வெள்ளி, 8 ஜூலை, 2016

சக்கரம்

                           

                                                                   சக்கரம்
மணிமுத்து அந்த மழையில் நன்றாக நனைந்து விட்டான்.
சென்னை நகரம் தண்ணீரில் மிதக்கிறது என்று தொலைக் காட்சியில் சொன்னதை கேட்டான்
சென்னையை பார்க்கவேண்டும் என்று அவனுக்கு ரொம்ப நாள் ஆசை அதோடு சரி.
அதற்கு மேல் சென்னையை பற்றி யோசிக்க அவனுக்கு ஒன்றுமே இல்லை
மணி முத்து சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான்….
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அவனுக்கு வேலை
 மாலை ஆறு மணிக்கு டூட்டி முடியும்வீட்டிற்கு வர அரை மணிநேரம் ஆகும் .அதன்பின் ஏழு மணிக்கு வண்ணார் பேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கார் கம்பேனியில் வாட்ச்மேனாக வேலை
.அந்த வேலை காலை ஏழு மணிக்கு முடிவடையும்.
அதன் பின் அப்படியே டவுன் காய்கறி மார்க்கெட் போய் தன் சிறிய கடைக்கு வேண்டிய காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வர எட்டரை மணியாகும்….அரை மணிநேரத்தில் குளித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்…..
இந்த கார் கம்பேனி வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதம் தான் ஆகிறது….
என்ன செய்ய….?கடினமான பயணம் தான்….
மணிமுத்துவுக்கு மூன்றும் பெண் பிள்ளைகள்..
மனைவி ரெஜினா தூரத்து உறவுதகப்பன் இல்லாத மணிமுத்துக்கு அவன் தாய் போய் பார்த்து ரெஜினாவை திருமுணம் செய்து வைத்தாள்……
சரியாய் ஒரு வருடத்திற்குள் திடிரென்று மணி முத்துவின் தாய் மரித்து போனாள்……..
மணி முத்து ஓர் அப்பாவி..
அழகில்லாதவன்….முகம் சற்று கோணலாக இழுத்துக் கொண்டிருக்கும்ஆனால்  யாரையும் அதிர பேசமாட்டான்….
அதுவும் திக்கி திணறித்தான் பேசுவான்..
யாரோ ஒருவர் அவன் அம்மவின் முகத்திற்காக அவனுக்கு ஆஸ்பத்திரியில் ஏதோ ஒரு வேலை போட்டு கொடுக்கவே அதை சிக்கொன்று பிடித்து கொண்டான்
ஆஸ்பத்திரியில் அவனுக்கு என்ன வேலை என்று யாருக்கும் தெரியாது..
பெருக்குவது துடைப்பது..எந்த வேலைக்கும் உதவியாக இருப்பது
ஆனால் எழுது படிக்க அவ்வளவாய் வராது…….
அவன் தாய் இறந்த பின் இரவு வேலை வேண்டாம் என்று கூறிவிட்டான்….
ஏன் என்று கேட்கப்பட்டது..?
தன் மூன்று பிள்ளைகளும் மனைவியும் தனியாக இருப்பார்கள்…..என் வீடு ஒதுக்குபுறமாக இருக்கிறதுஎன்று மறுத்துவிட்டான்ஆனால் அது உண்மையில்லை..ஏனோ அவனுக்கு இரவு வேலை அப்போது பிடிக்கவில்லை
நிர்வாகம் மணிமுத்துவை நம்பியது.
நல்ல வேலைக்காரன்..
அவன்கேட்டது இது ஒன்றுதானே சரிபோகட்டும் என விட்டுவிட்டது..மற்றபடி லீவு எடுக்கவே மாட்டான்..
ஒரு பழைய சைக்கிள் அவனுக்கு உண்டுஅது மெல்லியதாய் முனங்கி கொண்டே அவனோடு பயனிக்கும்
.இன்று மழை பெய்து கொண்டிருப்பதால் அதன் சத்தம் காதில் கேட்கப் படவில்லை…..
மணி முத்து இரயில்வே கேட்டை நெருங்கும்போது ஏகப்பட்ட பைக்குகளும் கார்களும் வரிசையில் நின்றுகொண்டிருந்தது….
மழை தண்ணீர் தலையில் இருந்து வாய் வழியாக வழிந்தது….
ஒரு மழை கோட் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்..
இரயில் கிழக்கில் இருந்து மேற்க்காக பாய்ந்து சென்று மறைந்தது
கேட் உயர்த்தப்பட சகல வண்டிகளும் வேகமா கிளம்பியது.
மணித்து சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு வலது காலை அழுத்தி மிதித்தான்.
அப்போது தான் அது நடந்தது
சைக்கிள் கிளட்ச் கட்டாகி செயின் தனியாக எந்த பிடிப்பும் இல்லாமல் சுத்த ஆரம்பித்தது.
மணி முத்து சைக்கிளில் இருந்து இறங்கி சைக்கிளை தள்ள ஆரம்பித்தான்.. மழை வேகமாக அவன் முகத்தில் அறைந்தது
தண்ணீர் கண்களை மறைத்தது
ஒருவழியாக இரயில்வே கேட்டை தாண்டி வந்துவிட்டான்..
இனி இரண்டு கிலோ மீட்டர் கடந்து வீட்டிற்கு போக வேண்டும்..
இன்று எப்படி இரவு வாட்ச்மேன் வேலைக்கு போவது ?
….சைக்கிளை சரி பண்ண இரண்டுமணி நேரம் ஆகலாம்.ஒருவேளை இன்று முடியாமல் கூட போகலாம்….
ஆனால் அடுத்து இரவு வேலைக்கு போக வேண்டுமே…!
