செவ்வாய், 2 ஜனவரி, 2018

பாசப் பொய்கள்

                                              பாசப் பொய்கள்
அர்சிஸ்ட மரியாயே சர்வேஸ்ரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காய் இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும் ஆமென்..
பொன்னம்மா பாட்டி அந்த ஜெபத்தை கேட்டாள். அந்த சத்தம் பக்கத்து கத்தோலிக்க ஆலயத்தில் இருந்து ஒலி பெருக்கியில் வந்து கொண்டிருந்தது. வழக்கமாக அந்த ஜெபத்தோடு பொன்னம்மா பாட்டியும் முணுமுணுப்பாள்.                                           இன்று அப்படி முனுமுனுக்க முடியவில்லை..காரணம்  சென்னயைில் இருக்கும் தன் மகளையும் தன் ஐந்து வயது பேரனையும் நினைத்தாள். 
இந்த கிறிஸ்மஸ்க்கு அவர்களை தன்னிடம் அழைக்க வேண்டும் என்று நினைத்தாள்.அதை தன் புருசன் பொன்னம்பலத்திடம் எப்படி சொல்வது.? பொன்னம்பலம் வேண்டாம் என்பான்....அவள் வரும் போது வரட்டும் நீ தொந்தரவு செய்யாதே என்று சொல்லி விடுவான்
..
பொன்னம்பலத்தை  பற்றி பாட்டிக்கு நன்றாக தெரியும்.அந்த காலத்திலே அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களில் இரண்டு பெயர்களும்  அவர்களின் முன்னோர்களின் பெயர்கள்.   பொன்னம்பலம் இந்து, 
பொன்னம்மா கத்தோலிக்க பெண். 
பொன்னம்பலம் அவளுக்கு முறைப்பையன். ஒரே குடும்பத்தில் இந்துவும் கிறிஸ்தவனும் கலந்து இருப்பது நாடார் சாதியில் சாதரணமான ஒன்று.
 தாத்தா இந்து மதத்திலும் பிள்ளகைள் கிறிஸ்தவ மதத்திலும் இருப்gதும் எந்த உறுத்தலும் இல்லாமல் பழகுவ6தும் சாதாரணமான காரியம்.
பொன்னம்மாவை மற்றவர்கள் அவள் முறை பையனோடு சேர்த்து பெயர் சொல்லி கிண்டல் பண்ணவே அது இருவருக்கும் காதலாய் மாறியது.

ஆனால் பொன்னம்மா பாட்டியின் தகப்பன் ,பொன்னம்பலத்துக்கு  பெண் கொடுக்க மனதில்லாமல் இருந்தார். 

ஒரு நாள் புளியம்பட்டி அந்தோனியார் கோவிலுக்கு வண்டி கட்டி ஊரோடு புறப்பட்டார்கள். இரவு நடுச்சாமத்தில் புறப்பட்ட வண்டிகள் காலை முகக்கருக்கலில் (அதிகாலையில்) புளியம்பட்டியை அடைந்தது.                                         

மாலையில்தான் கோயில் பூசை விசேஷம்.

ஆகவே ஊர் மொத்தமும் கோயில் மரத்தடியிலும் மண்டபத்திலும் லேசாக கண்ணயர்ந்தார்கள். இரவு பூசை முடிந்து சாப்பாட்டு வேளையில் பொன்னம்மாவை தேடினார்கள் ,பொன்னம்மா அங்கு இல்லை.                                                    


மொத்த கூட்டமும் குழப்பத்தில் இருந்தது.அப்போது ஒரு சின்னப்பெண் பொன்னம்மா ஒரு வீசைக்காரனின் கையை பிடித்துக் கொண்டு போனதை பார்த்தேன் என்று சொன்னாள். 


பொன்னம்மாவின் தகப்பன் அந்தோணிக்கு உடனே புரிந்தது ,அது பொன்னம்பலம்தான் என்று.                                                       கோபத்தில் கொந்தளித்தான்…உடனே ஊருக்கு சென்று பொன்ம்பலத்தை பாளை சீவியது போல சீவிவிடுவேன் என்று கூப்பாடு போட்டான். 

