோபம் இல்லை…வேகம் இல்லை..தளர்ந்து விட்டேன்..என் வீட்டுக்கு அருகே வர வர இதயம் படபடத்தது…வேர்வை ஆறாக ஓடியது….

என் வீட்டிற்கு முன் ஒரு பைக் நின்றது..அது பழைய பைக்….இது பாண்டியுடையது இல்லையே….

என் வண்டியை ஆப் செய்து விட்டு வீட்டிற்குள் நூழைந்தேன்..

அங்கே தாமஸ் அண்ணாச்சி பாண்டியோடு எதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தார்…நான் உள்ளே வந்ததும் இருவரும் அமைதலாயினர்..

 பாண்டி பேச வில்லை. ஒரு பையில் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை எடுத்து என் அருகே வைத்தான்.

நான் அதைப் பார்த்தேன்.

 பாண்டி பேசலானான்…


ஆசீர் அண்ணே.. முதல்ல என்ன மன்னிச்சிரு.. 

உன் பணத்துக்கு அசலும் வட்டியும் அந்த வீட்ல கொடுத்தாங்க..அதுவும் அட்வான்சா இரண்டு நாளைக்கு முன்னே..

அவங்க அவசரமா சென்னைக்கு போறாங்களாம்..அதனால இத உடனே செட்டில் பண்ணிட்டாங்க…

நானும் அத உன்கிட்ட கொடுக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள் என் மனைவிக்கு மாரடைப்பு வந்து சென்னைக்கு அவசரமா போயிட்டேன். 

அவசர பயணத்தில என் செல்போன் காணாம போயிட்டு…

அங்க போனா என் மனைவிக்கு இரண்டு ஆப்பரேசன்..உதவிக்கு யாரும் இல்ல. 

அவா கண் முழிக்கவே ஐந்து மாசம் ஆயிட்டு..

இப்போதான் கொஞ்சம் பரவாயில்ல..நிறைய பணம் காலியாயிட்டு…

வீட்ட கூட வித்திட்டேன்…என்ன இருந்தாலும் இந்த வட்டி பணம் நிற்காது ஆசீர் அண்ணே…


உன் பணத்த அவசரத்துக்கு எடுத்து செலவு பண்ணிட்டேன்..அப்புறமா அதுக்கு பதில பணத்த புரட்டி உன்கிட்ட கொண்டு வந்து  சேர்க்க இவ்வளவு நாளா ஆயிட்டு…இது எனக்கு மட்டும் இல்ல உனக்கும் சோதனை காலம்…நீ பயந்திருப்போ…உன்ன ஏமாத்திட்டதா கூட நினைச்சிருப்பே..அது தப்பே இல்ல…


சரி இதுல உன் பணம் மொத்தமா இருக்கு. என்னால முடிஞ்ச அளவு வட்டியோடு இருக்கு..உனக்கு நான் ஒன்னு சொல்லவா. நீ என்ன பிசினஸ் வேணும்னாலும் செ;ய்.ஆனா வட்டிக்கு மட்டும் பணத்தை விட வேண்டாம் .இத கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம்..

 பாண்டி போய்விட்டான்.

தாமஸ் அண்ணாச்சி.பேச ஆரம்பத்தார்.

 

ஆசீர் ..உன் மனைவி எல்லாத்தையும் சொன்னா.

நீ ஒரு கிறிஸ்தவனா இருந்து கொண்டு இப்படி செய்யலாமா.? 

நீ செய்த இந்த காரியத்தில எங்காவது விசுவாசம் இருக்கிறதான்னு பார்.

கர்த்தர் உன்னை அப்படியா கைவிட்டுவிடுவார்….என்னப்பா நீ…

புதுசா கத்தில்லாம் வாங்கி வச்சிருந்தது பாண்டிய கொலை செய்யவா.?..

அப்போ மனதளவில் அவனை குத்தி கொன்றுவிட்டாய் இது காயினின் ஆவி…ஆனா.. கிறிஸ்துவை அறியாத பாண்டி எவ்வளவு நியாயமாய் நடந்து கொண்டான் பார்…

 பாண்டி உண்மையிலே யோக்கியன்…ஆனா அவன் செய்த தவறு உன்னிடம் தன் நிலையை எப்படியாவது சொல்லி இருக்கணும்…ஆனா அவன் சூழ்நிலை எப்படி இருந்ததோ.?

 

பத்துக் கட்டளையில் ஆறாவது கட்டளை கொலை செய்யாதிருப்பாயாக. 

அற்ப பணத்துக்காக அவனை கொல்ல நினைச்சியே..

நீ நினைத்தபடியே பாண்டி உன்னை ஏமாற்றி இருந்தாலும் கர்த்தர் உன்னை கைவிட்டு விடுவாரா.?

 வாரந்தோரும் பிரசங்கம் கேட்டு பைபளை வாசித்தாலும்  உன் சக தோழனை கொல்ல நினைத்தது எவ்வளவு பெரிய மோசமான குணம்…நீ திரு முழுக்கெடுத்தது , கர்த்தரின் பந்தியில் பங்கொடுத்தது எல்லாமே வீணாகிவிட்டது. 

நியாயப்படி நீ பாண்டியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…நீ அத செய்யவே இல்லியே..


என் புத்தி தெளிந்தது. பாண்டி என்னை மன்னித்துவிடு என்று நான் கேட்கப் போவது இல்லை. அது மாதிரி பேசி எனக்கு பழக்கம் இல்லை. ஆனா சரிபண்ணணும்

அவன் கொடுத்துவட்டி பணத்தை அவன் மனைவி மருத்துவ செலவுக்கு கொடுத்துவிட தீர்மானித்தேன். பாண்டி ஏற்றுக் கொள்வானா என்பது தெரியாது..

ஏன் என்றால்  பாண்டி என்னைவிட நல்லவன்..உத்தமன்..

நானோ ஆறாவது கட்டளையை மீறிய பாவி.. கர்த்தர் என்னை மன்னிக்கவேண்டும்..

( முடிந்தது)



 


செவ்வாய், 9 செப்டம்பர், 2025

                                                                    மீட்பு…

யாரு வந்திருந்தாங்க மந்திரம் ?

 எங்க சித்தி

அது என்ன கையில புக்.

இந்தா.. இது ..பைபிளாம். படிக்கணுமாம்.

மூர்த்தி வாங்கிப் பார்த்தான். படித்தான் . புதிய ஏற்பாடு.

இதெல்லாம ஏதுக்குடா..வேற காசு பணம் ஏதும் தரலியா..

கொடுத்திருக்காங்க..வார்டன் கொண்டு தருவான்..

வேற என்ன சொன்னாங்க.. 

நல்லவனா மாறனுமாம்..ஏதோ....இரட்சிக்கப்படணுமாம்.

அப்டின்னா.?

தெரியல..

அப்புறம்.உங்க அம்மா வரலியா.?

இல்ல..ஜாமின் எடுக்க பணம் இல்லையாம்.

ஓ…நீ பேசாம அண்ணாச்சி குரூப்ல சேர்ந்திடு அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க..

யோசிக்கணும்..

இப்பவே பாதி சேர்ந்திட்ட..


ம்.பிளைடு வாங்கி கொடுத்தேன்..

 ஆமா .நான் அவன் மூஞ்சில அடிச்சேன்..உன்னையும் சேர்த்து தூக்கி உள்ள போட்டிட்டாங்க.

ஜெயிலு போகப்போக பழகிடும் மந்திரம்..

நீயே தனியா காரியம் செய்யணும். அதான் முக்கியம்….மத்தத அண்ணாச்சி பார்த்துக்கிடுவாரு..

யாரு இந்த அண்ணாச்சி…ம். அது சரி. இதுல அவருக்கு இதுல என்ன லாபம்..


அடிக்கிறதுல பத்து பிரசண்ட் அவருக்கு ...போலிசுக்கு…  அப்புறம் நமக்கு.. எல்லாம் ஒரு கணக்கு இருக்கு…அதுப்படி நடக்கும்..

அப்போ களவு கொடுத்தவனுக்கு என்ன கிடைக்கும்.?

மிச்சம் மீதி அவனுக்குதான்.~ஹா..ஹா..ஹா..ஹா

 

மிச்சம்னா.எவ்வளவு?

 அது அவன் தலைவிதிப்படி கிடைக்கும்..

நீ அன்னைக்கி அடிச்சியே அதுல எவ்வளவு இருந்தது..


இருபது லட்சம் பணம்..ஐம்பது பவுன் நகை.. 

அடேங்கப்பா..அப்புறம்..

நான் பிடிபட்டதும் ஒரு வாரம் ஹோட்டல்ல என்ன தங்க வச்சாங்க. அதுக்கப்புறம் கோர்ட்ல ஆஜர் படுத்தினாங்க.


திருடன் பிடிபட்டான். ஒரு வாரம் அழகிகளுடன் உல்லாசம். அப்படின்னு பேப்பர்ல செய்தி போட்டாங்க..அவ்வளவுதான்.

 பாதி நகையை இவங்க அமுக்கிட்டாங்க..என் பங்கு எவ்வளவுன்னு போய்தான்; கேட்கணும்.


அப்போ ஜாமினுக்கு நீ செலவழிக்க வேண்டாம்…

ஆமா.ஆனாலும் கேச பொறுத்து செலவுக்கு  என் பங்கும் கொஞ்சம் போகும்..

 

இதுல என்ன உனக்கு லாபம் இருக்கு..


போலிஸ் அடிக்க மாட்டாங்க. மரியாதையா நடத்துவாங்க.அண்ணாச்சி இல்லன்னா. தலை கீழா கட்டி தொங்கவிட்டு லாடம் கட்டுவாங்க. பரவாயில்லையா.?

 அப்படியா.?

ஆமாடா. அன்னைக்கி கூட உன்ன அடிச்சாங்களா.? இல்லலா ..


ராவுல பிரியாணி வாங்கி கொடுத்தாங்களா..?

ஆமா.

பார்த்தியா அதான். அண்ணாச்சி ஆளுன்னு உன்ன விட்டுட்டாங்க இல்லன்னா ஒரு மாசம் கக்கூஸ் போக உக்கார முடியாது மவனே..பின்பக்கம் விங்கிப்போகும்..

சரி…உன்ன ஜாமின்ல எப்போ எடுக்க போறாங்க.

 

அடுத்தவாரம்..

பணம் இல்லன்னு சொன்னியே.

பாஸ்டர் பணம் கொடுக்கிறதா சொல்லி இருக்காராம்…

யாரு பாஸ்டர்.?

 அவங்க சர்ச்ல இருக்கிறவரு…

அப்போ நீ கிறிஸ்டீனா.?

 இல்ல எங்க சித்தி கிறிஸ்டீனா ஆயிட்டாங்க..

ம்..அதான் புத்திமதி சொன்னாங்களாக்கும்..

அப்புறம் என்ன சொன்னாங்க.? 

நல்ல பிள்ளையா மாறணுமாம்..

ம்..

..அது என்னவோ ..இரட்சிக்கப்படணுமாம்…

அப்படின்னா? 