 பின் காலையில் மாக்கெட்டுக்கு போய் காய்கறி வாங்க வேண்டும்.இதெல்லாம் எப்படி முடியும்…?
….இந்த கார் கம்பேனியில் வேலை கிடைத்த பின்தான் வீட்டில் புதிய நம்பிக்கை நிலவுகிறது….
புதிதாக ஒரு லட்ச ரூபாய் சீட்டில் சோந்தான்
பெண் பிள்ளைகள் கண் முன் வேகமா வளர்கிறார்கள்.எதாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று அவன் மனைவி ரெஜினா அடிக்கடி சொல்வாள்.
மணிமுத்து பதிலே சொல்ல மாட்டான்..
ஏனேன்றால் அவனுக்கு அதற்கு பதில் தெரியாது
மழையில் நனைந்து வீட்டிற்கு வந்த உடனே தலையை துவட்டிவிட்டு இரவு க்கு சாப்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினான்….நடந்து தான் போக வேண்டும்….
மழை லேசாக விட்டது போலிருந்தது..
ஆனால் மறுபடியும் மழை வலுக்க ஆரம்பித்தது….ரெஜினா அவனிடம் கொஞ்சம் பொருங்கள்என்று சொல்லி விட்டு பக்கத்து வீட்டிற்கு ஓடிப்போய் ஒரு குடை வாங்கி வந்தாள்.
மணி முத்துவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது….
காய்கிறி வாங்க சாக்கு பையையும் சுருட்டி கையில் வைத்துகொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்..
குடையை விரிக்க பிரயாச பட்டான் ..ஒரு வழியாக குடை பிரிந்து விரிந்தது.
.இரண்டு கம்பிகள் குடை துணியை விட்டு விலகி வெளியே துருத்திக் கொண்டு நின்றது.
அதுவுமில்லாமல் குடையில் உச்சியில் ஒரு ஓட்டை வேறு இருந்தது.
அதிலிருந்து மழை தண்ணீர் மீண்டும் அவன் தலையில் வழிந்தது.
ஆனால் இப்போது வேகமாக அல்ல மெதுவாய் வழிந்தது..
மணிமுத்து அண்ணாந்து பார்த்தான்குடை ஓட்டை வழியாக வானம் தெரிந்தது..
.ஒரு குடை புதிதாய் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தான்..ஆனால் எப்போது என்று அவனுக்கே தெரியவில்லை..
தன் கணவன் மழையில் பாதி நனைந்தும் நனையாமலும் செல்வதை பார்த்துகொண்டிருந்த ரெஜினாவிற்கு ஏனோ அழுகையாய் வந்தது
.மணிமுத்து தெருவில் கடைசியாய் போய் மழையில் மறைந்தான்….
ரெஜினா யோசித்து கொண்டே வீட்டிற்குள் வந்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்..
(தொடரும்…)
ரெஜினா மணி முத்துவை திருமணம் செய்த பின் அவள் மணிமுத்துவை நன்றாக புரிந்து கொண்டாள்
.இவன் அழகில்லாதவன் ..ஆனால் நல்லவன்..பாதுகாப்பானவன்இவனால் நிம்மதியான வாழ்க்கையை தர முடியும்……
வாழ்க்கை என்பது செல்வத்தில் அல்ல. நிம்மதியில்.இருக்கிறது
.நிம்மதி அமைதி எங்கே இருக்கிறதோ அங்கே தானாய் வருகிறது….
மணிமுத்து ரெஜினாவை நேசித்தான்.
ஆனால் அவனுக்கு அதை வெளிப்படுத்த தெரியாது..
தினமும் மணிமுத்துவுக்கு ரெஜினா பத்து ரூபாய் கொடுப்பாள்..அது அவன் டீ செலவுக்கு.மணி முத்து தெற்கு பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் பதிவாக டீ குடிப்பான்…..ஏனேன்றால் அந்த கடையில் மட்டும் தான் டீ ஐந்து ரூபாய்
தினமும் ஐந்து ரூபாய் மிச்சம்…..
வாரக்கடைசியில் மணி முத்துவிடம் முப்பது ரூபாய் இருக்கும்…..ஞாயிற்று கிழமை கோயிலுக்கு போகும்போது எதாவது திண்பண்டம் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பான்
---------------
மணி முத்துவின் சம்பளம் ஐந்தாயிரம்….இதில் தான் சிக்கனமாக காலத்தை கடத்த வேண்டும்.
தன் மாமியார் இறந்த பின் ரெஜினா யோசித்தாள் .தன் வீட்டின் முன்பக்கத்தில் இருக்கும் ஒரு ஜன்னலை பெயர்த்து எடுத்து அதில் சின்னதாக ஒரு கதவை பொருத்தி சிறிய கடை ஒன்று ஆரம்பித்தால் என்ன..?
இதை பற்றி மணி முத்துவிடம் கேட்டாள்.
அவன் ..அது முடியுமா..? முடிந்தால் செய் என்று ஒதுங்கிக்கொண்டான்
மணிமுத்து நல்ல வேலைக்காரன்ஏவியதை செய்யும் வேலைக்காரன்..சுயமாக எதுவும் அவனால் சிந்திக்க முடியாது….இப்படி பலபேர் இருக்கிறார்கள்
ஆனால்சுய சிந்தனை உள்ளவர்களால் பல நேரம் குடும்பத்தில் ஆபத்தும் வரத்தான் செய்கிறது..
ரெஜினா சிந்தித்தள்.
எப்படிஃ.. சின்னதாய் வைத்தாலும் ஒரு இருபதாயிரம் ரூபாயாவது வேண்டுமே..என்ன செய்வது..?