ஊர் மொத்தமும் அவனை அதட்டியது.

பொன்னம்பலம் முறைப்படி பெண் கேட்டபோது நீ மறுத்தாய், அவன் கடத்தி விட்டான். முறை பையனுக்கு இல்லாத உரிமையாப்பா.? 

பேசாமல் ஊருக்கு போனதும் அவளுக்கு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய். இப்போது அமைதியாய் இரு என்றது.

 

இப்படி அடாதடியில் திருமணம் செய்த பொன்னம்பலம் சரியான உழைப்பாளி…

பனை தொழில் செய்யும் அவனுக்கு கை கால்களில் காய்ப்பு பிடித்து கறுப்பாய் இருக்கும்.பார்ப்பதற்கு முரடனாய் தோன்றும் அவன் உண்மையில் மிக நல்லவன். 

ஐம்பது பனைகளில் ஒருவனாய் பதனீர் இறக்குவான்.                                           

காலையிலும் மாலையிலும் இரண்டு முறை பனையில் ஏறி பாளை சீவ  வேண்டும்.

இது சாரதாண காரியம் அல்ல.

அவனுக்கு சொந்தமாக ஒரு இடத்தில் முப்பது பனைகள் இருந்தது.ஆகவே காசைப்பற்றி எந்த கவலையும் இல்லை.

 

பொன்னம்மா பாட்டிக்கு திருமணம் முடிந்து பல வருஷங்கள் பிள்ளை இல்லை.. தன் புருஷனை அழைத்துக் கொண்டு. மணப்பாடு சிலுவைக்கோவில், உவரி அந்தோணியார் கோவில், வேளாங்கண்ணி மாதா கோவில் என் ஊர் ஊராய் அலைந்து பார்த்தாள்.எந்த பயனும் இல்லை.பொன்னம்பலத்துக்கு எந்த மத பற்றுதலும் இல்லை.சும்மா மனைவியோடு போவான் வருவான்.அவ்வளவே ஆனால் தன் நாற்பதாம் வயதில் பொன்னம்மா பாட்டி ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள்.                                                           அதற்கு திரேசம்மாள் என்று பெயர் வைத்தாள் .

பொன்னம்பலம் தன் மகளை கீழே நடக்க சம்மதிக்க மாட்டான். அவ்வளவு செல்லம்.  மகள் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள்.  மேல் படிப்பு படிக்க டவுனுக்கு போக வேண்டும். அது  எட்டி (தூரமாய் ) போகணுமே .


பொன்னம்பலம் ரொம்ப யோசித்தான். பிறகு மற்ற பிள்ளைகளோடு  பள்ளிக்கு அனுப்பினான். எட்டாம் வகுப்பு  படிக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை, ஒரு நாள் திரேஸ் முகம் வாடி இருந்தது. பொன்னம்பலம் இதை கவனித்துவிட்டு என்னம்மா இப்படி இருக்கே என்றான். 

                    அவ்வளவுதான் திரேஸ் ஆழ ஆரம்பித்தாள். பொன்னம்பலம் பதறிவிட்டான்.                                                                      டீச்சர் ரொம்ப அடிக்கிறாங்கப்பா என்று அழுகையோடு சொல்லி முடித்தாள்.                                                                அதுவுமில்லாமல் தன் கைகளை காட்டினாள்.புறங்கையில் அடிஸ்கேலால்(ஒரு அடி ஸ்கேல்) அடித்ததில் வரிவரியாய் கோடுகள்.    