 தெரியல..இந்த புத்தகத்தில எழுதி இருக்காம். படிச்சா புரியுமாம்.

சரி..பிரிச்சி படியேன்…


12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

 13. அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

 14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.


என்னடா  உனக்கு எதாவது புரியுதா ..?

ம்..ம் புரியல.. 

. சரி விடு

.நீ வெளியே போனதுக்கு அப்புறம்தான் நான் வெளியே வருவேன்…சும்மாவாவது என்ன வந்து பாரு..ஒன்னா ஜாலியா தண்ணி அடிக்கலாம்..


என் பெயர் மந்திரம் .கொத்தனார் வேலை செய்தேன்.இப்போ முடியல.கை நடுங்குது..ஓவர் தண்ணி..காலையில எழுந்த உடனே குடிக்கணும்…சாயங்காலம் நல்ல குடிக்கணும்..குடிக்க காசு வேணுமே…அதான் திருடினேன்..மாட்டிக்கிட்டேன்..அதுவும் இவன் கூட சேர்ந்து ஒரு சம்பவம் செய்தேன்.அந்த திருட்டுலதான் இப்போ உள்ள இருக்கேன்..

 

சித்தி சொன்னது போல ஒரு வாரத்தில ஜாமின்ல எடுத்திட்டாங்க..அதுக்கப்புறம் பத்து நாள் கழிச்சி மூர்த்தி வெளியே வந்தான்..

அவன பாளையங்கோட்டை ஜெயில் வாசல்ல வச்சி சந்திச்சேன்…அப்படியே டாஸ்மாக் கடைக்கு போயி நல்லா குடிச்சோம்…அப்போ கேட்டான்…

என்னடா அண்ணாச்சிகிட்ட வாரியா.?

யோசிக்கணும்…

சரி யோசி….அப்புறம் அன்னைக்கி என்னமோ சொன்னியே..ஆங்..இரட்சிக்கபடணும்னு..

அதுக்கு அர்த்தம் என்னன்னு கேட்டியா..?

ஆமா கேட்டேன்.அது மீட்பாம் ..

ஓ..மீட்புன்னா…

பக்கத்து டேபிள்ள இருந்து ஒருத்தன்…அதான் மழை பெய்து வெள்ளம் வந்தா மீட்பு குழுன்னு ஒன்னு வருமே அது தான் மீட்பு.. அதாவது காப்பாற்றுதல்…


போச்சுடா…எதுல இருந்து யாரை காப்பாற்ற..

தெரியலியே..

எப்பா… போதை ஏறுது…இதுல இதப்பற்றி இதுக்கு மேல இத பேச வேண்டாம்…


இந்தப்பாரு மந்திரம்.. அண்ணாச்சி சொல்லி அனுப்பினாரு..அடுத்த வாரம் ஒரு ப்ராஜக்ட் இருக்கு..செமயா லாபம் கிடைக்கும்.. நீயும் வார.  .சும்மா வீட்டுக்கு வெளியே இருந்து எனக்கு நிலவரத்த போன்ல சொன்ன போதும்.வேலை சுலபம்…என்ன சொல்ற…


என்னடா இப்போதான் வெளியே வந்திருக்க..அதுக்குள்ளயா..?

இதுக்கெல்லாம் நேரம்காலமே கிடையாது மந்திரம். லம்பா ஒரு அமௌண்ட் கிடைக்கும் அது வரைக்கும் இப்படித்தான்…


ஓகே சரி எனக்கு புரியல…விளக்கமா சொல்லு


நீ வேணும்னா அந்த வீட்டுக்கு நேரா போய் பாரு.அம்பாசமுத்திரம் மெயின் ரோட்ல இருக்க தெரு.

முழு அட்ரஸ் தாரேன். அந்த வீட்ல ஒரு கிழவி மட்டும்தான் இருக்கா. அவா மகன் இப்போதான் பெங்களுர்ல இருந்து வந்திருக்கான்..அவன் மகளுக்கு கல்யானமாம்..மொத்த நகையும் வீட்லதான் இருக்கு.

திங்கட்கிழமை குடும்பமா வேளாங்கன்னி கோயிலுக்கு போறாங்க..திரும்பி வர நடுஇராத்திரி ஆவும். சரியா இராத்திரி ஒன்பது மணிக்கு நான் உள்ள இறங்குறேன்..

கிழவி மண்டையில இலேசா ஒரு தட்டு. மொத்த நகையையும் வாரிகிட்டு வந்திடுதேன். 

நீ வீட்டுக்கு வெளியே நின்னு போன்ல எதாவது பிரச்சிணைன்னா தகவல் சொல்லு.. அது போதும். வெற்றிகரமா. முடிக்கோம்.உன் பங்கு லட்சத்தில வந்து சேரும்...ஞாபகம் வச்சிக்கோ..

 சம்பவம் அடுத்த வெள்ளிக்கிழமை..


யோவ்;..களவு கேசு கொலை கேசா ஆயிட்டுன்னா பல வருசம் ஜெயில்லதான் கிடக்கணும் பாஸ்…


அதெல்லாம் அண்ணாச்சி பார்த்துக்கிடுவார்..அவருகிட்ட முப்பது வக்கீல்கள் இருக்கங்க ? ஒரு வருசத்தில் ஜாமின்ல வெளியே வந்திடலாம்.

 ஆ ஊ ன்னா அண்ணாச்சிங்கிறே ..யாருப்பா அந்த அண்ணச்சி  அவரு பேரு.? .

அதெல்லாம் உனக்கு எதுக்கு. அவரும் கிறிஸ்டியன்தான்…ஆனா பலே கில்லாடி. நேரம் வரும்போது உனக்கு அவர காட்டுறேன்.

.முதல்ல இத செய்து முடிப்போம்..

ஒரு வாரம் செமயா கழிந்தது. செலவு தண்ணிபட்டபாடாய் இருந்தது..பணத்தபத்தி மூர்த்தி; கவலையே படல..

இன்னைககு; இரத்திரி தயார் ஆகனும்..

காலையில நாங்க குடிச்சோம்..இனி குடிக்ககூடாதுன்னு மூர்த்தி; சொன்னான்.வேலை சொதப்பிடுமாம்..

ஓ கே..

மாலை ஆறு மணி.

.சித்தி கூப்பிட்டாங்க. பாஸ்டர் என்னை பர்க்கணும்னு சொன்னாராம்..

நான் இன்னைக்கு சம்பவம் செய்யக் கூடிய வீட்டை ஒரு தடவை பார்த்திட்டு வரக் கிளம்பினேன்..

பார்த்தாச்சு.. வீடு சுத்தமா இருக்கு..ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கும் தெரு. 

கேமிரா ஒன்றும் இல்ல..வசதிதான்..

சரி இப்போ பாஸ்டரை பார்த்து விட்டு சீக்கிரமாக வந்துவிடலாம் என்று கிளம்பினேன்..

  போனேன்..

 காபி கொடுத்தாங்க..பாஸ்டர் வெள்ளை வேட்டி சட்டையில் பிரகாசமா இருந்தாரு…தன் பக்கத்தில உட்கார சொன்னார்.

என் தலையில கைய வச்சி யாருகிட்டயோ ஏதோ போசினார்.

அது ஜெபமாம். பின்னால தெரிஞ்சிக்கிட்டேன்..எனக்கு ஏதோ பாரம் ;இறங்கின மாதிரி இருந்தது..

 .

மூர்த்தி கிட்ட இருந்து போன் வந்தது…  நான் எடுக்கல.

பாஸ்டர் என்னை ஒரு ஆள் கூட துனிக் கடைக்கு அனுப்பினார்.அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிந்தது. எனக்கு டிரஸ் வாங்க வந்திருக்கோம்னு..

திருவனந்தபுரம் வரை போகணும் கூட வா என்று சொன்னார்.

மனதுக்குள்ள நான் அந்த கிழவியை நினைத்தேன்..நான் போகலன்னா மூர்த்தி வருத்தப்படுவானே. நான் நினைத்தது போல மூர்த்தி; போன் பண்ணினான்..

 சீக்கிரம் வான்னான்..

நான் ஒன்பது மணிக்கு வாரேன்னு சொன்னேன்..

 

பாஸ்டர்.. தம்பி வா போகலாம்னு சொன்னார் ..

இல்ல ..எனக்கு வேலை இருக்கு…

அவரு என்னை உற்றுப் பார்த்தார்.

தெரியும..; இன்னைக்கு என் கூட வா..

என்ன தெரியும். இவருக்கு..?

நீ எது வரைக்கும் படிச்சிருக்கே.

எட்டாம் வகுப்பு வரை..

சரி அப்போ இதை படி..கொஞ்சம் சத்தமா….

படித்தேன்…

  1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 

  2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

  3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 

  4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

  5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

  6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.


எனக்கு புரியல….யாருக்கு இது சொல்லப்பட்டிருக்கு..

நான் பாஸ்டரை பார்த்தேன்…

.புரிந்ததா.?

இல்ல….

 சரி மெல்ல புரியும்….இப்போ என் கூட வா..

 நாங்கள் புறப்பட்டோம்….

 மணி ஒன்பது.. நாங்கள் களியக்காவிளையில் ஒரு ஹோட்லில் பீப் கறியோடு புரோட்டாவை கடித்துக் குதறிக்கொண்டிருந்தேன்..

 மூர்த்தி; பல முறை எனக்கு கால் செய்து கொண்டே இருந்தான். நான் என்ன சொல்ல…பேசினேன்..  பாஸ்டர் கிட்ட இருக்கேன் வந்திடுதேன் என்றேன்.ஆனால் செல்லை ஆப் செய்து விட்டேன்.


மூர்த்தி; திட்டமிட்டது போல ஒன்பது மணிக்கு அந்த வீட்டிற்கு சென்றான்..சுவர்களின் மூலைகளை கவனித்தான் .காமிர எதுவும் பொறுத்தப்படவில்லை. ஓகே கதவை தட்டினான்..கிழவி கதவை திறந்தாள். மெதுவாக உள்ளே போய் கதவை சாத்தினான். கிழவி அவனை சாந்தமாக பார்த்தாள்..

இது மந்திரத்திற்கு வினோதமாக இருந்தது.கிழவி கண்களில் பயம் இல்லையே..பயம் இருக்கும் இடத்தில்தான் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

இது உதைக்கிறதே. ஏதோ தவறு நடக்கிறது..

ஏய் கிழவி நகை மொத்தமும் எங்க இருக்கு.?

கிழவி பீரோவை காட்டினாள்.பீரோ திறந்தே இருந்தது. நகைகள்...நகைகள்..

மந்திரம் திகைத்தான்.. கிழவி ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு வேடிக்ககையாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.

வேற பணம் எங்க இருக்கு..?

ஒரு பேக்கை காட்டினாள்.

ஜிப்பை திறந்தான். கட்டுக் கட்டாய் ஐநூறு ரூபாய்தாள்.

கிழவி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள்;

ஜன்னல் பக்கத்தில் ஏதோ நடமாட்டம்.