அந்த வாரம் ஞாயிற்று கிழமை ஆலயத்திற்கு போகும்போது அவள் ஜெபம் இதை பற்றியே இருந்தது..
ஆனால் அன்று மாலையில் தானே அதற்கு வழியும் பிறந்தது.
பெண்கள் சுய உதவி குழுவில் அவள் கேட்ட இருபதாயிரம் கிடைத்தது
மணிமுத்துவிடம் இதை பற்றி சொன்னாள்.அவன் பதிலே சொல்லவில்லை….
அடுத்த நாள் ஆசாரியும் கொத்தனாரும் வந்தார்கள்.
சிறிய கதவு செய்யப்பட்டது..ஜன்னலை பிடுங்கி அதில் கதவை பொறுத்தினார்கள்
.வீட்டிற்கு உள்பக்கம் பலகையால் சிறிய தடுப்பு பொறுத்தி ஒரு சிறிய கடை போல அடைக்கபட்டது…..
ரெஜினா பக்கத்து வீட்டு மலர் டீச்சரை போய் யோசனை கேட்டாள்என்ன என்ன சாமான் வாங்க வேண்டும் என்ற லிஸ்ட் தயாரிக்கபட்டது….
திருநெல்வேலி டவுனுக்கு போய் மொத்த வியாபாரிகளிடம் பலசரக்கு சாமான் வாங்கபட்டது
..மலர் டீச்சர் கூடவே வந்து ஜாமான் வாங்க உதவி செய்தாள்
ஜாமான்கள் அடுக்கபட்டு அடுத்த நாள் கடை திறக்கபட்டது
பாஸ்டரை அழைத்து ஜெபம் செய்து திறக்க வேண்டும் என்று நினைத்தாள்.
ஆனால் இந்த சின்ன கடைக்கொல்லாம் அவரை எப்படி அழைப்பது என்று விட்டுவிட்டாள்….
மலர் டீச்சர் அதிகாலையில் ரெஜினாவை அழைத்து தன் வீட்டிலேயே அவளுக்காக ஜெபித்தாள்…..
காலை எட்டு மணிக்கு கடை திறக்கபட்டது
அன்று காலை ஐந்து மணிக்கு மணிமுத்து எழுந்தான்.ரெஜினா எழுதி கொடுத்த காய்கறி லிஸ்டுடன் டவுன் காய்கறி மார்க்கெட்டுக்கு போய் எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி மூட்டையாக கட்டி சைக்கிளில் கொண்டு வந்தான்……
மணிமுத்து திறக்கபட்ட தன் கடையில் பெருமிதத்துடன் நின்றான்….
பின் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்று விட்டான்
கடையில் இருந்து சிறிய வருமானம் வந்தது….
.வீட்டு செலவுக்கு காய்கறி வாங்க தேவையில்லாமல் போய்விட்டது….
.ரெஜினா கணக்கு பார்த்தாள்..
ஒரு நாளைக்கு அவளுக்கு இரு நூறு ரூபாய் சம்பளமாக கடையில் இருந்து கிடைத்தது.
மலர் டீச்சர் பக்கத்து போஸ்ட் ஆபிஸ் சென்று ரெஜினாவுக்கு ஒரு கணக்கு திறந்து கொடுத்தாள் ..
ரெஜினா தன் சம்பளத்தை தினமும் போஸ்ட் ஆபிஸ் சென்று பணத்தை செலுத்தி வந்தாள்..அதில் வரவு வைக்கபடும் தொகை நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே வந்தது.
ரெஜினாவுக்கு இது சற்று ஆறுதலாக இருந்தது..
ஒரு நாள் மலர் டீச்சரின் கணவன் தன் பக்கத்து அலுவலகத்திற்கு இரவு வாட்மேனாக வேலை செய்ய ஒரு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும்.சம்பளம் மாதம் நான்காயிரம் கொடுப்பார்கள்இந்த ஊரில் ஆள் கிடைக்குமா ..?என்று கேட்டான்..
அது பழைய கார்களை வாங்கி விற்கும் ஒரு கம்பேனி…..இவ்வளவுதான் அங்கே எதிர் பார்க்க முடியும் என்றான்……
மலர் டீச்சர் மணிமுத்துவை நினைத்தாள்…….
ரெஜினாவிடம் இதைபற்றி பேசினாள்….
ரெஜினா தன் கணவனிடம் இந்த செய்தியை கூறினாள்…..
மணிமுத்து இதற்கு சம்மதித்தான்..இரவு வீட்டில் படுப்பதற்கு பதிலாக கார் கம்பேனியில் படுக்க வேண்டும்..இவ்வளவுதானே
பிள்ளைகளின் எதிர் காலத்தை பற்றி ரெஜினாவால் அவனுக்கு சொல்லபட்டிருந்தது.
அவனுக்கும் அது நியாயமாகபட்டது….
ஆனால் இப்போது வேலை பழு அதிகமாகிவிட்டது..ஆஸ்பத்திரியில் வேலை..பின் கார் கம்பேனியில் இரவு வேலை.பின் மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்க வேண்டும்….எங்கே ஓய்வு..?
ஆனால் இப்போது வீட்டில் காசு புழங்குவதை அவன் கவனிக்க தவறுவதே இல்லை..
பிள்ளகைளுக்கு நல்ல துணிமணிகள் வாங்கப்படுகிறது..
வீடு வர்ணம் பூசப்பட்டு அழகாக இருக்கிறது……
.சரி எல்லாம் நடக்கட்டும்.மணிமுத்து சந்தோஷமாக இருந்தான்..