பொன்னம்பலம் அழுதுவிட்டான்.அந்த டீச்சரை இப்போதே சென்று கண்ட துண்டமாய் வெட்டி வீசிவிடுவேன். பச்சப்பிள்ளய இப்படியா அடிப்பது என்று கத்தினான். பொன்னம்மா சமாதானம் செய்தாள், பள்ளிக்கூடத்திலே அடிப்பது சாதாரண காரியம்.                                                                     ஆனா கை மொழியில அடிச்சிருக்க வேண்டாம், சரி விடுங்க என்றாய்.                                                                                                           

என்னத்த விட. நாளை காலையில பள்ளிக்கூடத்துக்கு போய்…..என்ன நடக்குதுன்னு பாரு !என்று கத்தினான்.                       

 

பொன்னம்மா  சொன்னாள், அங்க போய் கத்தி எதாவது பண்ணினா அது பிரச்சனை ஆயிடும். வேணுமின்னா இவள பள்ளிக்கூடத்துக்கு போகமா நிப்பாட்டிடுவோம். இவா படிச்சதுபோதும் என்றாள்…       

 

ஆஹா ......பொன்னம்பலத்துக்கு இது அற்புதமான யோசனையாய் இருந்தது. 

அதோடு திரேசம்மாள் படிப்பு முடிவுக்கு வந்தது.

                   அவள் பைக்கட்டை (புத்தக பையை) எடுத்து பொன்னம்பலம் கோபமாய் வீசி எறிந்தான். இது திரேசம்மாளுக்கு மிக மிகழ்ச்சியாய் இருந்தது.                                 அப்பாட சனி விட்டது. 

அதற்கப்புறம் திரேசம்மாள் அழவே இல்லை. 

திரேசம்மாள் குமரியாகி விட்டாள்.

 இவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமே. பொன்னம்மாவுக்கு ஒருயோசனை ,

இங்க பக்கத்தில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பிள்ளை இருப்பது நல்லது என்று நினைத்தாள்.                            அவள் நினைத்தது போலவே ஒரு பையனை பார்த்தார்கள் .அது வசதியான குடும்பம் இல்லை .ஆனாலும் பொன்னம்பலம் நிறைய செய்தான்.                                                                         

திரேசம்மாள் சரியாக ஒரு வருடத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானாள்..

பொன்னம்பலத்துக்கு பேரன்  செபஸ்டியானுடன் நேரத்தை கழிப்பது கொள்ளைப் பிரியம்.போரனுக்கு இரண்டு வயதாகும்போது மருமகன் சென்னைக்கு போய் அங்கே ஏதோ கம்யூட்டர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான்.                              இது பொன்னம்மாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது..ஆனால் பொன்னம்பலம் வேறு மாதிரியாய் நினைத்தான் ...தன் மகளும் பட்டணத்திற்கு போய் வாழட்டுமே. அப்படி போனால்தான் நாமும் போய் இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டு வரலாமே.                                                                                                                                                                        

எப்போதுதான் சென்னையை பார்ப்பது ?                                       

கண்ணில் பட்ட எல்லோரிடமும்  தன் மகள் மெட்ராசில் இருப்பதாக பெறுமையுடன் கூறிக் கொள்வான்.                                                                             


 இதை பற்றி நினைப்பு வரும்போது எல்லாம் அவன் முகத்தில் ஒரு அலாதி சிரிப்பு வரும். தன் மீசையை ஒரு கையால் திருகி கொண்டு பெறுமையாக நினைத்துக் கொள்வான்.


பொன்னம்மா பாட்டிக்கு இப்போது அடிக்கடி விக்கல் வருகிறது. சாப்பிட உட்காந்துவிட்டால் ஒரு வாய் சாப்பிட்டால் மறு வாய் சாப்பிட முடியவில்லை.  இந்த விக்கலுக்கு மருந்து எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள். கொஞ்சம் சரியானது போல இருக்கும்.பிறகு மறுபடியும் வரும். 


இப்போது தன் மகளைப் பற்றி கவலை அவளை வாட்டியது.

இந்த பண்டியலுக்கு (பண்டிகைக்கு ) பிள்ள வந்தா நல்லது.


எப்படி கூப்பிட.அவளுக்கு எப்படி வசதியோ.