பிளான்படி பின்பக்கம் வழியாக தப்பிக்க வேண்டும்.பணத்தையும் நகையையும் வாரி சுருட்டிக் கொண்டு பின் கதவு பக்கம் போனான்…கதவு பக்கத்தில் ஒரு சிறிய ஜன்னல். கவனித்தான். இரண்டு கிராமத்தான் வீச்சரிவாளோடு பதுக்கியிருந்தார்கள்.

மாட்டினேன்..

கிழவி அதே இடத்தில் ஆப்பிளை நறுக்கி கொண்டிருந்தாள்..

கதவு தட்டப்பட்டது..கிழவி மந்திரத்தை பார்த்தாள். 

நிதானமாக போய் கதவை திறந்தாள்.

எல்லாம் முடிந்தது. 

மூர்த்தியாகிய நான் திகைத்திருந்தேன்..வழக்கம்போல அடித்தார்கள். போலிஸ் வந்தது ;புறங்கை கட்டப்பட்டு இழுத்துச் சொன்றார்கள்..எனக்கு புரியவில்லை. எப்படி சிக்கினேன்.?

ஏட்டையா.. இது எப்படி நடந்திச்சி..

அடா முட்டாப் பயலே …கேமராவ அவன் வீட்ல மாட்டல. இன்னைக்கு சாயங்காலமா எதிர் விட்ல கேமிராவ மாட்டி அவன் வீட்டைப்பார்த்து வச்சிருக்கான். நீ அங்க நடமாடுனதா அவன் செல்போன்ல கவனிச்சி எதிர் வீட்டுக்காரனுக்கு வேளாங்கன்னியில் இருந்தே தகவல் கொடுத்திட்டான். போலிசுக்கும் சொல்லி. உன் படத்தையும் அனுப்பிட்டான். ஓகே.இனி ஒரு வருஷம் உனக்கு மாமியார் வீடுதான்.களிச்சோறுதான்..

ஆமா உங்கூட ஒருத்தன் அலைவானே அவன் பேரு என்ன?..மந்திரம்…அவன் என்ன ஆனான்..

அவன் ..யாரோ  ஒரு பாஸ்டர் கூட போயிட்டான்..

பாஸ்டர் கூடவா ?….அப்போ அவன இந்த கேசுல சேர்க்க முடியாது. வலுவான சாட்சி அவன் பக்கம் இருக்கு..தப்பிச்சிகிட்டான்..பாஸ்டர் காப்பாத்திட்டார்.. ஹா ஹா ஹா


ஒரு மாசம் கழித்து  மூர்த்திய பார்க்க மந்திரம் ஜெயிலுக்கு போனான்…

என்ன மந்திரம் ஆளே மாறி இருக்க.வெள்ள சட்டை..வெள்ள வேட்டி..அரசியல்வாதி மாறி இருக்க…அந்த சம்பவத்தன்னைக்கு நீ என் கூட வந்திருந்தேன்னா நீயும் இங்க என்கூடத்தான் இருப்பே..

அது என்ன சொன்னே..இரட்சிப்பு…..அதாவது மீட்பு..அதன் நீ அந்த பாஸ்டரால் காப்பாற்றபடட்டிருக்கே….அதாவது இரட்சிக்ப்பட்டிருக்கே…ஹா ஹா ஹா ஹா

மந்திரமும் சிரித்தான்…


மீட்பின் முழு விபரமும் அவனுக்கும் இன்னும் தெரியாது . ஆனால் போகப் போக தெரியும்.

மீட்பு இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வந்தது.ஆனால் அதற்கு பாஸ்டர் ஒரு கருவி…

மந்திரம்.. இந்த கிறிஸ்தவங்ககிட்ட ஜாக்கிரதயாய் பழகணும். கொஞ்சம் விட்டா நம்மள இரட்சிக்கபட வச்சிருவாங்க..

மூர்த்தி வாய்விட்டு சிரித்தான்..ஆனாலும் அது நன்மைக்குதான் நன்பா..

எனக்கு இதுதான் வாழ்க்கைன்னு ஆயிட்டு. நீ தப்பிட்டே…அதாவது இரட்சிக்கப்பட்டுட்டே..மீண்டும் மூர்த்தி சிரித்தான்….

மந்திரம் தன் பையில் இருந்து ஒரு புத்தகத்தை மூர்த்தியிடம் எடுத்து நீட்டினான்..

இது என்னது…

 புதிய ஏற்பாடு..

.ஓ.ஹோ நானும் இரட்சிக்கப்படனுமா..? நல்லாயிருக்கு..

நல்லாயிருக்கு..பர்க்கலாம் நன்பா..இனி உனக்கு அண்ணாச்சி தேவைப்பட மாட்டார்….

போங்க போங்க. சிறைவார்டன் விரட்டினார்…மூர்த்தி ஜெயிலுக்கு உள்ளே சென்று மறைந்தான்..

 



திங்கள், 26 மே, 2025

புத்தி தெளிந்தபோது,

                                                              புத்தி தெளிந்தபோது,

                                                           -------------------------------------

லூக்கா-15:17 அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

நான் சொல்ல வரும் கதையைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்தருக்கும். இருந்தாலும் அனேக நாளாக இந்த வார்த்தை என் மனதிற்குள் பல முறை பேசிக் கொண்டே இருந்தது.

நான் புரிந்தவைகளை எழுதுகிறேன்..

இந்த கதையில் முக்கிய பாத்திரங்கள் மூவர் 

தகப்பன்

இளைய குமாரன்

மூத்த குமாரன்.

 இப்போது கதைக்கு வருவோம்..

இளைய குமாரனின் “டயலாக்கோடு” கதை ஆரம்பிக்கப்படுகிறது..

இதோ..

12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

இதில் மகனின் ஆரம்ப வார்த்தையை கவனியுங்கள்..


தகப்பனே…..

 உறவை சொல்லி அழைக்கிறான். இது நல்ல குணம்தான்…

.இந்த கதை விசுவாசிகளுக்கும் பரம தகப்பனுக்குமான உறவை பற்றி கூறுவதாகத்தான் காண முடிகிறது..

தகப்பனே…..நாம் ஒரு காரியத்தை கர்த்தரிடம் கேட்கும்போது நாம் முதலில் என் சொல்கிறோம் பிதாவே..அல்லது தகப்பனே.. 

நான் கூட

ஜெபிக்கும் போது.நல்ல தகப்பனே என்றே ஆரம்பிக்கிறேன்.

 நான் தகப்பனே என்று அழைக்கும்போதே அவர் புரிந்து கொள்கிறார்.மகன் ஏதோ கேட்க போகிறான் என்று. 

இதுவும் நல்ல காரியம்தான்..

இரண்டாவதுதான் மகன் தமது நோக்கத்ததை நிறைவேற்றுகிறான்….எப்படி.?

-----------------------------------------------

ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும்

தனது தகப்பனின் ஆஸ்தியில் தமக்கும் பங்கு உண்டு என்று நிச்சயமாக அறிந்தவன்…

 நாம் ஜெபத்தில் கேட்கிறோமே ..இயேசு கிறிஸ்துவின் மூலமாக கேட்கிறோம் பிதாவே…

எனக்கு இதில் உரிமை இருக்கிறது. ஆகவே தாருங்கள் என்கிறான்..

ஆஸ்தியை கேட்பதின் காரணம் என்ன.? 

காரணம் தகப்பனுக்கு தேவையில்லாத ஒன்று என நினைக்கிறான். 

என் வாழ்க்கை என் முடிவு..?


நான் பல நேரம் சில காரியங்களுக்காக ஜெபிப்பேன்.அது கர்த்தருக்கு பிரியமானதா.?அவருக்கு சித்தமானதா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை அது எனக்கு மேன்மையானது.இன்பமானது..அது எனக்கு தேவை என் நினைத்து கேட்கிறேன்.ஆனால் அது நடக்காது. 

நானும் சரி இது தேவசித்தமல்ல போலும் என விட்டு விடுவேன். 


ஆனால் நான் பிடிவாதமாக அதற்காக என் உரிமையை நிலைநாட்டி உபவாசம் இருந்து கடவுளிடம் கண்டிப்புடன் எனக்கு வேண்டும் என உறவைகாட்டி மிரட்டினால்..சரி போகட்டும் என கொடுத்துவிடுவார்.

இதுதான் இளையவன் வாழ்வில் நடந்தது.


இப்போது அவன் செல்வந்தன்….சுய அதிகாரம் உள்ளவன்..ஏற்கனவே அவனின் தகப்பன் அரவனைப்பில் இருக்கும் போதே அவன் செல்வந்தன்தான்..உலக கண்களுக்கு இப்போது இன்னும் அதிக செல்வந்தனாக தன்னை காட்டிக் கொள்கிறான்….

 

சுய சித்தம் உள்ளவர்கள் ஆவிக்குரிய உலகில் வேகமாக ஜொலிப்பார்கள்…தகப்பனின் அரவனைப்பில் இருப்பவர்களைவிட பல மடங்கு வேகமாக இருப்பார்கள்….

 

நானோ நீங்களே இதை கவனிக்க வேண்டும். என் வாழ்க்கையில் அடிக்கடி குறைவுகள் வந்து என் தகப்பனிடம் அதற்கான நிறைவை கேட்ட பெற்றுக் கொள்ளும் நிலையில் நான் இருந்தால் அது சரியானதே…தகப்பன் என்னை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றே பொருள்…


நினைத்ததை உடனே என்னால் செயல் படுத்த முடிகிறது. எந்த தடையும் இல்லை என்றால் சற்றே நிதானியுங்கள்.இந்த அதிகாரம் சுய அதிகாரம். 

இது இருக்குமானால் தகப்பனின் கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் இல்லையென பொருளாகும்…

 சுய அதிகாரம் உள்ளவர்கள் மிகுந்த ஆனந்த களிப்பாக இருப்பார்கள்..இந்த சமயத்தில் குறைவு என்பதே இராது…


அடுத்து அவன் என்ன செய்கிறான் என பார்ப்போம்..

13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

தகப்பனின் சொத்து கிடைத்துவிட்டது….அதை வைத்து அந்த ஊரில் சிலதை சம்பாதிக்கிறான்..


கிருபையாக வரங்கள் ஒரு மனிதனுக்கு கர்த்தர் தரும்போது அதை இப்படித்தான் உபயோக படுத்த வேண்டும் என்ற கட்டளையை கர்த்தர் கொடுப்பதில்லை.

கர்த்தர் கொடுத்த வரங்களினால் அந்த மனிதன் மற்றவர்கள் நடுவில் மிக மேன்மையான நிலையை அல்லது புகழை அடைய முடியும் .

எல்லா புகழும் அந்த மனிதனுக்கே….


இனி தகப்பனின் கண் பார்வையில் படாமல் இருப்பதே நல்லது என நினைத்து தூரமாக விலகி விடுகிறான்….

புகழும் செல்வமும் இருப்பது நல்லது. 