இன்றய இடைவிடாத மழைதான் அவனுக்கு பிரச்சனையாக இருந்தது……நடந்து கொண்டே மணிமுத்து யோசித்தான்..காய்கறி வாங்க சைக்கிளுக்கு என் செய்ய…?….கார் கம்பேனியில் எதாவது சைக்கிள் இருக்குமா என்று பார்க்க வேண்டும்..
யாரிடம் கேட்கலாம் ..யோசித்து கொண்டே நடந்தான்…..
ரெஜீனா தன் கணவன் மழையில் மறைந்த உடனே மலர் டீச்சர் வீட்டிற்கு ஓடினாள்……
….மலர் டீச்சர் பேப்பா படித்துக் கொண்டிருந்தாள்…..
மலர் டீச்சர் காலையில் பேப்பர் படிப்பது கிடையாது.
அனேகமா எல்லா டீச்சர்களுமே இரவில்தான் பேப்பர் படிப்பது வழக்கமாக இருக்கிறது.
ஆனேக டீச்சர்கள் பேப்பர் படிப்பதே இல்லை அது வேறு விஷயம்….
.ஏனேன்றால் எட்டரை மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும்.இதற்குள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் சாப்பாடு தயார் செய்ய வேண்டும்..பின் தானும் கிளம்ப வேண்டும்.இதில் எங்கே பேப்பர் படிக்க…?…
ரெஜினாவை பார்த்ததும் என்ன என்று கேட்டாள் மலர் டீச்சர்……
ஒன்னுமில்ல….ஒரு டீவிஎஸ் 50 என்ன விலை இருக்கும்…..?
மலர் டீச்சர் ரெஜீனாவை உற்றுப்பார்த்தாள். ரெஜீனாவின் கைகளில் போஸ்ட் ஆபிஸ் பாஸ்புக் இருந்தது…..
என்ன ஆச்சு ரெிஜினா..?......
இல்லம்மா……..இன்னைக்கி அந்த மனுஷன் மழையில நனைஞ்சிகிட்டு வேலைக்கு போறார்….
நாளைக்கு காலையில மார்க்கெட்டுக்கு எப்படி போவார்னேதெரியல…….
.எப்படியும் ஒரு சின்ன வண்டி இருந்தா நல்லதுதானே…!
ம்……மலர் டீச்சர் ரெஜீனாவின் முகத்தை பார்த்தாள்.
ரெஜீனா மெல்லியதாய் அழுது கொண்டிருந்தாள்……..
மலர் புரிந்து கொண்டாள்…….ரெஜீனாவை பக்கத்தில் அழைத்து உட்கார வைத்தாள்.ரெஜீனா கையில் இருந்த பாஸ்புக்கை வாங்கி அதைப் பிரித்து பார்த்தாள் .அதில் பத்தாயிரத்திற்கு கொஞ்சம் குறைவான தொகை ஏறி இருந்தது….
சரி……வாங்கலாம்…….
எங்க வீட்ல அவர் வரட்டும்.இதை பற்றி கேட்டு நாளை முடிவு செய்வோம் என்றாள்…..
ரெஜீனா வீட்டிற்கு திரும்பினாள்……..
மலர் டீச்சர் தன் கணவனிடம் டிவிஎஸ்50 வண்டியை பற்றி விபரம் கேட்டாள்.
இருபத்தி ஐந்தாயிரம் இருக்கும் என்றான்…..
ரெஜினாவிடம் பத்தாயிரம் தானே இருக்கிறது இன்னும் பணம் தேவைப்படுமே.
 மலர் டீச்சர் கணவன் ஜெயமோகன் ..இந்த பணம் இல்லாமலே வாங்க பார்ப்போம்….
எப்படி..?
.எனக்கு தெரிந்த வங்கி மேனேஜர் ஒருவர் இருக்கிறார்.அவரிடம் சிறு தொழிலுக்காக கடன் கேட்போம்..ரெஜீனா வைத்திருக்கும் கடையை காட்டுவோம்….அந்த பணத்தில் டிவிஎஸ் 50 வாங்கலாம்……வங்கி கடனை மாதா மாதம் கட்டி முடித்துவிடலாம்…..
இப்போது அவள் கையில் இருக்கும் பத்தாயிரத்தை பிடுங்கி வண்டி வாங்கி விட்டால் பாவம் அவள் கையில் அதின் பின் எதுவுமே இராது….
சோர்ந்து விடுவாள்…….
கொஞ்சம் பொறு இன்னும் ஒரு வாரத்திற்குள் ஏற்பாடு செய்கிறேன் என்றான்..
மலர் புரிந்து கொண்டான்…….
பாவம் ஏழைங்க ஆசைப்படுதாங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்கி கொடுங்கள். என்றாள்……..
அடுத்த நாள் மதியம் ஒரு   காரில் வந்த இரண்டு பேர் ரெஜினா கடையின் முன்னால்  இறங்கினார்கள்……..
 தாங்கள் வங்கியில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டார்கள்……ரெஜீனாவிடம் விசாரித்தார்கள்…….கடையை பார்த்தார்கள்….
ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாரம் நடக்கும் என்று கேட்டார்கள்…ரெஜினா பதில் சொன்னாள்…வருமானத்திற்கு ஆதாரம் கேட்டார்கள்…..போஸ்ட் ஆபிஸ் பாஸ் புக் காட்டபட்டது…
…வங்கி அதிகாரி திருப்தி அடைந்தார்…
.நாளை மறுநாள் தன்னை வந்து வங்கியில் பார்க்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார்…..