இப்போ எல்லாம் போன்ல உடனே பேசிவிடலாம்..கண்ணுதான் சரியா தெரியமாட்டேன்குது. 


அந்த போன்ல நம்பர் பட்டனை கண்டுபிடித்து அழுத்துவது சிரமாமாய் இருக்கிறது.

பொன்னம்பலம் படிக்காதவன்.

அவன் மகளிடம் பேச மனைவியின் உதவியைத்தான் தேடுவான்.

பொன்னம்மா பாட்டி இன்று மகளை அழைக்க திட்டமிட்டாள். முதலில் தன் மகளிடம் பேசி அவள் நிலமையை தெரிந்து கொள்ள வேண்டும். செல்போனை எடுத்து கண்களை சுருக்கி கொண்டு நம்பர்களை கண்டுபிடித்து ஒருவாறு அழுத்தி தன் மகளுடன் பேச ஆரம்பித்தாள்…                             

எப்படிம்மா இருக்கே.                                                                               

நல்லா இருக்கேன்மா..                                                                     மாப்பிள்ள எப்படி இருக்காரு                                                                     

  .ம்     நல்லா இருக்காரும்மா.                                                                      பண்டியலுக்கு ஊருக்கு வாயேம்மா,                                                                       இப்போ அவருக்கு லீவு இல்லியேம்மா.                                                     எப்படியும் ஒரு எட்டு வந்துட்டு போயேன்.

அம்மா …நான் என்ன பக்கத்திலேயா இருக்கேன் ,உடனே வந்துட்டு போக

என்னமோம்மா …சின்ன பயல பார்க்குனும்போல இருக்கு.அவன் எப்படிம்மா இருக்கான்…


நல்லாத்தான் இருக்கான். வெளியே விளையாடிக்கிட்டு இருக்கான்..

அப்போது வீல்... என்ற சத்தம் போனில் கேட்டது

அது என்னம்மா அழுகை சத்தம்’.

உன் பேரன்தான் ,விழுந்திட்டான் போல ,காலை இழுத்து கிட்டு வாரான்…சரி நான் பிறகு பேசுறேன்.

போன் துண்டிக்கப் பட்டது.

 

வரலன்னு சொல்லிட்டா..மனசு கேக்கலியே .

என்ன பண்ண.

பேசாம மெட்ராசுக்கு ஒரு எட்டு பேயிட்டு வரவா.? 

இந்த மனுசன் வரமாட்டாரே. தூர இடத்துக்கு எப்படி தனியா பேவதுன்னு யோசிப்பாரு. 

அதுவுமில்லாம இங்க கிடக்கிற ஆடு கோழிக்கு யாரு தீணிபோடுவாங்க..ஆறு வெள்ளாடு , பத்து பதினைந்து கோழி.

எங்க விட்டுட்டு போக.?

 ஆட்டையும் கோழியையும் சந்தையில கொண்டுபோய் வித்தா எப்படியும் முப்தாயிரத்துக்கு மேலே கிடைக்கும்.                                                    


 போய் அந்த பிள்ள கையில கொஞ்சம் ரூபாய கொடுத்து துணி மணி வாங்க சொல்லலாம்…ஆனா அவா இங்க வந்த  அது நல்லா இருக்கும். 

நம்ம சனங்க நாலு பேர பார்த்த மாதிரி இருக்கும், 

நமக்கும் பெருமை.

நாம மெட்ராசுக்கு போன நாம வீட்டுக்குள்ளயே கிடக்க வேண்யதுதான்..

இரண்டு திட்டம் பொன்னம்மா பாட்டியிடம் தயாரானது. 

ஒன்று மகளை இங்கே வரச்சொல்வது அது முடியாத பட்சத்தில் ஆடு கோழி எல்லாவற்றயும் விற்றுவிட்டு மெட்ராசுக்கு போவது.

இரண்டையும் தன் புருசனை வைத்துதான் செய்ய வேண்டும்.

சரி வரட்டும் என்று காத்திருந்தாள்.

 

இரவு எட்டுமணிக்கு பொன்னம்பலம் வந்தான்.