ஆனால் அதை கட்டுக்குள் வைக்க தகப்பனின் அதிகாரம் தேவை. அதை மீறும்போது துன்மார்க்கம் தானாகவே வரும். துன்மார்க்கத்தால் ஆஸ்தியும் எல்லா புகழும் அழிந்து போகும்….


இது வரை நடந்த எந்த நிகழ்வுக்கும் தகப்பன் காரணமல்ல..

சிலர் கேட்பதுபோல… ஏன் இந்த உலகத்திலே கெட்டது நடக்கிறது. கடவுள் சகலவற்றையும் நல்லதாகவே வைக்கலாமே.. என கேட்பதை காண்கிறோம். மனிதனை கர்த்தர் தமது சாயலாக படைத்தார்.

அதாவது சுய சித்தம் உள்ளவனான. 

வலப்புறமோ இடப்புறமோ எந்தபக்கம் செல்வது என தீர்மானிப்பது மனித உரிமையாகும்.

இளைய குமாரன் ஆஸ்தியை கேட்டது தவறல்ல.

தான் அதை உபயோகித்து லாபமடைய தகப்பனின் ஆலோசனையை கேட்டிருப்பான் என்றால் தூர தேசம் சென்றிருக்க மாட்டான். 

துன்மார்க்கமாய் வாழ்க்கை மாறியிராது 

 அவனது ஆஸ்தி அழிந்திருக்காது. 


ஆஸ்தியை அழித்துப் போட்டவர்கள் நீங்களோ நானோ என்றால் சற்று சிந்திப்போம்

..தற்போதய நிலை ஏற்பட காரணம் கர்த்தரா ? அல்லது நாமா.? 

யோபுவைப்போல சகலமும் இழந்து நிற்பீர்கள் என்றால் பல மடங்காக நிச்சயம் கர்த்தர் திரும்ப தருவார். பொறுமையுடன் காத்திருங்கள். 

நீங்கள் கர்த்தரின் பார்வையில்தான் இருக்கிறீர்கள். 


உங்கள் சுயசித்ததில் அழிந்திருக்கிறீர்கள் எனின் இனி என்ன செய்ய வேண்டும் என யோசிப்பது நல்லது..


14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,

செல்வம் இருக்கும் ஒருவனுக்கு தேசத்தின் பஞ்சம் அவனை தாக்காது…

.

இஸ்ரேல் ஜனங்கள் வனாந்தரத்தில் நடந்தாலும் அவர்கள் களைப்படையவில்லை. பசியாக இருந்ததில்லை.

தகத்துக்கு தண்ணீர் கற்பாரையில் இருந்து வரவழைக்கும் வல்ல தேவன் அவர்களோடு இருந்தார்..

தற்காலத்தில் கூட கொரோணோ வியாதி ஏற்பட்ட கொடிய காலத்தில் மூன்று வருடத்தில் நான் அனுதினமும் ஆராதிக்கும் தேவன் எப்பேர் பட்ட வல்லமையுடையவர் என்பதை எனக்கு காண்பித்தார்.


மாத வருமானமோ ஓய்வூதியமோ இல்லாத என்னைப்போல லட்சக்கணக்கான கர்த்தரின் பிள்ளைகளை அவர்கள் முகம் வாடாமல் பாது காத்த அற்புத தேவன் அல்லவா அவர்.


இந்த இளைய மகன் வாழ்க்கையில் அவன் நம்பிய செல்வங்கள் செலவான பின் “அந்த தேசத்தில்” அதாவது அவன் தங்கியிருந்த தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று.. கவனியுங்கள். இது தகப்பனின் தேசம் அல்ல..

தகப்பனின் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டால் தகப்பனின் செல்வாக்கு அரணாக நின்று அவனை பாதுகாக்கும். 

இங்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறது..

15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

ஒரு விசுவாசி பாதை மாறும்போது சகலமும் அவனுக்கு எதிராக மாறுகிறது. அரவணைப்பு என்பது அவனுக்கு யாரிடம் கிடைத்தது என்று பாருங்கள்..


பஞ்ச தேசத்தின் குடியானவன்….அவன் பன்றிகளுக்கு உரிமையாளன்…அவனோடு.ஒட்டிக் கொண்டான்..அல்லது ஒண்டிக் கொண்டான்…

தேசத்தில் கடைநிலையில் உள்ள ஒருவனிடம் கொண்டு போய் வாழ்க்கை அவனை சேர்க்கிறது…. கொடுமை..


தகப்பனின் அரவணைப்பில் கடின உழைப்பில்லாமல் வசதியாக வாழ்ந்த பிள்ளை.

அந்த வசதி பலரின் கண்களை உறுத்தி இருக்கும்..

ஆஹா..அரச வாழ்க்கை. நான் நேற்று எழுதியது போல “ ராயல் லைப்” 


அன்பான விசுவாசிகளே ஊழியர்களே சற்று சிந்தியுங்கள் உங்கள் வாழ்க்கை தரம் உங்கள் திறமையினால் அல்ல .

அது உங்கள் தகப்பனின் வல்லமையினால்..கவனமாக வாழுங்கள் அது நிலைக்கும்….

சுய முயற்சியினால் தகப்பனை பிரிந்து வரங்களை மட்டும் நம்பி நீங்கள் எடுக்கும் முய்ற்சிகள் அத்தனையும் பஞ்சத்தால் அடிபட்டு அழிந்து ..ஒண்டிக் கொள்ள இடமில்லாமல் போகும்..


கர்த்தரின் அரவனைப்பை இழந்த ஒருவன் பன்றி மேய்க்கும் வேலையை செய்யக் கூட தகுதி இல்லாதவனாக வாழ்க்கை மாற்றும்….

பன்றி மேய்த்தாலும் அதற்கு கூலி இல்லை…..பன்றி மேய்ப்பது அந்த தேசத்தின் குடியானவனோடு தங்குவதற்கு மட்டுமே..கூலிக்காக அல்ல


எல்லா நேரமும் நான் யார் ?.எனக்கு உண்மையான தகுதி என்னவென்ற சிந்தனை எனக்குள் ஓடுகிறது..

இதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இப்படிப்பட்ட சிந்தனைகள் என்னை என் தகப்பனிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக் கொள்ளச் செய்யும். 

-------------------------------------------------------------

16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

பன்றிகளுக்கு தவிடு வைக்கும் போது இளைய மகனுக்கு அதை பர்ர்க்கும் உரிமை கூட அவனுக்கு இல்லை. பன்றிகளின் பசியை நினைக்க ஆட்கள் உண்டு.இந்த மகனுக்கோ அதுவும் இல்லை.இந்த நிலையில் அவன் புத்தி தெளிந்தது..

இதைப்போல் கடையாந்திர நிலையில் இருப்பவர்களும் இந்த நிலைக்கு நானும் ஆளாகிவிடக் கூடாது என நினைப்பவர்களும் இனி உள்ள வசனங்களை ஆர்வமாக கவனியுங்கள்.


17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

புத்தி தெளிந்ததின் வெளிப்பாடு.. 

தன் தகப்பனை நினைக்கிறான்…

எல்லா பிரச்சணைக்கும் முடிவு கர்;த்தரிடம் மட்டுமே உண்டு..

கர்த்தரின் வல்லமையை உணர அவரின் ஊழியர்களுக்கு அவர் செய்த நன்மைகளை எண்ணுங்கள்.

வாக்கு மாறாத தேவன் நமக்கு இன்னும் அதிகமாக நன்மை செய்வது அதிக நிச்சயமாக இருக்கிறது. 

வேதத்தின் அறுபத்தி ஆறு புத்தகங்களும் இதையே நமக்கு போதிக்கிறது.

தகப்பனின் வீட்டில் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது,உயிர் வாழ்வது கடினம் அல்ல.

அது சாதாரணமாக நடைபெறும் ஒன்று..பாதுகாப்பான வாழ்க்கை உண்டு..எனது குறைவு அங்கு நிறைவாக்கப்படும் என்ற நம்பிக்கை..

 --------------------------------------------------------------------------------------------------------

18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

 19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

இந்த வசனத்தில் இரண்டு காரியங்கள் கூறப்பட்டிருக்கிறது.உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.அது என்ன.?

தகப்பனை மதிக்காமல் பேசியது.  

பரத்துக்கு விரோதமாக பாவம் செய்தது….அது துன்மாக்கமாக வாழ்வை மாற்றியது..

இரண்டு காரியங்களின் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஒன்று வார்த்தையால் மன்னிப்பு கேட்பது. 

இரண்டாவது துன்மார்க்த்தை விட்டு வாழ்வை மாற்றிக் கொள்வது. இரண்டையும் செய்யும்போது. தானாகவே தகப்பனிடம் நமது கால்கள் நம்மை கொண்டு வந்து சேர்க்கும்..

20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

நமது குறைவுகள் நிறைவாகும் நாளுக்காக கர்த்தர் ஆவலாக இருக்கிறார்.இது விசுவாசிகளுக்கான ஒரு ஆலோசனையாகும்…

கர்த்தர் நமக்கு  கொடுத்த பாதுகாப்பான வாழ்க்கையில் இருக்கும்போது இளைய குமாரனைப்போல கொழுப்பான சிந்தனைகள் இதயத்தில் பிறக்க வாய்ப்பு அதிகம்.

விசுவாசியாக இருந்தாலும் ஊழியராக இருந்தாலும் இரண்டு பேருக்கும் இது பொறுந்தும் 

இதில் நானும் அடக்கம்….பல நாள் இதயத்தில் இருந்ததை இறக்கி வைத்த நிம்மதி எனக்கு இப்போது இருக்கிறது..

கர்த்தரால் எனக்குள் ஏவப்பட்டதை எழுதுகிறேன்….இன்னும் கூட சில காரியங்கள் இருக்கிறது…உண்மையை செல்லப்போனால் தயக்கமாக இருக்கிறது.

.பர்க்கலாம் ...பிறர் மனம் நோகாமல் இடித்துரைக்கும் கலையை இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும் என  நினைக்கிறேன். 

காலங்கள் பதில் சொல்லும்..



வியாழன், 2 ஜனவரி, 2025

 

                                                      தேவகி

திருநெல்வேலி இப்போ ரொம்ப மாறி இருந்தது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜம்பது வருடத்திற்கு முன் இருந்தது போல இப்போது இல்லை.

என் கார் வண்ணார் பேட்டையில் இருந்து கிழக்கு நோக்கி பயணிக்க வேண்டியது இருந்ததால் வண்டியை திருப்பினேன்..

 

முன்ப  இந்த பைப்பாஸ் ரோடு கிடையாது.

கொக்கிரகுளம் வழியாக அதாவது கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக ஒரு சாலை மேலப்பாளையத்தை நோக்கி செல்லும்.மாற்று சாலை அது ஒன்றுதான் .

மதுரையில் இருந்து வந்த நான் என் காரை சாலையின் ஓரமாக ஒதுக்கி நிறுத்தி கவனித்தேன்.

 வலது புறம்ஆர் எம் கே விஜவுளிக்கடை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.