ஆனால் எதற்கு இவர்கள் தன்னிடம் விபரம் கேட்கிறார்கள் ..ஏன் வங்கிக்கு வரச் சொல்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்க ரெிஜினா பயந்தாள்……
மாலை மலர் டீச்சர் பள்ளியில் இருந்து வந்து உடனே ரெஜீனா அவளிடம் எல்லா விபரத்தையும் சற்று பயத்துடன் சொன்னாள்…
…மலர் டீச்சர் தன் கணவனிடம் போன் செய்து பேசினாள்…
..பின் ரெஜினாவிடம் வங்கி கடனில் உனக்கு டிவிஎஸ் 50 வாங்க தன் கணவன் ஜெயமோகன் செய்த ஏற்பாடு என்று அவளிடம் விளக்கம் கூற ரெஜினா சந்தோஷபட்டாள்…
இரண்டு நாள் கழித்து ரெஜினா அந்த வங்கி மேனேஜரைப் போய் பார்த்தாள்….
மானேஜர் அவளிடம் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கடன் தருவதாகவும் கடனை மாதா மாதம் சரியாக கட்டி அடைக்க வேண்டும் என்று கூறினார்..
நிறைய கையெழுத்து அவளிடம் வாங்கப்பட்டது.
.இறுதியாக ஒரு காசோலை ரெஜினாவிடம் கொடுக்கபட்டது..அதில் இருபத்தி ஐந்தாயிரம் என்று பெரிய எழுத்தில் எழுதபட்டிருந்தது….
ரெஜினாவிற்கு சந்தோஷமாக இருந்தது…..
மானேஜர் அவளிடம் இந்த தொகைக்கு கடைக்கு வேண்டிய சாமான்ளை வாங்கி கொள்ளுங்கள்……பத்து நாட்களுக்குள் அதற்கான பில்லை வங்கியில் கொடுத்து விடவேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்….
ரெஜினாவிற்கு ஒன்றும் பரியவில்லை..
இனி எதற்கு பலசரக்கு சாமான்கள்…?
அப்படியெனின் டிவிஎஸ் 50 எப்படி வாங்க முடியும்..?
குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தாள்…
இப்போது அந்த காசோலையை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது..
தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொண்டோமோ…?இந்த சின்ன கடைக்கு வேண்டிய சாமான்கள் ஏற்கனவே வாங்கபட்டு விட்டது.
இது என்ன புதுக் குழப்பம்…?
மலர் டீச்சர் மாலை வீட்டிற்கு வரும் வரை ரெஜினாவிற்கு ஒன்றும் ஓடவில்லை….மலர் வந்தவுடனேயே பதறியபடி ஓடினாள்…….
எப்படி டீச்சர் நான் இந்தகடனை அடைக்கிறது…?..
ஏற்கனவே நான் எனக்கு தேவையான சாமான்களை வாங்கிவிட்டேனே..
இந்த பணத்தையும் கொண்டு இன்னும் சாமான்கள் வாங்கி அடைத்து வைக்கவா..? அப்போ டீவிஎஸ் 50 எப்படி வாங்குவது….?
மலர் யோசித்தாள்….ரெஜினா சொல்வதும் சரிதானே…
.சரி செக் கிடைத்தாகி விட்டது…ஜெயமோகன் வரட்டும் இதை பற்றிகேட்கலாம் என்றாள்…….
.ரெஜினா சோகமாக திரும்பினாள்………
.இரவு ஒன்பது மணி வாக்கில் ஜெயமோகன் வீட்டிற்கு வந்தான்..ஜெய மோகன் வந்துவிட்டான் என்று ரெஜினா அறிந்து கொண்டாள்…
…இப்போது போய் பார்க்கவா..? வேண்டாமா..? என்று குழம்பிக் கொண்டிருந்தாள்…..
சரி இப்படி மூச்சு முட்டிக்கொண்டு இருப்பதைவிட நேரில் போய் கேட்பதுதான் சிறந்தது என்று தன் மூத்த மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு மலர் டீச்சர் வீட்டிற்கு சென்றாள்…..
ஏற்கனவே ஜெயமோகன் வந்த உடனேயே மலர் டீச்சர் இதை பற்றி கேட்டு விட்டாள்..
ஜெயமோகன் ஒன்றும் சொல்லவில்லை…..
அப்போது ரெஜினா அங்கு வரவே…. ஜெயமோகன் முந்திக்கொண்டான்…….
நாளைக்கு அந்த செக்கை நீங்க டீச்சரிடம் கொடுத்துவிட்டு இருபத்தி ஐந்தாயிரம் வாங்கி கொள்ளுங்கள்……
இரண்டுநாள் கழித்து நான் சில பில்களை தருவேன் அதை வங்கியிடம் கொண்டுபோய் கொடுத்து விடுங்கள் என்றான்….
மலருக்கு பக்கென்றது ..இது என்ன புது டீல்….
 மலர் யோசித்தாள்…..
ரெஜினா முந்திக்கொண்டாள்…….இல்லை ஐயா…எனக்கு வண்டி வாங்கி தந்தீங்கன்னா போதும்….
பணம் எல்லாம் வேண்டாம்..என்று சொல்லி விட்டாள்..
ஜெயமாகன் யோசித்தான்..அதுவும் சரிதான்….நாளைக்கு வண்டி வாங்கிவிடலாம் என்று சொல்லி விட்டான்…..
ரெஜினா போனவுடன் மலர் ஜெயமோகனிடம் ..ஏங்க எப்படி நீங்க பலசரக்கு பில் கொடுப்பீங்க .?என்றாள்.
ஜெயமோகன் சிரித்தான்….இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல…
..இந்த செக்க நம்ம காசி அண்ணாச்சிக்கிட்ட கொடுத்திட்டு காசையும் பில்லையும் வாங்கிடுவேன்…….அவரு அத அவர் கணக்கில்ல எப்படியாவது சரி பண்ணிவிடுவார் என்றான்…….