மிகப்பெரிய தட்டில் சோற்றை நிறம்ப போட்டு அதில் குழம்பை நிறைய ஊற்றி மொத்தமாக பிசைந்து பொன்னம்பலம் சாப்பிட ஆரம்பித்தான்.                                                                     


எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு வெளியே தள்ளாது.

 பனை ஏறிய உடம்பு .சும்மா கிண்ணென்று இருந்தது.

அறுபத்தி ஐந்து வயது என்று அவனை யாரும். சொல்லிவிட முடியாது. சாப்பிட்டு முடிந்ததும் ஒரு செம்பு நிறைய மோர் தண்ணீர் குடிப்பான் . 

எந்த வியாதியும் இல்லாத உடம்பு.                                                                        

பொன்னம்மா பாட்டி அப்படி அல்ல.                        

இப்போது உருகிவிட்டாள். ஏதோ ஒரு வியாதி அவளை வாட்டுகிறது.

பொன்னம்பலத்துக்கு இதை பற்றிய எந்த அறிவும் இல்லை. சராசரி ஆணைப்போல மனைவியை பற்றி கவலை கொள்ளாத ஆணாக இருக்கிறான்.

 

சாப்பிடட்டும் என்று காத்திருந்த பொன்னம்மா பாட்டி மெதுவாகஆரம்பித்தாள்.                                                  

பண்டியலுக்கு பிள்ளைய கூப்பிடலாமுல்லா.?


பொன்னம்பலம் திரும்பி பார்த்தான். எங்க கூப்பிட.?

இங்கதான்.


அங்க  அவா  வசதி எப்படியோ .? மாப்பிளைக்கு லீவு வேண்டாமா.?அவா வரும்போது வரட்டும். நீ சும்மா இரு.


இந்த மனுஷன் இப்படி பேசுவாருன்னு பொன்னம்மா பாட்டிக்கு தெரியும்..

நான் போன்ல பேசினேன்.

என்ன சொன்னா.?

வர முடியாதுன்னுதான் சொன்னா,

பின்ன என்ன, நான் சொன்னேன்லா.


ஆமா….சொன்னா , பொன்னம்மா பாட்டி பெரு மூச்சு விட்டாள்.ஆனா அந்த பயல நினைச்சாத்தான் பாவமா இருக்கு.?

ஏன் ,பயலுக்கு என்ன .?

பிள்ள கிழ விழுந்து கால்ல அடியாம்.அழுது கூப்பாடு போட்டுகிட்டு இருந்தான்.

அப்புறம்

நடக்க முடியாம படுத்து  கிடக்கானாம்.


பொன்னம்மா பாட்டி அவள் புருசனை கவனித்தாள்.பதறுகிறானா..?

ஆம் பதறுகிறான்.இது நல்லது.


பொன்னம்பலத்துக்கு பதற்றமாய் இருந்தது. தான் அதிகமாய் நேசிக்கும் பேரன் வலியால் துடிக்கிறான் என்பதை நினைக்கவே கஷ்டமாய் இருந்தது.


சரி.அவன கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போகலாம்லா.

 

பொன்னம்மா பாட்டிக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்..


அவா என்ன செய்வா பொம்பளபிள்ள .அது அசலூரு வேற  ..என்ன பண்றாளோ..?


மாப்பிள்ள என்ன செய்தாரு அவரு கூட்டிக்கிட்டு போகலாம்லா.

 

அந்த மனுஷன் விடிஞ்சி போறவரு நடுச்சாமத்திலதான் வாறாராம்…என்ன பொழப்போ.?

 

என்ன கருமமா இருக்கு . பொன்னம்பலத்துக்கு பயமும் கோபமாய் வந்தது. சரி நீபோனப் போடு நான்பேசுதேன்.

பொன்னம்மா பாட்டி போன் நம்பரை அழுத்தி பொன்னம்பலம் கையில் கொடுத்தாள்.அவன் காதில் பொருத்தி கொண்டு சற்று தூரமாய் போய் நின்று கொண்டான்.