 அந்த காலத்தில் சுலோசேனா ஆற்றுப்பாலத்தில் இருந்து முருகன் குறிச்சி வரை சாலையின் இரண்டு பக்கமும் மருதமரங்கள் மிகப் பெரியதாக வளர்ந்து விரிந்து நிற்கும்..இடைஇடையே நவால் பழ மரங்களும் நிற்கும்

இன்று மரங்களே இல்லை.

எல்லாமே கட்டடங்களாக மாறி நிற்கிறது.

இந்தியாவில் எல்லா இடத்திலும் கிராமங்கள் நகரங்களாக மாறும் போது இப்படித்தான் ஆகிறது.

திருநெல்வேலி ஒரு பெரிய கிராமம் என்று என் தகப்பனார் சொல்லுவார்.

 

நான் திருநெல்வேலிக்காரன்தான் .

ஆனால் இங்கே நான் வாழ்ந்த காலங்கள் மிக குறைவு. சென்னையில் கொஞ்ச நாள், பின்பு ஹைதராபாத் பின்பு ஒரிசாவில் கொஞ்சநாள் என என் வாழ்க்கையில்  இப்படி இடமாற்றம் நடந்து கொண்டே இருந்தது.

காரணம் என் அப்பாவின் வேலை அப்படி.

 

சென்னையில் இருக்கும் போது அடிக்கடி திருநெல்வேலி வருவோம்.

எங்களுக்கு முருகன் குறிச்சி அடைக்கலாபுறத்தில் ஒரு வீடு இருந்தது. அதை வாடகைக்கு விட்டிருந்தோம்; அந்த வீட்டின் மாடியை எங்களுக்கென்று வைத்துக்கொண்டோம் .

வருடத்திற்கு ஒரு முறை அந்த வீட்டடிற்கு வருவோம். அப்பா மாலையில் என்னை அழைத்துக் கொண்டு ..இலந்தகுளம,; பெருமாள்புரம் என சுற்றுவோம்.

 

அவர் இலந்த குளத்தின் கரையில் நடப்பதற்கு மிகவும் பிரியப்படுவார்.

அவர் சொன்ன ஒரு சம்பவம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

அப்பா அரசாங்க உத்யோகத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர்.அவர் ஒரு முறை வெளிநாட்டு பயணத்தில் இருந்தாராம்.அது எந்த நாடு என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை. அந்த நாட்டில்

ஒரு மாலைப் பொழுதில் சாலையில்அங்கு நடந்து கொண்டிருந்தாராம், அப்போது திடிரென்று மக்கள் அலறி அடித்துக் கொண்டு எதிரே ஓடி வந்தார்களாம்.

ஏதோ கலவரமாம்என்ன ஏதுவென்று விளங்கிக் கொள்ளும் முன்னே எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விட்டதாம்.

இவருக்கு என் செய்வது என்றே தெரியவில்லையாம். தனியாளாக ஒரு ஓரமாக ஒரு கடையில் கதவோரம் பதுங்கி கொண்டிருக்கும் போது யோசித்தாராம்

கடவுளே இப்படி ஏதோ ஓரு அன்னிய நாட்டிலா நான் சாக வேண்டும்..ம்

இந்த நேரம் என் ஊரில் இலந்தகுளத்தாங் கரையில் நடந்து சென்றால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்..என நினைத்தாராம்.

இதை சொல்லிச் சொல்லி சிரிப்பார்.

 

எப்படியோ என் அப்பாவுக்கு இலந்தகுளத்து கரையில் நடப்பது ரொம்ப பிடிக்கும். நாங்கள் ஹைதராபாத்திர்க்கு போனபின் நெல்லைக்கு வருவது மிகுந்த சிரமம் ஆகிவிட்டது.

ஆகவே அடைக்கலாபுரம் வீட்டை என் அப்பா விற்றுவிட்டார். ஆனால் அதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார்.

என்னதான் இருந்தாலும் சொந்த ஊரில் ஒரு அடி நிலம் இருப்பதுதான் சரியான விஷயம். அதை விற்றது மிக தவறு என்பார்..

 

நான் மதுரைக்கு என் நன்பனின் மகன் திருமணத்திற்கு வந்தேன்..

எனக்கு தேவகியை பார்க்க வேண்டும் என் ஆசை வந்தது.

அது ஏன் என்று தெரியவில்லை.

தேவகி என் அத்தை பெண்..அவளை சந்தித்த விஷயம் மிக சுவாரஸ்யமானது.

நாங்கள் சென்னையில் இருக்கும் போது ஏதோ காரியமாக என் தகப்பனார் கன்னியாகுமரிக்கு வந்தார்..

அவருக்கு நீணட தூர கார் பயணம் மிகப்பிடிக்கும்..

ஆனால் என் தாயார் அதற்கு தடையாக இருப்பார். ஆகவே என்னையும் அழைத்து; கொண்டு கன்னியாகுமரிக்கு வந்தார்.

கார் கங்கைகொண்டான் வரும்போது.. தம்பி ஸ்ரீவைகுண்டத்தில் என் அக்கா இருக்கிறாள், அவளை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.அவளை பார்த்துவிட்டு போகலாம் என்றார்.

இது வரை அந்த அக்காவை பற்றி எங்களிடம் ஒரு போதும் சொன்னதில்லை.

எனக்கு வியப்பாக இருந்தது.

அக்காவா..?

ஆமா உனக்கு அத்தை..

 அத்தையா?

ம் ..மிக பெரிய பணக்காரி..வசதியாக இருக்கிறாள்..

இது வரைக்கும் அவங்களை பற்றி எனக்கு நீங்க சொன்னதில்லையே..?

ஆமா.சொல்வில்லை.அப்பா அமைதியாகி விட்டார்.

எனக்கு தெரிந்த வரை என் தகப்பனாருடன் கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அது மட்டும் இல்லை. என் அப்பாவின் சொந்தங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது..அதை பற்றி நாங்கள் எப்போதும் பேசியதும் இல்லை.

அப்பா அமைதியானதும் நான் எதுவும் கேட்கவில்லை. எங்கள் கார் ஸ்ரீவைகுண்டம் ஒடுங்கிய ஆற்றுப் பாலத்தை கடந்து ஓரமாக நின்றது.

 

கார் அருகே வந்த ஒருவரை அழைத்து ஏதோ ஒரு பெயரை சொல்லி அதற்கு வழி கேட்டார். வழிகாட்டியவர் தனது வலது கையை நீட்டி ஏதோ சொன்னார். கார் மேற்கு நோக்கி திரும்பியது.

அது வல்ல நாட்டை நோக்கி போகிறது என்று எனக்கு அப்பா சொன்னார்

ஒரு நான்கு மைல் தூரம் போயிருப்போம். ஒரு வாய்கால் குறுக்கே வந்தது. அதை தாண்டியதும் ஒரு கிராமம் வந்தது.

ஓரமாக கார் நிறுத்தப்பட்டது.

இறங்கினேன். நிறைய சின்னதும் பெரிதுமான வீடுகள். குடிசைகள் இல்லை. கொஞ்ச தூரம் நடந்து போனோம் .மதில் சுவர் போன்ற பெரிய கட்டடம்.

 நடுவாக பெரிய கதவு.

கதவு திறந்திருந்தது.

உள்ளே சென்றோம்.

யாரும் இல்லை. நீண்ட பாதை. இரண்டு புறமும் அறைகள் .எதிர்தாற்போல இரண்டு வாசல்கள் இருந்தன. அருகே போய் நின்றோம்.

அது அறை போல இருந்தாலும் முடிவில்லாமல் நீண்டு கொண்டு போனது.

அந்த வீட்டின் முன் புறம் ஒரு தெருவிலும் பின் புறம் மற்றொரு தெருவிலும் முடிந்தது..

அவ்வளவு நீளம். சுவரில் வேறு சன்னல்கள் இல்லை. நான் அந்த கதவின் அருகே சென்று உற்றுப் பார்த்தேன். கும்மிருட்டாக இருந்தது.

அறையில் நடுவாக ஒரு சிறிய பாதை தெரிந்தது.

அதன் இருபறத்திலும் நெல் குவிந்து சுவர்வரை இருந்தது..

ஒரு மாதிரி கெட்ட வாடை அடித்தது..

யாரது..? என்று குரல் வரவே நிமிர்ந்து பார்த்தேன்.

ஒரு அம்மா மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்..

வெளிச்சம் குறைவாக இருந்தது.

 அருகே வந்ததும் என் தகப்பனாரை பார்த்து.. தம்பி என்று ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதார்கள்.

அச்சு அசலாக அந்த பெண் என் தகப்பனாரை உரித்து எடுத்து வைத்தது போல ஒரு உருவ ஒற்றுமை..

 என் தகப்பனார் அழவில்லை..

வா. வந்து உட்கார் என்றாள்..என் அத்தை..

இனி அவளை என் அத்தை என்று சொல்வதுதான் சரியானது..

யாரையே கூப்பிட்டாள். ஒரு நார் கட்டில் கொண்டு வரப்பட்டது.

அதில் நாங்கள் அமர்ந்தோம்.

அத்தை பக்கத்தில் ஒரு மூட்டை இருந்தது அதில் உட்கார்ந்து கொண்டாள்

இது என்ன வீடு ..ஏதோ குடோன் மாதிரி இருக்கிறது.

சோபா இல்லை. நாற்காலி இல்லை. மேசை இல்லை..

 அத்தை தேவகி என்று கூப்பிட்டாள்.

மாடியில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்தாள்.

இவள்தான் என் கடைசி பெண்.

அப்பா அவளை பார்த்து இங்கே வாம்மா..என்றார்

அவள் தயங்கினாள்..

போம்மா ..இது என் தம்பி.. உனக்கு மாமன்..

என்னத்த சொல்ல நமக்குள்ள போக்கு வரத்து இல்லாமலேயே பேயிட்டு..அத்தை அழுதாள்..

நான் அத்தையை கவனித்தேன் .கழுத்து தாங்காத வண்ணம் பெரிய தங்க வடச்சங்கிலி போட்டிருந்தாள்..

என்னமோடா. நீ கிறிஸ்தவனா ஆயிட்டே அதனாலயோ என்னமோ ஒரு நல்லது பொல்லதுக்கு வராமலேயே போயிட்டோம்.

எங்க சாமி கொடைக்கு ஊரே திரண்டு இருக்கும். பத்தாயிரம் சனத்துக்கு பந்தி நடக்கும். ஆனா பாரு ..என் குடும்பத்தில் இருந்து யாருமே வரது கிடையாதுஉன்ன கூப்பிட்;டாலும் நீ வரமாட்டே..

ம்.. நீ எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியாது..பிறகு எங்க கூப்பிட..

 அத்தை இதுக்கும் அழுதாள்இப்போது என்னை பார்த்தாள்.

அப்பா முந்திக் கொண்டார்..இவன் என் மகன் ஜெரேமியா..

என்னது..?அத்தை என் பெரை சொல்ல முயற்சி செய்து  ஏதோ முனுமுனுத்தாள்..

 என்ன பெயரோ.?.இங்க வாடா என் மருமகனே.