மலருக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது..
ரெஜினாவிற்கு அன்று இரவு சரியான படி தூக்கம் வரவில்லை..ஏதோ மிகப்பெரிய ஒரு காரியம் நாளை நடக்கப்போகிறது என்ற நினைப்பில் புரண்டு புரண்டு படுத்தாள்


காலையில் மணிமுத்து வழக்கம் போல் வேலைக்கு போய்விட்டான்…
இதுவரை நடந்ததெல்லாம் மணிமுத்துவிற்கு எதுவுமே தெரியாமல் ரெஜினா பார்த்துக் கொண்டாள்…….
பத்து மணிக்கு வண்ணார் பேட்டையில் உள்ள டிவீஎஸ் 50 டீலர்  ஷோ ரூமுக்கு வரச்சொல்லி ஜெயமோகன் சொல்லி அனுப்பி இருந்தான்…
..ரெஜீனா சரியாக போய் விட்டாள்….
பச்சை கலரில் வரிசையாக நிறுத்தி இருந்த பல வண்டிகளை ஜெயமோகன் ஸ்டார் பண்ணி பார்த்தான்.
.ஒரு வண்டியை எடுத்து கம்பேனிக்கு உள்ளேயே ஒரு முறை ஓட்டிப் பார்த்தான்…
இது தான் என முடிவு செய்து கூறப்பட்டது…..
மாலை நான்கு மணிக்குள் RTO அலுவலகத்தில் எல்லா வேலைகளையும் முடித்து 5 மணிக்குள் வீட்டில் கொண்டுவந்து தரப்படும் என  உறுதி கூறப்பட்டது..
ரெஜினாவுக்கு மனதில் அன்று மிகப்பெரிய சந்தோஷமாய் இருந்தது…
ஐந்து மணிக்கு கொஞ்சம் முன்னமே ஒருவன் டிவிஎஸ் 50யை கடைக்கு முன்னே கொண்டுவந்து நிறுத்தினான்…..
அவன் தன்னிடமுள்ள வண்டி சம்பந்த பட்ட எல்லா பேப்பர்களையும் ரெஜினாவிடம் கொடுத்துவிட்டு அவளிடம் கையெழுத்து வாங்கி விட்டு சென்று விட்டான்…
கடையில் ஆட்கள் சாமான்கள் வாங்கிய படி நின்று கொண்டிருந்தனர்.
ஆறரை மணிக்கு மணிமுத்து வேலையில் இருந்து வந்தான்.
வந்தவன் அடுத்த நாள் காய்கறி வாங்க பையை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான்..ரெஜீனா கொஞ்சம் இருங்கள் என்று அவனை தடுத்தாள்…
மணிமுத்து ரெஜினா ஏதோ சொல்லப் போகிறாள் என்று சும்மா சுவரோடு சாய்ந்தபடி நின்று கொண்டான்..
இப்போது கடையில் யாரும் இல்லை..
ரெஜீனாவிற்கு இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்ல..
மணி முத்துவை ஆச்சரிய பட வைக்க வேண்டும்..ஆனால் அது எப்படி…?..
ஏங்க ..இந்த வண்டியை பாருங்க…….டிவிஎஸ் 50யை காட்டினாள்….
மணி முத்து சும்மா பார்த்தான்…
என்ன…ம்..
வண்டி நல்லா இருக்குல்ல…
ம்…புதசா இருக்கு..யாரு வண்டி இது..?
விலைக்கு வந்திருக்கு  .நாம வாங்கிடுவோமா..?
இப்போது மணிமுத்துவுக்கு ஏதோ காரியம் நடக்கப்போகுது என்று புரிந்தது.
ரெஜினா சும்மா பேசுபவள் அல்ல..காரியக்காரி…..
மணி முத்து வண்டி அருகே போய் அதை தொட்டுப் பார்த்தான்..
அவன் பிள்ளகைள் வீட்டிற்கு உள்ளே நின்று நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்…
தன் தகப்பனின் முகத்தை பார்க்க அவர்களுக்கு ஆனந்தமாக இருந்தது…….
மணிமுத்து லேசான குரலில்..விலை ரொம்ப இருக்குமே….என்று ஏக்கத்துடன் கூறினான்…..ரெஜினாவிற்கு பாவமாக இருந்தது..
அதற்குள் வீடடிற்குள் இருந்து மணி முத்துவின் கடைசி மகள்….
அப்பா அந்த வண்டியை வாங்கியாச்சி..
அது நமக்குத்தான் என்று கத்திவிட்டாள்…….
மணிமுத்து திருதிருவென முழித்தான்…..
இது உண்மையா பொய்யா..? ரெஜினா சத்தமாக சிரித்தாள்…..
நமக்குத்தான் எடுத்து ஓட்டிபாருங்க.இப்போது ரெஜினாவும் கூற ..பிள்ளைகள் வீட்டிற்குள் இருந்து தெருவுக்கு வந்து வண்டியை சுற்றி நின்றார்கள்….
எல்லாரும் வண்டியை ஆளுக்கு ஒரு பக்கம் எதையாவது தொட்டுக் கொண்டும் திருகி கொண்டும் இருந்தார்கள்..
ரெஜினா அவர்களை அதட்டினாள்……
மணி முத்து வாய்க்கோன சிரித்தான்…
அவனுக்கு இன்று அற்புதமான நாள்……
இது எப்படி என்று ரெஜினாவிடம் கேட்டான்..
அத அப்புறமா சொல்றேன்….இப்போ இந்த வண்டியை கொண்டு போங்கள் என்றாள்..
மணி முத்து திகைத்தான்..
இதுவரைக்கும் வண்டி ஓட்டவே இல்லியே..திடீர்னு ஓட்டச் சொன்னா எப்படி..