பொன்னம்மா பாட்டி தூரமாய் இருந்து கொண்டே ஆட்டத்தை கவனித்தாள்’. 


தாயி எப்படிம்மா இருக்கே.?

நல்லா இருக்கேன்பா

பொடியன் எப்படி இருக்கான்..

அவன் படுத்திட்டாம்பா.

அவனுக்கு கால் வலி எப்படிம்மா இருக்கு. இப்போ ஒன்னும் இல்ல தூங்குறான் காலையில சரியாகிடும்பா…

இப்படி அசமந்தமா இருக்காதேம்மா. உடனே டாக்டர் கிட்ட காட்டு.

அவ்வளவு தூரம் ஒன்னும் இல்லப்பா.

சரி விடு... நீ பண்டியலுக்கு ஊருக்கு வந்திட்டுபோ.  நான் பத்தாயிரம் ரூபா அனுப்பி வைக்கிறேன்…

அப்பா அவருக்கு லீவு இல்லப்பா.இப்போ வரமுடியாதுப்பா..

 

பொன்னம்பலம் யோசித்தான் இவளை வரவழைக்க ஒரே வழிதான் இருக்கிறது.அது அவள் அம்மா.


யம்மா …உங்க அம்மாவுக்கு இப்போ எல்லாம் அடிக்கடி முடியாம போகுதும்மா..சாப்பிட முடியல...மயக்கமா படுத்திடுதா..என்னத்த சொல்ல நீ புரிஞ்சிக்காம்மா.

என்கிட்ட இப்போதான் செத்த முந்தி பேசினாங்க.அப்போ ஒன்னும் சொல்லலியே.


அவா எப்படிம்மா சொல்லுவா.நாளைக்கு பணம் அனுப்பி வைக்கேன்..அப்புறம் உன் இஷ்டம்..

 

போனை வைத்துவிட்டு திரேசம்மாள் யோசித்தாள்..அம்மாவுக்கு ஏதாவது ஒன்னுன்னா எப்படி தாங்குவது…உடனே போகுணும்னா இந்த மனுஷன் வரமாட்டாரே..என்ன சொல்ல.

 

திரேசாம்மாள் புருஷன் இரவு வந்தான்..

 

திரேசாம்மாள் அழுகையோடு தன் புருஷனிடம் சொன்னாள்  எங்க அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு சரியில்லயயாம்..அப்பா ரூபாய் அனுப்புகிறேன் உடனே வான்னு சொன்னாங்க;

 

அவள் புருஷன் திணறினான்..ஆபிஸ்ல என்ன சொல்லி லீவு கேட்பது.மாமியார் செத்துவிட்டாங்னா...?


இல்ல அது சரியாய் வராது. சீரியசா ஆஸ்பத்திரியில அட்மிட்னு சொல்ல வேண்டியதுதான்.

 

அடுத்த நாள் காலை பொன்னம்பலம் ஆடு கோழிகளோடு சந்தைக்கு செல்கிறான்.விற்று பணமாக்க வேண்டுமே.!

 

திரேசாம்மாள் புருஷன் ,தன் மாமியாருக்கு சீரியஸ் என்று லட்டர் எழுதி கொண்டிருக்கிறான்.


பொன்னம்மாள் பாட்டிக்கு தன் மகளிடம் இருந்து போன் வந்தது.பண்டியலுக்கு வருகிறேன் என்று மகள் சொன்னாள்.உடம்பை பத்திரமாய் பார்த்துக்கொள் ,மகள் தாய்க்கு ஆலோசனை சொன்னாள்.தாய் பொன்னம்மா சரிம்மா என்று சொல்லி விட்டு போலியாய் இருமினாள்..

 

எல்லோருடைய பொய்யிலும் ஒரு சந்தோஷம் இருந்தது. பொன்னம்பலம் பேரனை காணப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் மீசையை திருக்கிக் கொண்டு சந்தையில் நின்று கொண்டிருக்கிறான்..