என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்..

வெற்றிலை நாற்றம் அடித்தது..

என் அத்தை ஒன்று அழுகிறாள் அல்லது பாசத்தின் உச்சத்துக்கு போகிறாள்..

தேவகியின் கையை என் அப்பா பிடித்துக் கொண்டிருந்தார். அவர் கை மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது..

 

போ ..போயி பயினி (பதனீர்) எடுத்துட்டு வந்து மாமாவுக்கு கொடு..தேவகி போய்விட்டாள்

ஜயாவை பற்றி  எதாவது தகல் தெரிந்ததா.? இது என் அப்பா.

தெரியல. சிங்கப்பூர்ல இருக்கிறதா சொல்லிக்கிட்டாங்க. ஒரு சின்ன சண்டையில என் அம்மாவை விட்டுட்டு போயிட்டார்.

அதுக்கப்புறமா நம்பும் படியா எந்த தகவலும் இல்லை..இது அத்தை

எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது..

உன் அம்மாவுக்கு எதாவது தகவல் தெரிந்ததா? (அதாவது என் பாட்டிக்கு )

 இல்லை என்று அப்பா தலையை ஆட்டினார்.

ம் ..இது என்ன மாதிரியான உறவு?;. ஓகே நான் யோசிப்பதை நிறுத்தினேன்

அந்த காலத்து ஆட்களுக்கென்று தனியாக ஒரு நியாயம் உண்டு .இப்போ அதை பற்றி பேசி எந்த பயணும் இல்லை.

 

தேவகி பதநீர் கொண்டு தந்துவிட்டு என்னை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

என் அத்தைக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். தேவகி கடைசியாக பிறந்த செல்லக்குட்டி..

தேவகியின் கடைகுட்டி அண்ணனுக்கும் அவளுக்கும் ஏழு வயது வித்தியாசம்..எப்படியோ நீங்களே கணக்குபோட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

அவள் ஐந்து அண்ணன்மார்களுக்கும் திருமணம் நடந்து பிள்ளைகள் இருக்கிறது..

மூன்று அண்ணன் மாடியில் வாழ்கிறார்கள்..

இரண்டு பேர் பக்கத்தில் தனி வீட்டில் இருக்கிறார்கள்

பெயருக்குதான் அது ஒரு வீடு..

வீட்டில் வேறு எந்த வசதியும் கிடையாது..

ஆனால் அனைவரிடமும் கிலோ கணக்கில் தங்கம் இருக்கிறது..நிறைய பேசினார்கள்..எல்லாமே புரியாத புதிராக இருந்தது..

(நான் இடையில் ஒன்றை உங்களுக்கு சொல்ல வேண்டும்அதற்கு மன்னிக்கவும்

என் அத்தையின் கணவர் பனை தொழில் செய்பவர். அவருக்கு ஒரு அண்ணன்..அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இவர்களோடே இவர்களுக்காகவே உழைத்து காலத்தை கடத்தி முடித்து இருக்கிறார். இரண்டுபேரும் முரட்டு வேலைக்காரர்கள்அதாவது என் மாமா பனை மரத்து மண்டைக்குள்ளே  குறுத்தை பிடித்தபடி தூங்குவாராம்..

வேலை.. வேலை.. அப்படி சம்பாதித்தது தான் ஏக்கர் கணக்காக வயல்களும் மற்ற வசதிகளும்..பிள்ளைகள் வளர்ந்ததும்.எல்லோருக்கும் பெரிய பெரிய கடைகள் திருச்சொந்தூரிலும் ஸ்ரீவைகுண்டத்திலும் வைத்துக் கொடுத்தார்.

பணம் தாராளமாக புழங்கியது. தேவகி அவளுக்கு செய்து வைத்திருக்கும் நகைகளை எனக்கு காட்டினாள் .அது இரண்டு அமுல் பால்பவுடர் டப்பா நிறைய இருந்தது..)

--------------------------------------------------

என் தகப்பனார் கிளம்பினார்.

என் அத்தை விடவில்லை..எங்க அவசரமா போறே..

கன்னியாகுமரி வரை போகணும்.

சரி போ ---போயிட்டு வரும்போது மருமகனை கூட்டிட்டு போ.

ம். சரி என்று கிளம்பினார்.

நான்.அப்பா என்றேன் அவர் கனிவாக என்னை பார்த்தார் , நான் புரிந்து கொண்டேன்..சரி என்றேன்..

அது யார் காதிலும் கேட்கவில்லை.

இரவு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..

ஐயோ..இது எனக்கு புது மாதிரியான அனுபவம்..

எனக்கு என்று ஒரு நார் கட்டில் போடப்பட்டது.அதில் போய் அமர்ந்தேன்..

தேவகி....அத்தை எல்லோரும் போய்விட்டனர்

ஒரு மணி நேரம் அந்த இருண்ட வீட்டில் கட்டிலில் மல்லாக்க படுத்தபடி மாடியை பார்த்தவண்ணம் இருந்தேன்..ஒரே ஓரு குண்டு பல்பு மஞ்சயாக ஒளியை கசிய செய்தபடி இருந்தது ..வேறு ஆள் அசைவே  அங்கு இல்லை.

திடீரென்று மருமகனே சவுக்கியமா..? அப்பாவ இப்போ பார்த்திட்டுதான் வாரேன்.

ஒரு கறுத்த நபர் வந்து கொண்டிருந்தார்.

மருமகனே என்றால் அவர் எனக்கு மாமனா? அதாவது என் அத்தையின் கணவர்..

ஆறடி உயரம் முருக்கிய மீசை. நரை விழுந்த தலை.ஆள் வாட்ட சாட்மாக இருந்தார்.தேவகியின் தகப்பனா..?

மாலையானது..

பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் அதாவது தேவகியின் அண்ணன் பிள்ளைகள் வந்து விட்டனர். வந்ததும் விளையாட வெளியே சென்றுவிட்டனர்.

நானும் மெதுவாக அந்த பெரிய முன் வாசலை கடந்து தெருவுக்கு வந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன்

சற்று தூரத்தில் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது.

அருகே போகலாம் என்று நினைத்து நடந்தேன்.

வாய்க்காலில் எருமை மாடுகளும் மனிதர்களும் ஒன்று சேரக்குளித்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் மாட்டின் முதுகில் ஏறி சவாரி செய்தனர். மாடு அவர்களை சுமந்த வண்ணம் தண்ணீரில் மூழ்குவதும் பின் வெளியே வருவதுமாக இருந்தது.

இது எனக்கு வியப்பாக இருந்தது..

இந்த கிருமி என்றெல்லாம் சொல்வார்களே அது இந்த பிள்ளைகளிடம் அண்டாதோ என கேள்வி ..

தண்ணீர் அடைக்கும் மடை ஒன்று இருந்தது.

அதன் மேல் உட்கார்ந்தேன்..அருகே ஒரு உயரமான கட்டடம் இருந்தது.அதன் உச்சியில் ஒரு கம்பம் நட்டப்பட்டு அதில் ஒரு ஒலிபெருக்கி குழாய் மாட்டப்பட்டு இருந்தது..

அது ரேடியே நிலையமாம்.. சிலோன் ரேடியோ அந்த குழாய் வழியாக தன் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.

பாளையங்கோட்டை தெற்குபஜார் முகப்பில் ஒரு நூலகம் இருக்கிறது.

அதன் அருகே கூட ஒரு ரேடியோ கம்பம் முன்பு இருந்தது..ஆல் இண்டியா ரேடியோ எந்நேரமும் கரகரத்தபடி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

நான் மடையை விட்டு எழுந்தேன்

நேரம் போனதே தெரியவில்லை..

மாலையானது. பின் இரவும் ஆனது. என் தகப்பனார் வரவில்லை.அதே நார் கட்டிலில் எவ்வளவு நேரம் அமர்ந்து இருப்பது.

அந்த காலத்தில் இப்போது போல செல்போன் கிடையாதுஎன் அத்தை வீட்டில் அவ்வளவு வசதி இருந்தாலும் தொலை பேசி கிடையது..

இரவு சாப்பாடு வந்தது.

அங்கே சாப்பாட்டு அறை அதில் மேசை என்று எதுவும் இல்லை.

ஒரு பித்தளை தட்டில்(ஆதற்கு வட்டில் என்றார்கள் ) நிறைய சோறும் மீன் குழம்பும் இருந்தது. பெரிய செம்பில் தண்ணீர் வைத்தர்கள்..

சாப்பாட்டில்; பாதிகூட என்னால் சாப்பிட முடியவில்லை..

அந்த இரவு ஒரு மறக்க முடியாததாக இருந்தது..

 என் கட்டிலுக்கு  அருகே மற்றொரு கட்டில் கிடந்தது..

அதில் என் மாமா வந்து படுத்தார்..

நடுச் சாமத்தில் ஏதேதோ புலம்ப ஆரம்பித்தார்.

தனக்குதானே மிக சத்தமாக பேசிக் கொண்டார்..

அவரே கேள்வி கேட்பார்.பின் அவரே பதில் சொல்வார்..

நான் கவனித்தேன்..மிக சத்தமாகத்தான் அவர் பேசினார்..

ஆனால் மாடியில் இருந்த யாருமே அதை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

ஒருவரும் எட்டிக் கூட பார்க்கவில்லை.

இது தினமும் நடக்கும் சங்கதிபோல..

அவர் சத்தம் மகா பயங்கரமாக கரகரத்து காதை குடைந்தது..

நாளைக்கு நீ சந்தைக்கு போகணும்...ம்..அங்க ஒருவன் வருவான். அவனிடம் மாடு என்ன விலைன்னு கேளு.(அதுவும் இராகம் போட்டு)

சரி கேட்கேன்..(இராகத்தோடு)

அவன் ஐயாயிரம்னு சொல்வான்.நீ நாலாயிரத்துக்கு கேளு..

சரி கேட்கேன்.

ம்.கரகரத்த குரலில் இரவு மூன்று மணிவரை இது நடந்தது.

மிகப் பெரிய சம்பாஷனை..

நான் முதலில் பயந்தேன்..பிறகு என்ன செய்வது.. சப்தநாடியும் ஒடுங்கி அமைதியாகி விட்டேன்

ஒருவாறு விடிந்தது..

அன்று சனிக்கிழமை.. பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. எல்லோரும் மாடியைவிட்டு கீழே இறங்கி வந்து நான் படுத்து இருந்த கட்டிலுக்கு அருகே (அது முற்றம்) விளையாட ஆரம்பித்தனர்..

கவனித்தேன். அது தாயவிளையாட்டு..

கொஞ்ச நேரத்தில் தேவகி கையில் பலகார தட்டோடு வந்தாள்.

இட்லியும் சட்னியும் இருந்தது.

அத்தான் இந்தாங்க.. சாப்பிடுங்க..

அத்தானாஎனக்கு சிலிர்த்தது..

பழைய சினிமா படத்தில் இந்த வார்த்தையை கேட்டிருக்கிறேன்..

தேவகி நீ என்ன சொல்லி என்ன கூப்பிட்ட.?