இல்ல நாளைக்கு ஒட்டலாம் என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்து வீட்டிற்குள் எடுத்து வைத்து விட்டு கார் கம்பேனிக்கு சென்று விட்டான்…
அடுத்து நாள் மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கி அந்த மூட்டையுடன் காலையில் வீட்டிற்கு வந்தான்..
இன்று அந்த மூட்டை மிகவும் கனத்தது….
பிள்ளகைள் பள்ளிக்கு போய் விட்டார்கள்……
பக்கத்து வீட்டு துரைப்பாண்டியிடம்
டிவிஎஸ் 50 யை எப்படி ஸ்டார்ட் பண்ண வேண்டும் என்று கேட்கபட்டது..
அவனும் மிக விளக்கமாக மணி முத்துவுக்கு சொல்லிக் கொடுத்தான்…..
மணிமுத்து அன்று ஆஸ்பத்திரிக்கு லீவு போட்டான்….
வண்டியை எடுத்துக்கொண்டு கொஞ்ச தூரம் ஓட்டினான்.
பெட்ரோல் போட்டு ஓட்டுங்க கம்பேனிக்காரன் கொஞ்சம்தான் பெட்ரோல் போட்டிருப்பான்..என்று துரைப்பாண்டி கூறினான்…..
எவ்வளவு போடனும் என்று கேட்டாள் ரெஜினா…
இரண்டு லிட்டர் பெட்ரோல் இரண்டு அவுன்ஸ் ஆயில் மொத்தம் நூற்றி நாற்பது ரூபாய் வரும் … துரைப்பாண்டி கூறினான்..
ரெஜினா ரூபாயை மணிமுத்துவிடம் கொடுத்தாள் .பெட்ரோல் போட கூடவே துரைப்பாண்டியும் போனான்…….
நூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தது ரெஜினாவிற்கு பெரும் தொகையாய் இருந்தது….இப்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வருமோ தெரியவில்லையே என்று ரெஜினா வருத்தப்பட்டாள்..
கொஞ்ச நேரத்தில் துரைப்பாண்டியும் மணி முத்துவும் வந்து விட்டார்கள்…..
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இது எவ்வளவு தூரம் போகும் என்று துரைப்பாண்டியிடம் கேட்கப்பட்டது…
ஒரு லிட்டருக்கு ஐம்பது கிலோ மீட்டர் தூரம் போகும்……
.ஐம்பது கிலோ மீட்டர்னா எவ்வளவு தூரம் இருக்கும்……மணி முத்து வெகுளியாய் கேட்டான்….
துரைப்பாண்டி சற்று யோசித்துவிட்டு..அதாவது……இங்கே இருந்து வள்ளியூர் தூரம் போகும் .என்றான்…..
ரெஜீனா மனதிற்குள் கணக்கு போட்டாள்..
கடையில் இருந்து முதலில் கார் கம்பேனி …அதற்கப்புறம் அங்கே இருந்து டவுன் மார்க்கெட்…..பின் அங்கே இருந்து வீட்டிற்கு வர எப்படியும் பதினைந்து கிலோ மீட்டர் தூரம்..
அப்படின்னா முப்பது நாளைக்கு நானூற்றி முப்பது கிலோ மீட்டர்….
அதாவது ஒன்பது லிட்டர் பெட்ரோல் ஆகும்…சரி.பத்துலிட்டர் என்றால் எழு நூற்றி ஐம்பது ரூபாய்……
அப்போ… இந்த மாதத்தில் இருந்து வங்கிக்கு எழுநூற்றி ஐம்பதும் பெட்ரோலுக்கு எழுநூற்றி ஐம்பதும் மொத்தம் ஆயிரத்து நூறு ரூபாய்….அதிகம் செலவாகும்…
ரெஜினாவிற்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
.டிவிஎஸ் 50 வண்டி வந்த சந்தேஷம் கொஞ்சம் குறைந்தது……
மணிமுத்து வண்டியை  மேலப்பாளையம் வரை ஓட்டிப்பார்த்தான் ஒரிடத்தில் வண்டியை நிறுத்தி தேவையில்லாமலேயே டீ குடித்தான்….
ஆனால் வண்டியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
டீக் குடித்து விட்டு வெகு லவாகமாக வண்டியை ஸ்டார்ட் செய்தான்…..
இப்போது மணிமுத்து இந்த நாட்டில் மிக முக்கியமான ஒரு ஆள் போல தன்னை நினைத்துக் கொண்டான்..
இந்த இயந்திரம் அவனை வேகமாக இழுத்துச் செல்வது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..
ஒரு வழியாய் மணிமுத்து வீட்டிற்கு வந்தான்..
ரெஜினா மணி முத்துவின் முகத்தை பார்த்தாள்..
மணி முத்து ரெஜினாவைப் பார்த்து சிரித்தான்.
ரெஜினா பதிலுக்கு புன்னகைத்தாள்..
ஆனால் அதில் முழு சந்தோசம் இல்லை….
ஆயிரத்து ஐநூறு என்ற நம்பர் அவள் கண் முன்னே வந்தது…..ஏனோ சோகமாக இருந்தாள் ரெஜீனா……
மதியம் சின்னதாக ஒரு தூக்கம் போட்டுவிட்டு டிவிஎஸ் 50 ஐ மெல்லிய துணியால் மணிமுத்து துடைத்துக் கொண்டிருந்தான்.