அத்தான்னு சொன்னேன். ஏன் என்ன ஆச்சு..?

இல்ல இந்த வார்த்தையை புதுசா கேட்கிறேன்..அதான்..

மாமா பையன பின்ன எப்படி கூப்பிடுவாங்க.

வயசுக்கு மூத்தவங்கன்னா அத்தான். இளையவங்கன்னா மச்சான்.

..கே.

தேவகி பக்கத்தில் இருந்த தூனில் சரிந்து உட்கார்ந்தாள். நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

தேவகி நீ சாப்பிட்டாயிட்டா.?

இல்ல.?

ஏன்சாப்பிடலாம்.

இன்னைக்கி என்ன ஸ்பெஷல்.

எப்பவும் மாதிரி பழைய கஞ்சியும் துவையலும்..

அப்போ இது எப்படி வந்தது. என் தட்டை காண்பித்தேன்.

அதுவா அம்மா உங்களுக்காக சின்னத்துரையை போய் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.

யார் அந்த சின்னத்துரை.?

எங்க உழவன்.?

சொந்தமா உழவன் இருக்கானா.?

இருக்கானாவா.? இருபத்தி நாலு குடும்பமே இருக்கு.அவங்களுக்கெல்லாம் விடு கட்டி கொடுத்திருக்காங்க.

சொந்த உழவங்க

அப்போ எவ்வளவு சொத்து உங்களுக்கு இருக்கும்..?

 அது தெரியாது. ஆனா நிறைய இருக்கு..

ம்

 தேவகி நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது.

என்னது.

 நான் சொன்னேன்.

அதுவா.. அவள் சாதாரனமாக சிரித்தாள்

எங்க அப்பாவுக்கு செவ்வாய்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சாமிவரும். அது வந்து கெஞ்சநேரம் பேசிட்டுதான் போகும்..

கொஞ்ச நேரம் பேசிட்டு போகுமா?

அதுவும் சாமியா ? எந்த சாமி..

சாமி பெயரை சொன்னாள்..

 எனக்கு திக்கொன்றது

ஆமா..இது வழக்கமா நடக்கிறதுதான். நீங்க பயந்திட்டடீங்களோ.?

ஆமான்னு சொல்லவா இல்லன்னு சொல்லவா.?

 தெரியல..

எங்களுக்குன்னு சொந்தமா கோயில் இருக்கு தெரியுமா.?

 தெரியாது..

ஆமா.. நீங்க கிறிஸ்டீனா.?

ஆமா..ஏன் கேட்க.?

சும்மாதான்நீங்க எப்படி கிறிஸ்டீனாயிட்டீங்க.?

அது தெரியாது. நான் பிறக்கும்போதே கிறிஸ்டீன்தான்.

அப்போ நல்லா பாடுவீங்களா.?

 ம் சுமாரா பாடுவேன்ஏன் அப்படி கேட்க.?

உங்க சர்ச்ல எல்லோருமா சேர்ந்து

பாடுகிறாங்களே.அதன் கேட்டேன்..வேற எதாவது இன்ஸ்ட்ரூமண்ட் வாசிப்பீங்களா.?

ஆமா..கிட்டார் சுமாரா வாசிப்பேன்..

..தேவகி கண்கள் விரிய பேசினாள்எனக்கு கிட்டார தொட்டு பார்க்கனும்னு ஆசையா இருக்கும்..

ஏன் அப்படி.? எங்க கோயில் கொடைவிழால ஒருதடவ சினிமா கச்சேரி வச்சிருந்தாங்க.

அப்போ திருநெல்வேலியில இருந்து "சில்வர் டோன்ஸ் க்ரூப் "வந்திருந்தாங்க.. அப்போ அதுல பார்த்தேன் செமயா வாசிச்சாங்க..

 

நான் சாப்பிட்டுவிட்டு கை கழுவினேன்

தேவகிவீட்டுக்குள்ளே இருக்கிறது போரடிக்குது. வெளியே போவோமா..? ..போயிட்டு வாங்க.

 நீ கூட வாயேன்..

நானா..?

ஆமா.

அது முடியாது..மத்தவங்க பார்த்தா தப்பா பேசுவாங்க.?

அப்போ இப்போ என்கூட பேசிட்டுதாNனு இருக்கே.

இது வீட்டுக்குள்ள..அதுவுமில்லாமா நீங்க என் மாமா பையன் .இங்க பேசலாம் கிண்டல் பண்ணலாம்..தெருவுல இது சரிப்படாது..

மாமா பையனுக்கு எந்த வரைக்கும் உரிமை இருக்கு.

தேவகி சிரித்தாள்.மற்றவங்கள விட அதிகமா.

அதாவது தொட்டு பேசக்கூடாது..மத்தவங்க இருக்கும் போது கிண்டலா. அதிகமாகவே பேசலாம்..விரசம் இல்லாம பேசணும்..

ம்நீ எது வரைக்கும் படிச்சிருக்கே.

பதினொன்னு..

 அப்புறம் ஏன் படிக்கல..

 படிக்க புடிக்கல..

ஏன் அப்படி சொல்லுற.?

என்ன படிச்சி என்ன பண்ண போறேன்..கடைசில ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க..அவ்வளவுதான்..

ம்அந்த வெறுப்புலதான் படிக்கலியா.?

ம்.ஆமா..

நீ படிக்கணுமுன்னா சொல்லு. உன்ன என் அப்பாகிட்ட சொல்லி அதற்கு ஏற்பாடு பண்ணுகிறேன்..

அதெல்லாம் சரிப்பட்டுவராது..

 ஏன் வராது..

உங்க கூட நான் வந்திட்டா அப்புறம் என்ன யார் கட்டுவாங்களாம்.?

அப்படியா..?

ஆமா.ஒன்னு பண்ணலாம் நீங்க என்ன கல்யாணம் பண்ணிகிட்டா இப்படி நடக்கலாம்வெகுளியாய் கலகலத்தாள்...

எனக்கு பக்கென்றதுஎன்ன இப்படி சொல்லிட்டே..யாராவது இத கேட்டா தப்பா நினைக்க மாட்;டாங்களா.?

தேவகி சிரித்தாள்ஐயோ அத்தான்முறை பையன் கிட்ட இது கூட பேசலன்னா எப்படி..?

என்னவோ போ..,வெளியே கூப்பிட்டா வரமாட்டேங்கிற.

அதுதான் உங்களுக்கு கோபமா? நான்தான் கூடவே வாரேன்கிறேனே? தேவகி மீண்டும் சிரித்தாள்..

அப்போ பார்த்து பக்கத்து ரேடியோ ரூம்மில் இருந்து ஏதோ பாட்டுவந்தது..

தேவகி பழைய சினிமா பாட்டுல அத்தான் என்னத்தான்னு ஒரு பாட்டு இருக்குல்ல..

ஆமா..

உங்க வீட்ல ரேடியோ இருக்கா.

இல்ல..ஏன் வாங்கல..நீ வாங்கித்தரச் சொல்லி கேட்கலாமே..

ம் ..சினிமா பாட்ட கேட்டு கெட்டு போவேணாம்அம்மா சொல்றாங்க..

அப்படியா சொன்னாங்க..

ஆமா..ஆனா உண்மை அது இல்ல.

அப்புறம்.

ரேடியோ வாங்க இருநூறு ரூபாய் செலவாகிடுமே..தேவகி சிரித்தாள்..

என்ன பாட்டு சொன்னீங்கம்

அத்தான்என்னத்தான்..

அதவா..

அத்தான் என்னத்தான்

அவர் என்னைத்தான்..

எப்படி சொல்வேன் அதை.

அவள் பாடியது எனக்கு சிலோன் ரேடியோ பாடியது போல இருந்தது

தேவகி அந்த பாடல்  பாடியபடி கைகளால் அபிநயம் பிடித்தாள்.

எனக்கு சிரிப்பாக வந்தது..

பெண்கள் உலகம் தனித்துவமானது..வீட்டிற்கு உள்ளும் வீட்டிற்கு வெளியிலும் வேறு வேறு விதமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது..

அது இந்த நாட்டில் உள்ள நடைமுறையினால் வந்ததோ..?

தேவகி உறவுக்குள் திருமணம் சரியானது இல்லைங்கிறாங்களே..

அப்போ எப்படி இவ்வளவு ஜனத்தொகை வந்தது..அதை பற்றி எனக்கு சரியா தெரியாது..ஆனால் உறவுக்குள் திருமணம் பெண்களுக்கு பயத்தை கொடுக்காது..

உதாரணமா எங்க வீட்ல..அதாவது இங்க உங்களால ஒரு வருஷம் இருக்க முடியுமா..?

ரொம்ப கஷ்டம் தேவகி..

ஏன் .அப்படி என்ன கஷ்டம்..?

நீ தப்பா நினைக்காதே. இத வீட்ல அடிப்படை வசதியே இல்லையே.

ம்..அப்போ நாங்க எல்லாம் எப்படி வாழுகின்றோம்.

நீங்க இதுக்கு பழகிட்டீங்க..

அதாவது இதைவிட அதிக வசதியான ஒன்றை நாங்கள் பார்க்கவில்லை என்கிறீங்க அதானே..

 அப்படியும் சொல்லாம்.

பெண்களுக்கு கூட கல்யானம் பண்ணி போகக் கூடிய இடம் எப்படி இருக்குமோ யார் கண்டது.?.எப்ப எப்படி இருந்தாலும் அங்க போய் வாழத்தானே வேண்டும்..

 சொந்தத்தில கல்யானம் பண்ணினா எல்லாமே தெரிந்த முகமா இருக்கும்..அதனால ஆரம்பத்தில கஷ்டமா இராது .போகப்போக எல்லாமே பழகிடும்உதாரணமா உங்க அப்பாவ பார்த்தா எங்க அம்மா முகச்சாட அப்படியே இருக்கிறது..அப்போ எனக்கு அம்மா கூட இருக்கிற மாதிரி ஒரு உயர்வு வரும்..இது வெளி உறவைவிட நல்லது தானே..

ஆனா பெண்கள் வாழ்க்கையில் எல்லாமே அடுத்தவர்கள் எடுக்கும் முடிவே கடைசி வரை நடக்கிறது..

 

உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா தேவகி.?

ஆமா ..இராஜபாளையத்தில் ஒரு பணக்கார பையனை பார்த்திருக்காங்க இன்னும் முடிவாகல..

உனக்கு பிடிச்சிருக்கா.?

ம்..நல்லாத்தான் இருக்கான்..

எனக்கு ஏனோ அந்த வார்த்தை கேட்க கொஞ்சம் கசப்பா இருந்தது.. ஏன்னு தெரியல..

 தேவகி நல்ல விபரமான பெண் என்பதை புரிந்து கொண்டேன்..எனக்கு அவள் மீது காதல் இல்லை. ஆனால் அபரிதமான பாசம் இருந்தது..

இப்படி ஒரு சொந்தம் எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது என்பது உண்மைதான்..மதியம் வாக்கில் என் அப்பா வந்துவிட்டார்.

போன இடத்தில் வேலை தாமதமாகி விட்டது என்றார். நாங்கள் புறப்பட்டோம்.வழக்கம் போல என் அத்தை அழுது வழியனுப்பினாள்

தேவகி அழவில்லை .ஆனால் மகிழ்ச்சியாகவும் அவள் இல்லை.

எனக்கு அவளை விட்டு பிரிவது வருத்தமாக இருந்தது..

வந்துவிட்டோம்..

இன்று மீண்டும் அங்கே போக வேண்டும் என விருப்பம் வந்தது ஏனோ?

கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது. தேவகி எங்கே இருப்பாள்.?

அத்தை நிச்சயம் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை.

 அந்த வாய்க்கால் .அந்த ரேடியோ நிலையம்.அந்த ஒலிபெருக்கி.இருந்தாலும் சிலோன் ரேடியோ இப்போ இல்லையே..

எனக்கு போகனுமா ?என்கிற பயம்.. வந்தது.

என் கார் கருங்குளம் தாண்டி சென்று கொண்டிருந்தது. இந்த இடங்கள் அதிக மாற்றம் இல்லை. விவசாயம் நல்ல முறையில் நடப்பதால் மாற்றம் நடக்காமல் இருக்கலாம்..

ஸ்ரீவைகுண்டம் ஆற்று பாலத்திற்கு முன் போலிஸ் ஸ்டேஷன் வரும் அதற்கு முன் ஆற்றாங்கரையில்  மரங்கள் அடர்ந்து இருக்கும் அதில் வவ்வால்கள்; தலைகீழாக தொங்கி கொண்டிருக்கும்.இப்போதும் அப்படி இருக்கிறதா என பார்த்தேன் ...

இருக்கிறது.அதில் மாற்றம் இல்லை.

என் கார் ஆற்றுப்பாலத்தின் அருகே வந்தது.ஆற்றை கடக்க இப்போது புதிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது..

அருமை.

புதிய பாலத்தின் வழியாக ஸ்ரீவைகுண்டம் ஊரை நோக்கி காரை ஓட்டினேன்

ஊர் நிறைய மாற்றத்தோடு காணப்பட்டது.

விசாரித்தேன் .மீண்டும் மேற்கு நோக்கி ஒரு சாலையில் பயணிக்க வேண்டும் என்றார்கள். முன்பு இரண்டு பக்கமும் வயல்களாக இருந்த நிலம் இப்போது இடையிடையே விடுகள் காணப்பட்டது.. ஆனாலும் முற்றிலும் அழியவில்லை..

 நல்ல விஷயம்தான்

வயல்வெளியில் வீடு கட்டுவது  எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம்..

சாலை போய்க்கொண்டே இருந்தது..

முடிவாக ஒரு வாய்க்கால் குறுக்கே வந்தது. அப்பாடா..வந்தாகிவிட்டது.அதே மடை .பக்கத்தில் அந்த ரேடியோ நிலையம் இருக்கிறதா என்று பார்த்தேன்.

இருந்தது.

ஆனால் உருக்குலைந்து போய் .சிதைந்து போய் இருந்தது. மேல் புறத்தில் ஒலிபெருக்கி இல்லை.அதை தாங்கி நிற்கும் கம்பம் மொட்டையாக இருந்தது..

நகர்ந்தேன்காரை ஓரமாக நிறுத்திவிட்டு தேவகி வீடு..இங்கேதான் இருந்தது..

வரிசையாக நிறைய வீடுகள்..சிறு பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்..

 என் அத்தை பெயர் நினைவில்லை.

.மாமா பெயர்..அதற்கு வாய்ப்பே..இல்லை

எப்படி ஆரம்பப்பிப்பது. யாரிடம் கேட்பது. அந்த வரிசை வீடுகளை கவனித்தேன் ஒன்று புரிந்தது..

என் அத்தையின் நீள விட்டை ஒரு பக்க சுவர் இடிக்கப்பட்டு அது பல அறைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக வீடாக்கப்பட்டிருக்கிறது..

 சரி இவர்களிடம் விசாரிக்கலாம்..

பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

அம்மா இங்கே தேவகின்னு ஒரு அம்மா இருந்தாங்க..அதுவும் சுமார் நாற்பது வருடத்திற்கு முன்..

அவங்கள பத்தி தெரியுமா.?

தெரியதுயா.. நாங்க வாடகைக்கு இருக்கோம்..

நீங்க அந்த தெருவில் போய் கேளுங்க அங்கதான் பழைய ஆளுங்க இருக்காங்க.

..அது உழவர்கள் குடியிருந்த தெரு.. கே.. இது சரிதான்

ஒரு வீட்டுக் கதவை தட்டினேன்.உள்ளே திரைப்பட பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரு யுவதி வந்தாள்.

 எனக்கு தெரியாது.எனக்கு கல்யாணம் ஆகி இங்க வந்து இரண்டு மாதம்தான் ஆகுது. நீங்க எங்க மாமனார்ட்ட கேளுங்க.

அவரு எங்க..

ஸ்ரீவைகுண்டம் போயிருக்காரு..

வேற பழைய ஆளுங்க யாராவது இங்க இருக்காங்களா..?

தெரியல நீங்க அங்கிட்டு போய் பாருங்க..எங்கிட்டு ..கையை நீட்டி திசை காட்டினாள்.

நகர்ந்தேன்..

ஒருவரும் கண்ணில் படவில்லை.

எல்லா வீட்டுக் கதவுகளும் மூடப்பட்டு இருந்தது.

நாகரீகம் இங்கேயும் வந்து விட்டது.

பழையபடியும் வாய்கால் அருகே வந்தேன்என்ன செய்வது..?

வாய்கால் அழுக்காக இருந்தது. ஒருவரும் அங்கு குளிக்கவில்லை. அந்த பக்கத்தில் அந்த அழுக்கு தண்ணீரில் ஒருவர் மீன ;பிடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கேட்கலாம்.

அவர் அருகே போய் நின்றேன்.அவர் என்னை அன்னாந்து பார்த்தார்..

வயதானவர்ஐயா இந்த மீனை என்ன செய்ய போறிங்க.?

 விற்கணும்..ஏன்

ஒன்னும் இல்ல இத வித்தா எவ்வளவு கிடைக்கும்.?

என்ன ஒரு நூத்தம்பது ரூபா கிடைக்கும்..

நான் இருநூறு ரூபாயை எடுத்து அவர் ககைளில் கொடுத்தேன்.

ஓட்டைப்பல் தெரிய சிரித்தார். கொஞ்சம் பொறுங்க இன்னும் ஐஞ்சாறு மீனை பிடித்துதாரேன்

இந்த மீனை நீங்களே விற்று அதையும் எடுத்துக்கோங்க..எனக்கு ஒரு விபரம் தெரியணும் என்றேன்.

அவர் தூண்டிலை கரையில் வைத்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார்.அப்போது கவனித்தேன் எப்படியும் அவருக்கு வயது என்பது இருக்கும்..

நான் அந்த வீட்டை காட்டினேன்

அவர் புரிந்து கொண்டார். ..பண்ணை வீடா..?

எனக்குள் ஒளிர்விட்டது..

ஆமா அவங்கள எங்க.. இப்போ இருக்காங்களா.?

 அவர் குனிந்து கண்களை கசக்கி கொண்டார். கொஞ்ச நேரம் குனிந்தபடியே இருந்தார்.

பின் நிமிர்ந்து என்னனைப் பார்த்தார். நீங்க அவுகளுக்கு என்ன வேணும்..?

அந்த அம்மா எனக்கு அத்தை உறவு..

ம்..எல்லாரும் போயிட்டாங்க..

போயிட்டாங்கன்னா.?

அவங்க மகன்கள்ல ஒருத்தர பக்கத்து ஊர்காரங்க வெட்டி கொண்ணுட்டாங்க..

 அடப்பாவமே..ஏன்

இந்த கோயில் கொடையில ஒரு சின்ன பிரச்சணை..அதான்.

அதுகாகாக கொலை செய்யணுமா.?

அது சாதிபிரச்சணையில பேய் நின்னுது..

இவங்களும் ஆளாளுக்கு அருவா எடுத்துக்கிட்டு புறப்பட்டாங்க.. அந்த அம்மா மகன்கள்ல மூத்தவரு நல்லா விபரமானவரு..கொலைக்கு கொலைன்னா இது முடிவில்லாம போய்கிட்டே இருக்கும்.அதனால நாம ஊரை காலிபண்ணிட்டு முதல்ல போயிடுவோம்..அப்படின்னு எல்லா சொத்தையும்" தவுட்டுக்கு" வித்த மாதிரி வித்துட்டு போயிட்டாங்க..

எங்க போயிட்டாங்க.?

 அது தெரியாது..வடக்கன்னு சொன்னாங்க..மெட்ராசா இருக்குமுன்னு நினைக்கேன்..

 அந்த அம்மாவுக்கு ஒரு பொண்ணு இருந்ததே அது என் ஆச்சி.?

அந்த பொண்ணா..அதுக்கு கல்யாணம் ஆயிட்டு.கல்யாணம் தடாபுடால்ல நடந்து. பந்தி மட்டுமே ஒரு வாரம் நடந்தது..

விடாம மூனு வேளையும் சாப்பாடு நடந்தது. அதுக்கப்புறம்தான் இந்த கொடுமை நடந்தது..

ஓஹோ..அந்த பொண்ண எந்த ஊர்ல கட்டி கொடுத்தாங்க..

அது தெரியாதய்யா.. அவங்க ஊரவிட்டு போனதுக்கு அப்புறமா யார் யாருலாமோ இங்க குடியேறி இருக்காங்க.

பழைய ஆளுங்க முக்கால் வாசிப்பேர் இப்போ உசுரோடேயே இல்ல. ..நாற்பது வருசமுன்னா சும்மாவா..? ஒரு தலை முறையே மாறி இருக்குமே.

 உண்மைதான்..எனக்கு இனி இங்க வேலை இல்ல..

 என் வயதே அறுபதை கடந்து எழுபதை தொட்டு நிற்கிறது. இப்போது அவளை ஏன் தேடி வந்தேன் என்பது எனக்கு விளங்கவில்லை. சே.. என்ன ஒரு மாற்றம்..

தேவகி..இப்போது பாட்டியாகி இருப்பாள்.

உயிரோடு இருப்பாளா.? தெரியவில்லை..

மனதிற்குள் ஒரே இருட்டாக தெரிந்தது..

நான் என் காரில் மெதுவாக திரும்பினேன்

சாலைகள் வயல்கள் ஒன்றும் கண்ணுக்கு தெரியிவில்லை.. வாழ்க்கையில் சில ஆட்களை மீண்டும் காண வேண்டும் என ஆசை ஒரு மனிதனுக்கு அவன் கடைசி காலங்களில் வருவது சகஜம்தானோ..என்னவோ தெரியவில்லை..

-------------------------------------------------------------------------------------------------

பிரசங்கி 2:16.

 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்

--------------------------------------------------------------------------------------------------------------