ரெஜினா சொன்னாள்…
பாஸ்டர் கிட்டப்போய் இந்த வண்டியை காட்டிவிட்டு ஜெபித்துவிட்டு வாங்க ..என்றாள்…..ஒரு கவரில் நூறு ரூபாய் காணிக்கையும் வைத்து அவன் கையில் தினித்தாள்……
மணிமுத்து சந்தோஷமாக கிளம்பினான்……
இது வரை ஆலயத்திற்கு அவன் தன் பழைய சைக்கிளில்தான் செல்லுவான்…
ஆலயத்தில் கார்களும் பைக்குகளும் குவிந்து நிற்கும்….
தன் பழைய சைக்கிளை எங்காவது சுவர் பார்த்து ஓரமாக சாத்தி வைத்துவிட்டு ஆலயத்திற்குள் செல்லுவான்….
மணி முத்துவிற்கு ஆழமான சத்தியம் ஆழமில்லாத சத்தியம் என்று எதுவும் தெரியாது..பேசாமல் ஆலயத்திற்கு போவான்..ஓரமாக உட்கார்ந்து கவனிப்பான்….பல சமயம் தூங்கி விடுவான்……
ஆலயம் முடிந்ததும் எல்லோரும் அவரவர் வாகனத்தில் புறப்படுவார்கள்.
.மணிமுத்துவும் தன் பழைய சைக்கிளை கொஞ்சதூரம் உருட்டிக்கொண்டே வந்து பின் ஏறி உட்கார்ந்து மிதிப்பான்….
.பிள்ளைகளும் மனைவி ரெஜினாவும் பஸ்ஸில் வீடு திரும்புவார்கள்…..
இனி எல்லோருமே வண்டியில் ஆலயத்திற்கு போகலாம் என்று நினைத்தான்…
பின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் தானும் ஐந்துபேர் இதில் போக முடியாதே என்று நினைத்து வருந்தினான்……
இனி ஒரு கவுரவமாக ஆலயத்திற்கு வரலாம்.
வண்டியை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்று நினைக்கவே ஆனந்தமாக இருந்தது…..
எதையெல்லாமோ நினைத்துக்கொணடே வந்த மணிமுத்து பாஸ்டர் வீட்டிற்கு அருகே வந்துவிட்டான்….
மிக அருகில் வந்த பின் ஒன்றைக் கவனித்தான்..
பாஸ்டர் வீட்டு முன்னே நிறைய கார்களும் பைக்குகளுமாக நின்று கொண்டிருந்தது……
.என்ன விஷேசம்…?….மணிமுத்து திகைத்தான்.
நிறைய ஆட்கள் நடமாடுவது தெரிந்தது…….
எதற்காக இவ்வளவு கூட்டம்..தெரியவில்லை..
ஆனால் வந்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷமாக பேசிக் கொள்வதும் சிரிப்பதும் நன்றாக தெரிந்தது…
…மணி முத்து தண் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான்…
அங்கு நிறுத்த பட்டிருந்த கார்களை கவனித்தான்.
எல்லாமே நீளம் நீளமாகவும் பெரிதாகவும் இருந்தது.
அதில் ஒரு காரை பற்றி யாரோ சொல்ல கேள்விபட்டிருக்கிறான்.
நான்கு வளையம் கொருத்துவிட்டதுபோல் ஒரு அடையாளம்..(ஆடிக்கார்.)அந்த கார் பல லட்சம் என் கேள்விப் பட்டிருக்கிறான்…
அந்த காரின் அருகில் தன் டிவிஎஸ் 50யை நிறுத்தினான்…
.இரண்டும் சக்கரத்தில் ஓடும் வண்டிகள்தான்.
ஆனால் அந்த சக்கரங்கள் முன் தன் வண்டி ஒன்றுமே இல்லாதது போல தெரிந்தது..
இது தவறான எண்ணம் தானே என்று நினைத்துக் கொண்டு பாஸ்டரை பார்க்க போக நினைத்தான்..
ஆனால் அவனால் முடியவில்லை..
அங்கு போய் என்ன சொல்வது…?
நான்; ஒரு டிவிஎஸ் 50 வாங்கி இருக்கிறேன்.எனக்காகவும் என் வண்டிக்காகவும் ஜெபியுங்கள் என்பதா..?
ஒருவேளை அங்கு இருக்கும் பெரும் பணக்காரர்கள் இதை காதில் கேட்டால் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள்…
ஒருவேளை மனதிற்குள் சிரிப்பார்களோ..?
இதற்கெல்லாம் ஒரு ஜெபமா..இதெல்லாம் ஒரு வண்டியா..என்று நினைப்பார்களோ…?
.மணிமுத்து குழம்பினான்…..பேசாமல் ஆலயத்தில் வைத்து பாஸ்டரிடம் பொதுவாக ஜெபிக்க சொல்லலாமே……
தான் வந்தது தவறாகவே தெரிந்து… எதற்கு தேவையில்லாத அவமானம்….என்று நினைத்து மெதுவாக தன் வண்டியை திருப்பினான்.
சீக்கிரமாக இந்த இடத்தை காலி செய்யவேண்டும் என்று வண்டியை ஸ்டார் செய்தான்..
அந்த இரு சக்கர வாகனம் மற்ற சக்கரங்களை விட்டு அவனை வெகு தூரத்திற்கு அழைத்து சென்றது….
மணி முத்துவுக்கு இப்போது சுத்தமாக உற்சாகம் இல்லை…
…நிழலைக் கண்டு பயந்தது ஓடுவது போல இருந்தது….
ரெஜினா கேட்டாள் என்ன பதில் சொல்ல ..
விடை தெரியவில்லை……. …
..சக்கரங்கள் அது பாட்டுக்கு உருண்டு கொண்டே இருந்தது…
 மணிமுத்துவின் முகத்தில் அதிகமான சோகம் மட்டுமே இருந்தது…
(முடிந்தது..)